Ad

திங்கள், 1 பிப்ரவரி, 2021

சென்னை: ஆழ்கடலில் 40 நிமிடங்கள் நடந்த திருமணம் - 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய இன்ஜினீயர்!

திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் சின்னதுரை. கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் ஸ்வேதா. இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள ஐடி நிறுவனங்களில் வேலைபார்த்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணம் செய்ய இருவீட்டினரும் முடிவு செய்தனர். சின்னதுரை கடந்த 12 ஆண்டுகளாக ஆழ்கடலில் நீச்சல் பயிற்சி எடுத்து வந்தார். அதனால், தன்னுடைய திருமணத்தையும் வித்தியாசமாக ஆழ்கடலுக்குள் நடத்த விரும்பினார். தன்னுடைய விருப்பத்தை வருங்கால மனைவி ஸ்வேதா மற்றும் வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்தார். அதற்கு அனைவரும் சம்மதம் தெரிவித்தனர்.

ஆழ்கடலில் திருமணம்

இதையடுத்து ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளரும் தன்னுடைய உறவினருமான அரவிந்தனிடம் தன்னுடைய விருப்பத்தை சின்னத்துரை கூறினார். உடனடியாக ஆழ்கடலில் திருமணத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்தன. அதற்கு முன் ஸ்வேதாவுக்கு ஆழ்கடலில் நீந்துவதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. ஆரம்பத்தில் ஒருவித பயத்துடன் இருந்த ஸ்வேதா, பயிற்சிக்குப் பிறகு தைரியமானார்.

Also Read: `அன்று பல கோடியில் திருமணம்... இன்று 10 கோடிக்குத் திண்டாட்டம்' - பரிதாபத்தில் சுதாகரன்!

இதையடுத்து இன்று காலை இருவருக்கும் நீலாங்கரை பகுதியில் உள்ள வங்காள விரிகுடா ஆழ்கடலில் திருமணம் நடந்தது. இதற்காக மணமக்கள் இருவரும் பாரம்பரியமிக்க உடைகளை அணிந்து, படகு மூலம் ஆழ்கடலுக்குச் சென்றனர். மணமக்களுக்கு ஆக்சிஜன் சிலண்டர் பொருத்தப்பட்டது. கடலின் மேற்பரப்பிலிருந்து சுமார் 60 அடி ஆழத்தில் மணமக்கள் மாலைகளை மாற்றிக் கொண்டனர். மணமகள் ஸ்வேதாவுக்கு சின்னதுரை கடலுக்கு அடியில் தாலி கட்டினார். பின்னர் இருவரும் படகு மூலம் கரைக்கு வந்தனர். கடலுக்குள் நடந்த திருமணத்தை புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.

ஆழ்கடலில் திருமணம்

இதுகுறித்து பயிற்சியாளர் அரவிந்தனிடம் பேசினோம். ``என்னுடைய உறவினர்தான் சின்னத்துரை. அவருக்கும் ஸ்வேதாவுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டதும் இந்தியாவில் முதல் முறையாக ஆழ்கடலில் திருமணத்தை நடத்த முடிவு செய்தோம். ஆழ்கடலில் திருமணத்தை நடத்த வேண்டும் என்றால் கடல் அமைதியாக இருக்க வேண்டும். அதற்காக காத்திருந்தோம். ஜனவரி மாதத்தில் தேதி குறிப்பிடாமல் ஒரு திருமண அழைப்பிதழை அச்சடித்தோம். ஆனால், திருமணத்தை நடத்துவதற்கான சூழல் கடலில் இல்லை. அதன்பிறகு தேதி குறிப்பிடாமல் பிப்ரவரி மாதத்துக்கு ஒரு திருமண அழைப்பிதழை அச்சடித்தோம். இந்தநிலையில் இன்று அதிகாலையில் மீனவர் ஒருவர், கடல் அமைதியாக இருப்பதாக எனக்குத் தகவல் தெரிவித்தார். உடனடியாக திருமணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்தோம்.

இரண்டு படகுகளில் மணமக்களை அழைத்துக் கொண்டு 12 பேர் கடலுக்குள் சென்றோம். கரையிலிருந்து 5 கி.மீட்டர் தூரத்தில் 60 அடி ஆழத்துக்கு 9 பேர் சென்றோம். படகில் 3 பேர் இருந்தனர். அதன்பிறகு ஆழ்கடலில் தென்னை ஓலையைக் கொண்டு மலர்களைக் கொண்டு அலங்கரித்தோம். மலர்கள் மேலே வராமலிருக்க அலுமினிய குண்டுகளை ஒவ்வொரு மலர்களிலும் இணைத்துக் கட்டினோம். அதைப்போல மணமகளின் சேலையிலும் மணமகளின் வேஷ்டியிலும் பேஸ்ட்களை ஒட்டினோம். அடுத்து தாலி மற்றும் மாலையிலும் அலுமினிய குண்டுகளை இணைத்திருந்தோம். நல்ல நேரத்தில் ஆழ்கடலுக்குள் மாலைகளை மணமக்கள் மாற்றிக் கொண்டனர். பின்னர் ஸ்வேதா கழுத்தில் சின்னதுரை தாலி கட்டினார். சுமார் 40 நிமிடங்கள் இந்தத் திருமண நிகழ்வு நடந்தது. மாப்பிள்ளைத் தோழனாக சந்துருவும் மணமகள் தோழியாக தீபிகாவும், அழகுக் கலை நிபுணர், புகைப்பட நிபுணர் ஆகியோரும் திருமணத்தில் கலந்துகொண்டனர்" என்றார்.

சின்னதுரை, ஸ்வேதா

மணமகன் சின்னதுரை கூறுகையில், ``நான் 12 ஆண்டுகளாக நீச்சல் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். ஸ்வேதாவிடம் ஆழ்கடலில் திருமணத்தை நடத்தலாம் என்று கூறியபோது முதலில் தயங்கினார். அதன்பிறகு நீச்சல் குளத்தில் 3 நாள்கள் பயிற்சி கொடுத்தோம். அதன்பிறகு கடலுக்கு அழைத்துச் சென்று பயிற்சி அளித்தோம். அதன்பிறகு என்னை விட ஸ்வேதா தைரியமாகிவிட்டார். எங்கள் திருமணத்தை ஆழ்கடலில் நடத்த இன்னொரு முக்கிய காரணம் ஒன்று இருக்கிறது. பிளாஸ்டிக் மற்றும் சில பொருள்களால் கடல் மாசுபட்டு வருகிறது. மாசுவிலிருந்து கடலைப் பாதுகாக்க வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தத்தான் ஆழ்கடலில் திருமணத்தை நடத்தியிருக்கிறோம். இந்த அனுபவம் வித்தியாசமானது" என்றார்.



source https://www.vikatan.com/lifestyle/miscellaneous/chennai-engineer-speaks-about-his-marriage-held-under-60-feet-in-sea

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக