Ad

ஞாயிறு, 2 மே, 2021

சங்கரன்கோவில்: 30 ஆண்டுகளாக அ.தி.மு.கவின் கோட்டை... சரிந்த வரலாறு!

கடந்த முப்பது ஆண்டுகளாக தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலில் யார் அமர்ந்தாலும் சரி சங்கரன்கோவில் (தனி) தொகுதியில் அ.தி.மு.கவின் கொடிதான் பறக்கும். 96 சட்டமன்றத் தேர்தலில், அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர், ஜெயலலிதாவே பர்கூரில் தோற்ற போதும், தமிழகத்தின் நான்கு தொகுதிகளில் அந்தக் கட்சி வென்ற போதும் அதில் ஒரு தொகுதியாக சங்கரன்கோயில் இருந்தது. அந்தளவுக்கு அ.தி.மு.கவின் கோட்டை என்றே சங்கரன்கோவிலை நாம் வர்ணிக்க முடியும். ஆனால், இந்த முறை, தி.மு.கவிடம் 11,297 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறது அ.தி.மு.க

அமைச்சர் ராஜலஎட்சுமி

அ.தி.மு.க சார்பில், கடந்த முறை இதே தொகுதியில் போட்டியிட்டு அமைச்சரான ராஜலெட்சுமி மீண்டும் போட்டியிட்டார். தி.மு.க சார்பில் ராஜா போட்டியிட்டார். இந்தத் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2,52,939 பேர். இந்தத் தொகுதியில் 71 சதவிகித வாக்குகள் பதிவாகின. நேற்று வெளியான தேர்தல் முடிவுகளில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட ராஜா, 71,347 வாக்குகளையும் அமைச்சர் ராஜலெட்சுமி 60,050 வாக்குகளையும் பெற்று தோல்வியைத் தழுவினார்.

Also Read: நெல்லையில் தீபாவளி கதர் விற்பனை இலக்கு ரூ. 56 லட்சம்! - அமைச்சர் ராஜலெட்சுமி தகவல்

தேர்தல் பிரசாரத்துக்குச் செல்லும்போதே, வன்னியர்களுக்கான 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டைக் காரணம் காட்டி, அமைச்சர் ராஜலெட்சுமிக்கு பலத்த எதிர்ப்புக் கிளம்பியது. குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்துதரவில்லை எனவும் பல ஊர்களில் ஊருக்குள் வர விடாமல் மக்கள் போராட்டம் நடத்தினர். அதுமட்டுமல்ல, இந்தத் தொகுதியில், அ.ம.மு.க சார்பில் போட்டியிட்ட அண்ணாதுரை, 22,682 வாக்குகளைப் பெற்றதும் ராஜலெட்சுமியின் தோல்விக்குக் காரணமாக அமைந்துவிட்டது.

1989 அ.தி.மு.க இரண்டாகப் பிளவுபட்டு போட்டியிட்ட தேர்தலுக்கு முந்தைய இரண்டு தேர்தல்களிலும் இங்கு அ.தி.மு.கதான் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/sankarankovil-fort-of-admk-for-30-years-lost-in-this-election

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக