Ad

வியாழன், 20 மே, 2021

திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ: "நான் அழைக்கப்படாதது எனக்கு அதிர்ச்சி"- திருவாரூர் அரசு விழா சர்ச்சை

'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு திருத்துறைப்பூண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து அழைக்கப்படாதது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குடிசையில் வசிக்கும் மிகவும் எளிமையான எம்.எல்.ஏ என்பதால், திருவாரூர் மாவட்ட நிர்வாகம் இவரை புறக்கணித்ததா என இத்தொகுதி மக்கள் மத்தியில் கடும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.

மாரிமுத்து எம்.எல்.ஏ

தி.மு.க தலைவர் மு,க.ஸ்டாலின் 2021 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது, முதலமைச்சராக தான் பதவியேற்றவுடன், பொதுமக்களின் மனுக்கள் மீது 100 நாட்களில் தீர்வு காணப்படும் எனத் தெரிவித்திருந்தார். திமுக வெற்றிப்பெற்று, மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்றவுடன், அவர் கையெழுத்திட்ட முதல் 5 கோப்புகளில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டமும் இடம்பெற்றிருந்தது. இதற்கென ஒரு புதிய துறை உருவாக்கப்பட்டு, இதனை திறம்பட செயல்படுத்த, சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட்டார்.

திருவாரூர் மாவட்டத்தில் பெறப்பட்ட மனுக்களில், உடனடித் தீர்வு காணப்பட வேண்டிய மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இவ்விழாவில் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சாந்தா ஐ.ஏ.எஸ், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர், எம்.செல்வராஜ் திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன், மன்னார்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா, மாவட்ட ஊராட்சித்தலைவர் கோ.பாலசுப்ரமணியன் மற்றும் அரசு அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டார்கள். ஆனால் இதே திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட, திருத்துறைப்பூண்டி தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ மாரிமுத்து இவ்விழாவிற்கு அழைக்கப்படவில்லை. இது திருத்துறைப்பூண்டி தொகுதி மக்கள் மத்தியிலும், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரிடமும் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மாரிமுத்து எம்.எல்.ஏ-விடம் நாம் பேசியபோது "இது அரசு விழா. இதுக்கு நான் அழைக்கப்படாதது எனக்கும் அதிர்ச்சியாதான் இருந்துச்சு. நான் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ-ங்கறதுனால என்னை இந்த விழாவுக்கு அழைக்கலையானு, திருவாரூர் மாவட்ட ஆட்சியர்கிட்ட கேட்டேன். 'அப்படியெல்லாம் இல்லை. திருத்துறைப்பூண்டி தொகுதியில பயனாளிகள் இல்லாததுனாலதான் உங்களை அழைக்கல. இனிமே இதுமாதிரி தவறு நடக்காமல் எச்சரிக்கையாக இருக்கேன்னு' அவங்க சொன்னாங்க. திருத்துறைப்பூண்டி தொகுதியில பயனாளிகளே இல்லைனு சொல்றது எனக்கு ரொம்பவே ஆச்சரியமாக இருக்கு. இது மிகவும் பின் தங்கிய தொகுதி. முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்தப்ப, நிறைய மக்கள் அவர்கிட்ட மனு கொடுத்திருந்தாங்க. அப்படியிருந்தும் ஏன் இந்த தொகுதியில பயனாளிகளே இல்லைனு ஆச்சரியமாக இருக்கு.’’என்றார்.

மாரிமுத்து

இதுகுறித்து நம்மிடம் பேசிய திருத்துறைப்பூண்டி தொகுதி மக்களில் சிலர் ‘இது தமிழக முதலமைச்சரோட கனவுத் திட்டம். ’இது அரசு விழா. கட்சி பாகுபாடு பார்க்காமல், இந்த மாவட்டத்துல உள்ள எல்லா எம்.எல்.ஏ-க்களும் அழைக்கப்பட்டிருக்கணும். திமுக கூட்டணியிலதான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இருக்கு. கூட்டணி கட்சி எம்.எல்.ஏ-ங்கற அடிப்படையிலாவது எங்க தொகுதி எம்.எல்.ஏ-வை இந்த விழாவுக்கு அழைச்சிருக்கணும். தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் உள்ள தொகுதிகள்ல இருந்து மட்டும் முதல்கட்டமாக, பயனாளிகளை தேர்ந்தெடுத்து, நலத்திட்டங்களை வழங்கியிருக்காங்க. மன்னார்குடி மற்றும் திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இதுல முக்கியத்துவம் கொடுத்திருக்காங்க. இதுவும் கண்டிக்கத்தக்கது. முதலமைச்சருக்கு எல்லா தொகுதியும் பொதுவானதுதான். ஒருவேளை எங்க தொகுதி எம்.எல்.ஏ., பெரிய பணக்காரராக இருந்து ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்திருந்தால் அழைச்சிருப்பாங்களோனு நினைக்கத் தோணுது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இந்த விஷயத்துல கவனமாக இருக்கணும்’’எனத் தெரிவித்தனர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/a-government-function-has-been-held-in-thiruvarur-excluding-the-communist-mla

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக