வெந்ததையும் வேகாததையும் சாப்பிட்டு வாரம் முழுக்க எந்திர கதியில் ஓடும் எல்லோருக்கும் `ஒரு நாளாவது சத்தானதா, ஆரோக்கியமானதா சமைச்சு ஆற, அமர சாப்பிடணும்' என்ற எண்ணம் இருக்கும். வார நாள்களில் அதற்கு வாய்ப்பே இல்லையே ராஜா என்பவர்கள் வீக் எண்டில் வித்தியாச மெனுவை முயற்சி செய்யலாம்.
அப்படி நீங்கள் முயற்சி செய்யும் புதுப்புது அயிட்டங்கள் உங்களுக்குப் பிடித்துப்போனால், அவற்றை வார நாள்களில் உங்கள் ரெகுலர் மெனுவில் சேர்க்கலாம். அப்புறமென்ன... எல்லா நாளும் ஆரோக்கியம் உங்கள் வசம்...
இந்த வீக் எண்டுக்கான ஹெல்தி ரெசிப்பீஸ் டிரை பண்ணுவோமா?
தேவையானவை:
அவகாடோ (டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர்களில் கிடைக்கும்) - ஒன்று
மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் - ஒன்று
மீடியம் சைஸ் தக்காளி - ஒன்று
மிளகுத்தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
ஆலிவ் ஆயில் - ஒரு டேபிள்ஸ்பூன்
பிரெட் ஸ்லைஸ் - 8
வெண்ணெய் அல்லது நெய் - டோஸ்ட் செய்ய
செய்முறை:
வெங்காயத்தை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். அவகாடோ தோலை நீக்கி உள்ளே உள்ள சதைப்பகுதிகளைத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். ஒரு பவுலில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகுத்தூள், உப்பு, அவகாடோ, ஆலிவ் ஆயில் சேர்த்துப் பிசிறி வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு தவாவை வைத்து, சிறிது நெய் அல்லது வெண்ணெய் விட்டு, அதில் பிரெட் ஸ்லைஸ்களை வைத்து இருபுறமும் கோல்டன் பிரவுன் நிறம் வரை டோஸ்ட் செய்து எடுங்கள். இரண்டு பிரெட்களுக்கு நடுவே அவகாடோ கலவையை வைத்து சாண்ட்விச்சாகப் பரிமாறுங்கள்.
தேவையானவை:
பொன்னி அரிசி - 2 கப்
உளுந்து - அரை கப்
ஓமம் - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
அரிசி மற்றும் உளுந்தைக் கழுவி தனித்தனியாக நான்கு முதல் ஐந்து மணி நேரம் ஊற வையுங்கள். கறிவேப்பிலையை நன்கு கழுவிக் கொள்ளுங்கள். உளுந்தையும் அரிசியையும் தனித்தனியாக தண்ணீர் விட்டு அரைத்து, இரண்டையும் ஒரு பெரிய பாத்திரத்தில் விட்டு உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். கறிவேப்பிலை, ஓமம் இரண்டையும் சேர்த்து மைய அரைத்து மாவோடு கலந்து கொள்ளுங்கள். இந்த மாவுக் கலவையை எட்டு முதல் பத்து மணி நேரம் மூடி புளி விடுங்கள்.
தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு மாவு ஊற்றி தோசையாக வார்த்து, அதை ஒரு மூடியால் இரண்டு முதல் மூன்று நிமிட நேரம் வேக விடுங்கள். கிரிஸ்பியாக வெந்திருக்கும் இந்தத் தோசையை மறுபுறம் திருப்பி வேக வைக்க வேண்டும் என்பதில்லை. சட்னியோடு பரிமாறுங்கள்.
தேவையானவை:
பச்சரிசி குருணை அரிசி - 1/2 கப்
தினை - 1/2 கப்
பாசிப்பருப்பு - 1/4 கப்
முளைக்கட்டிய பாசிப்பயறு - 1/2 கப்
சின்ன வெங்காயம் - 1/4 கப்
நறுக்கிய தக்காளி - அரை கப்
மிளகு -1 டீஸ்பூன்
சீரகம் -1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
பட்டை - 1
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
சாம்பார் பொடி - ஒன்றரை டீஸ்பூன்
கொத்துமல்லித்தழை - தேவையான அளவு
செய்முறை
தினை மற்றும் பச்சரிசிக் குருணையை 20 நிமிடங்கள் தண்ணீர் ஊற்றி ஊற வையுங்கள். குக்கரில் பாசிப்பருப்பு, முளைக்கட்டிய பாசிப்பயறு, மஞ்சள்தூள், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து இரண்டரை கப் தண்ணீரை ஊற்றி குக்கரை மூடி விசில் போட்டு மிதமான தீயில் பத்து முதல் பதினைந்து நிமிடம் வேக வைக்கவும். வெந்ததும் அப்படியே ஆற விடுங்கள். அடுப்பில் ஒரு கடாயை வைத்து, சூடானதும் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு, மிளகு, பட்டை, கறிவேப்பிலை, சீரகம், காய்ந்த மிளகாய், வெந்தயம் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து அவை நன்றாகப் பொரிந்ததும், நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வெங்காயத்தின் நிறம் மாறியதும் நறுக்கிய தக்காளி, சாம்பார் பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்குங்கள். வெந்த அரிசி கலவையை இதனுடன் சேர்த்து நன்கு கிளறி கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
source https://www.vikatan.com/food/recipes/avocado-sandwich-curry-leaves-dosa-and-healthy-bela-bath-weekend-recipes
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக