Ad

ஞாயிறு, 23 மே, 2021

அலோபதி மருத்துவம் பற்றி பாபா ராம்தேவ் சர்ச்சை பேச்சு - மருத்துவர்கள் எதிர்ப்பு; விளக்கமளித்த பதஞ்சலி

நாட்டில் கொரோனாவின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. கடந்த சில வாரங்களில் போடப்பட்ட ஊரடங்கால் நிலைமை சீராகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு சில மாநிலங்களில் மட்டுமே தொற்று பாதிப்பானது கட்டுக்குள் வந்துள்ளதாக தெரிகிறது. அதனால், தொடர்ந்து ஊரடங்கினை நீட்டிக்க பல்வேறு மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன.

இந்த அசாதாரண சூழலிலும், மருத்துவர்களும், செவிலியர்களும் தங்களது உயிரையும் துச்சமென எண்ணி போராடி வருகின்றனர். இந்நிலையில் யோகா பாபா ராம்தேவ் அவர்கள் தனியார் நிறுவன நிகழ்வொன்றில் அலோபதி மருத்துவம் குறித்து பேசிய கருத்துக்களானது மருத்துவர்கள் மத்தியில் மட்டுமல்லாது பொதுவெளியிலும் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி

அதில் அவர் பேசும்போது, ``தற்போது கடைபிடிக்கப்பட்டு வரும் அலோபதி மருத்துவ முறை முற்றிலும் முட்டாள்தனமாது. இந்த பெருந்தொற்று காலத்தில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகள் மக்களின் உயிரைக் காப்பதிலிருந்து தோல்வியடைந்துவிட்டன. அலோபதி மருந்துகளாலும், மருத்துவத்தாலும் லட்சக்கணக்கான உயிர்களை இழந்துள்ளோம். இந்த முறையை முற்றிலும் நீக்கிவிட்டு ஆயுர்வேத முறையை அமல்படுத்த வேண்டும்.” என்று கூறினார். மேலும் அவர் மருத்துவர்களை கொலையாளிகள் என்று சுட்டிக்காட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: "அறமா அமைச்சர்களே?!"- பாபா ராம்தேவின் கொரோனில் மருந்தும், சர்ச்சைகளும்!

இவ்வாறு அவர் பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ``இந்த பெருந்தொற்று காலத்திலும் மருத்துவர்கள் தங்களது உயிரையும் பொருட்படுத்தாது இரவு பகலாக பணிபுரிந்து வருகின்றனர். அலோபதி மருத்துவம் முட்டாள்தனமானது, அது பலரின் உயிரை பறித்துள்ளது என்று தனது விளம்பரத்திற்காக, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் மருத்துவர்கள் மீது பாபா ராம்தேவ் பழி சுமத்துவது வேதனையளிக்கிறது. இதற்கு அவர் உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும். அதுமட்டுமல்லாது, மத்திய நிதி அமைச்சர் டாக்டர். ஹர்ஷ வரதன் இதனை உடனடியாக பரிசீலித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது, பாபா ராம்தேவ் கூறுவது போல் அலோபதி மருத்துவ முறையை முழுவதுமாக நீக்கிவிட்டு, ஆயுர்வேத முறையை அமல்படுத்துங்கள். இல்லையெனில், மருத்துவர்கள் ஆராய்ச்சி குழுவின் சார்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று காரசாரமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாபா ராம்தேவ்

பாபா ராம்தேவின் கருத்துக்களால் சர்ச்சை உருவானதைத் தொடர்ந்து அந்த வீடியோ பதிவிலிருந்து அக்கருத்துக்கள் நீக்கப்பட்டன. இதுகுறித்து விளக்கமளித்துள்ள பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம், ``நாங்கள் என்றும் அலோபதி மருத்துவத்திற்க்கு எதிரானவர்கள் அல்ல. அந்நிகழ்வில் பாபா ராம்தேவ் அவர்கள் தனக்கு வாட்ஸ் ஆப்பில் பரவலாக பகிரப்பட்ட கருத்துகளையே மேடையில் படித்துக் காட்டினார். இதற்கும் அவருக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை. சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் கருத்துக்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது என்பதை தெளிவுபடுத்திக்கொள்கிறோம்” என்கிறது அந்த நிறுவனம்.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம், `பாபா ராம்தேவ் மத்திய பா.ஜ.க. அரசாங்கத்தினருக்கு நெருக்கமாக உள்ளதால் ஆரம்பம் முதலே இது போன்ற தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்திவிட்டு அதிலிருந்து தப்பித்து விடுகிறார். அரசாங்கமும் அதை கண்டுகொள்வதில்லை. இந்த கடினமான காலத்தில் இதுபோன்ற பொய் பரப்புரைகள் செய்து மக்களின் நம்பிக்கையில் விளையாடுவது முற்றிலும் தவறானது’, என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். முன்னதாக கொரோனாவின் முதல் அலையின் போது, பதஞ்சலியின் கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்து என பாபா ராம்தேவ் அறிமுகப்படுத்தி பின் அது தடைசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/news/general-news/patanjali-clarifies-baba-ramdevs-allopathy-views-to-ima

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக