Ad

புதன், 19 மே, 2021

ஊழிக்காலம் - 18 | மரங்களை நடுவதால் மட்டுமே காலநிலைப் பேரிடர்களைத் தடுக்க முடியுமா?

குறிப்பு: காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் மரங்களின் பங்களிப்பை முன்வைத்து மட்டுமே கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இது பொதுவான சூழல் மேம்பாட்டுக்கு மரம் நடுவதைப் பற்றிய கட்டுரை அல்ல. காற்றில் உமிழப்படும் கரிமங்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கை, அதாவது 30% கரிம உமிழ்வுகளைக் காடுகள் உறிஞ்சிக்கொள்கின்றன. வெப்பமண்டலக் காடுகள் அழிவதால் மட்டுமே வருடத்துக்கு ஐந்து பில்லியன் டன் கரியமில வாயு உமிழப்படுகிறது. ஆக, எப்படிப்பார்த்தாலும் கரிம உமிழ்வுகளைக் கட்டுப்படுத்துவதில் காடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இதுபோன்ற தரவுகள் எல்லாம் வருவதற்கு முன்பே "மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்" போன்ற வாசகங்களை நாம் கேட்டிருப்போம். மரங்கள் நடுவதால் மண் அரிப்பைத் தடுத்தல், பறவைகள்/விலங்கினங்களுக்கு வாழிடம், நிழல் தருதல், நீர் சுழற்சியை நெறிப்படுத்துதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்ததுதான்.

மரங்கள்

ஒவ்வொரு வருடமும் 73 லட்சம் காடுகள் அழிக்கப்படுகின்றன. இதுவரை புவியில் இருந்த பாதிக்கும் மேற்பட்ட வெப்பமண்டலக் காடுகள் அழிந்துவிட்டன. ஒவ்வொரு ஆறு விநாடிக்கும் ஒரு கால்பந்து மைதானம் அளவுக்குப் பரப்புள்ள வெப்பமண்டலக் காடுகள் அழிக்கப்படுகின்றன. இதுபோன்ற புள்ளிவிவரங்களையும் கரிம உமிழ்வுகளைக் கட்டுப்படுத்துவதில் காடுகளின் பங்களிப்பையும் சேர்த்துவைத்துப் பார்க்கும்போது நமக்கு ஒன்று தெளிவாகப் புலப்படுகிறது - மரங்கள் நடுவது அவசியம். காடுகளை அழித்தால் காலநிலை சீர்கெடும் என்றால், மரங்கள் நட்டால் காலநிலை சரியாகிவிடும் என்பதுதானே சரி?

இதற்கான பதில் அத்தனை எளிதானது அல்ல. காடுகளை அழிப்பதற்கான எதிர்ப்பதம் மரம் நடுவது அல்ல. காடுகள் வெட்டப்பட்ட இடத்திலேயே மரங்களை நடுவது (Reforestation), காடுகளை மீட்டுருவாக்கம் செய்வது (Forest restoration), பொதுவாக மரம் நடுதல் (Afforestation) என்று இதில் பல வகைமைகள் உண்டு. கேட்பதற்கு எல்லாமே ஒன்றுபோலத் தெரிந்தாலும் சூழலியல் ரீதியாக இவற்றின் பயன்கள் வேறு. காடுகளை மீட்டுருவாக்கம் செய்வதுதான் இருப்பதிலேயே சிறந்த அணுகுமுறை. காடுகள் அழிக்கப்பட்ட இடங்களில் மரம் நடுவதால் ஓரளவு நன்மை இருக்கும். பொதுவாக மரங்கள் நடப்படுவதால் கிடைக்கும் காலநிலைத் தீர்வு குறைவு.

புவியில் 2.2 பில்லியன் ஏக்கர் அளவில் காடுகள், அதாவது இப்போது இருக்கும் அளவை விட 25% அதிகக் காடுகள் இருந்தால் காலநிலை மாற்றத்தை ஓரளவு கட்டுப்படுத்தலாம் என்று ஒரு புள்ளிவிவரம் உண்டு. ஆனால் இது வெளியிடப்பட்டபோதே கடும் சர்ச்சைக்கு உள்ளானது. 2.2 பில்லியன் ஏக்கர் நிலத்துக்கு எங்கே போவது? எல்லா இடங்களிலும் காடுகள் செழித்து வளரும் அளவுக்கு நிலத்தில் உயிர்ச்சத்து இருக்கிறதா? தவிர, காடுகள் தவிர பிற வாழிடங்களின் கரிம உறிஞ்சுதன்மையை இந்தத் தரவு முற்றிலுமாக நிராகரிக்கிறது.

கானமயில் (The Great Indian Bustard)

இதை சற்று விளக்கமாகவே பார்க்கலாம். ஆப்பிரிக்காவின் சவானா புல்வெளிகள், ப்ரேசிலின் காம்போஸ் புல்வெளிகள், அர்ஜண்டினாவின் பாம்பாஸ் புல்வெளிகள், ஆசியாவின் ஸ்டெப்பி புல்வெளிகள், தென்னாப்பிரிக்காவின் ஸ்டெப்பி புல்வெளிகள் என்று நீளுகிற ஒரு பட்டியலை பள்ளிப்பாடங்களில் படித்திருப்போம். இவை சும்மா அழகுக்காக நாம் வளர்க்கும் பச்சைப் புல்வெளிகள் அல்ல. இவை தனிச்சிறப்பு மிக்க வாழிடங்கள், இந்த புல்வெளிகளையே நம்பியிருக்கும் உயிரிகளும் மேய்ச்சல் இனக்குழுக்களும் உண்டு. ஆப்பிரிக்கா என்றவுடன் குதித்தோடும் வரிக்குதிரைகளும் சிங்கக்கூட்டங்களுமாக நமக்குள் ஒரு சித்திரம் விரிகிறதே.... அதன் அடிப்படை ஒரு புல்வெளி வாழிடம்தான்.

மத்திய இந்தியாவிலும் இதுபோன்ற புல்வெளிகள் உண்டு. இவற்றை நம்பியிருக்கும் மேய்ச்சல் இனக்குழுக்களும் உண்டு. இந்த புல்வெளியில் இருக்கும் தாவரங்களில், C4 என்று அழைக்கப்படும் ஒருவகை ஒளிச்சேர்க்கை நடக்கிறது. மரங்களின் நிழல் இருந்தால் அது நடக்காது! நிழல் இல்லாத இடத்தில் மட்டுமே இந்தத் தாவரங்கள் செழித்து வளரும். கானமயில் (The Great Indian Bustard) போன்ற பல அரிய உயிரிகளுக்கான வாழிடம் இது.

இதுபோன்ற ஒரு தனிச்சிறப்புள்ள வாழிடத்தை அழித்துவிட்டு அங்கே மரம் நட்டால் என்னவாகும்? கானமயில் போன்ற உயிரிகள் அழியும், புல்வெளித் தாவரங்கள் அழியும். அந்த மண்ணின் தன்மைக்குக் காடுகள் வளருமா என்பதே சந்தேகம்தான்.
ஒருவேளை வளர்ந்துவிட்டால் அது நன்மைதானே என்று தோன்றுகிறது, இல்லையா?

இல்லை என்று மறுக்கிறார்கள் புல்வெளிகளை ஆராய்ந்துவரும் சூழலியலாளர்கள். இயற்கையாகவே புல்வெளிகள் இருக்கும் இடத்தில் அதிகமான கரிம உறிஞ்சுதன்மை உண்டு. புல்வெளித் தாவரங்கள் கரிமத்தை உறிஞ்சி மண்ணுக்குள் செலுத்துகின்றன. ஆனால் மரங்களோ, அந்தக் கரிமத்தைத் தங்கள் உடலுக்குள் சேமித்து வைத்திருக்கின்றன. ஒருவேளை புல்வெளிகள் அழிந்தால்கூட, அங்கே இருக்கும் கரிமம் வெளியில் வராது. ஆனால், மரங்கள் வெட்டப்பட்டாலோ, காட்டுத்தீ ஏற்பட்டாலோ, உள்ளே இருக்கும் கரிமம் மீண்டும் காற்றுக்குள் கலந்துவிடும்! ஆகவே, புல்வெளியாக இருந்த இடத்தில் மரம் நட்டு வளர்த்தால் அது காலநிலைத் தீர்வைப் பொறுத்தவரை நிகர இழப்புதான்!

காட்டுத்தீ

ஒரு இடம், முன்பு காடாக இருந்து சிதைந்துபோனதா அல்லது எப்போதுமே புல்வெளியாக மட்டுமே இருந்திருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். ஏற்கனவே சரியான வாழிடமாக இருக்கும் இடங்களில் அந்தத் தாவரங்களை அழித்துவிட்டு மரம் நடுவது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும்.

புல்வெளியாகவோ புதர்க்காடாகவோ இல்லாத பகுதியில் மரம் நடுவது நல்லதுதானே?

அந்த நிலம் எப்படிப்பட்டது, அதில் எப்படிப்பட்ட மரங்களை நாம் நடுகிறோம் என்பதைப் பொறுத்தது அது. வறண்ட பகுதிகளில் நீர் உறிஞ்சும் மரங்களை நடுவது ஏற்கனவே இருக்கும் பிரச்சனையை அதிகப்படுத்தும். ஆகவே நிலத்தின் தன்மையை முதலில் நாம் அறிந்துகொள்ளவேண்டும். அதற்கு ஏற்ற மரங்களை நடவேண்டும்.

ஒரு வகை மரத்தை மட்டுமே (Monoculture) நடுவதும் ஏற்றதல்ல. உள்ளூர்ப் பெரியவர்களிடம் பேசி, முன்பு அங்கே எதுமாதிரியான நாட்டு மரங்கள் இருந்தன என்பதைத் தெரிந்துகொண்டால், அந்த மண்ணில் எது நன்றாக வளரும் என்பதும் புலப்படும். பல்வேறு நாட்டு மரங்களைக் கலந்து நடவேண்டும். மரம் நடுவதோடு நம் கடமை முடிந்துவிடுவதில்லை. அதைத் தொடர்ந்து பராமரிக்கவேண்டும். 2017ல் இலங்கையில் நடந்த ஒரு ஆய்வில், ஒரு குறிப்பிட்ட மரம் நடும் இயக்கத்தில் நடப்பட்ட மொத்த மரங்களில் 20% மட்டுமே பிழைத்தன என்று கூறப்படுகிறது! இதுபோன்ற சறுக்கல்கள் நிகழாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். மரங்களை பராமரிக்கும் பணியில் உள்ளூர் மக்களை ஈடுபடுத்திக்கொள்ளலாம்.

சாலை விரிவாக்கம் மற்றும் பிற பணிகளுக்காக காடுகள் அழிக்கப்படும்போது, வேறு ஒரு இடத்தில் மரங்களை நட்டு அதை சமன்படுத்தும் முயற்சி (Restorative afforestation) சில வருடங்களாக வழக்கமாகிவிட்டது. ஆனால், பத்து ஏக்கர் காடுகளை அழித்துவிட்டால் பத்து ஏக்கருக்கு மரம் நடலாம் என்பதுபோன்ற எளிய சமன்பாட்டுக்குள் இயற்கையை அடக்கிவிடமுடியாது. மரக்கன்றுகள் வளர்ந்தபின்னரே கரிம உறிஞ்சுதல் போதுமான அளவில் நடக்கும்.

மரக்கன்று

தவிர, பல நூறு ஆண்டுகளாக உருவாகி உயிர்த்து ஒரு சிக்கலான உணவுச்சங்கிலியைத் தனக்குள் கொண்ட ஒரு காடு பல்வேறு வகையிலும் காலநிலை மாற்றத்துக்கு எதிராக செயலாற்றும். வேறொரு இடத்தில் சில மரக்கன்றுகளை நட்டுவைத்து அதை ஒருநாளில் மீட்டுருவாக்கம் செய்துவிடமுடியாது.

காடுகளை உருவாக்கும் முயற்சிகளும் அறிவியல் அடிப்படையில் செய்யப்படவேண்டும். ஒரு குறிப்பிட்ட இடத்தில் மரம் தேவையா? அந்த இடத்தில் ஏற்கனவே ஒரு வாழிடம் இருக்கிறதா? எப்படிப்பட்ட மரம் வளரும்? அவற்றை யார் பராமரிப்பார்கள் போன்ற கேள்விகளுக்கு விடை கிடைத்தால் மட்டுமே அதை செய்ய வேண்டும். தவிர, இதுபோன்று உருவாக்கப்படும் காடுகளுக்கு சட்டரீதியான பாதுகாப்பு இருக்கிறதா என்பதும் ஒரு முக்கியமான கேள்வி. அதை உலக நாடுகள் தயக்கத்துடன் எதிர்கொள்கின்றன.

மரங்களை நடுவதும் காடுகளை மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சிகளும் காலநிலைத் தீர்வில் ஒரு பகுதிதான். அது மட்டுமே தீர்வாகிவிடாது. இதில் இன்னொரு அவலம், தொடர்ந்து பல்வேறு காரணங்களுக்காக அழிக்கப்படும் காடுகளைப் பற்றிப் பெரிதாகப் பேசாமல், மரம் நடுவதைப் பற்றி மட்டுமே அதிகம் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதுதான். புதிதாக மரங்களை நடுவதற்கு முன்பாக, காடழிப்பைத் தடுத்தாலே காலநிலை மாற்றம் என்கிற சக்கரத்தின் வேகம் கொஞ்சம் குறையும். காட்டுத்தீயை மேலாண்மை செய்து விரைவில் நிறுத்துவது, கூடிய வரையில் காட்டுத்தீயைத் தடுப்பது, எந்த முக்கியமான தேவையாக இருந்தாலும் காடுகள் அழிக்கப்பட்டக்கூடாது என்பதில் உறுதியான நிலைப்பாட்டை அரசுகள் எடுப்பது ஆகியவை அவசரத் தேவைகள்.

காடுகள்
காடுகள் அழிக்கப்படுவதற்குப் பின்னால் உள்ள அரசியல், பெருநிறுவனங்களின் லாபி போன்ற பலவும் விவாதிக்கப்படவேண்டும். உலக நாடுகளின் அரசுகள் அதை விவாதிப்பதில் பெரும் தயக்கம் காட்டுகின்றன. ஆகவே, "2025க்குள் நூறு கோடி மரங்கள் நடுவோம்" என்பதுபோன்ற அறைகூவல்களோடு மட்டுமே நம்மை ஆசுவாசப்படுத்த முயற்சி செய்கின்றன.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், "மரங்கள் நடுவதால் காலநிலை மாற்றத்துக்குத் தீர்வு காண முடியுமா?" என்று கேட்டால், "மரம் நடுவதால் அல்ல, காடுகளை மீட்டுருவாக்கம் செய்வதால் காலநிலை மாற்றத்தை ஓரளவு எதிர்கொள்ள முடியும்" என்று பதிலளிக்கிறார்கள் சூழலியலாளர்கள்.

காலநிலைத் தீர்வுகளில் மரம் நடுவதைத் தவிர வேறு தனிமனிதப் பங்களிப்புகள் உள்ளனவா? அவை என்ன?

- Warming Up...



source https://www.vikatan.com/government-and-politics/environment/is-tree-planting-a-solution-to-climate-change

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக