Ad

சனி, 6 பிப்ரவரி, 2021

ஏமன் போர்: செளதி அரேபியாவுக்கான ஆதரவை வாபஸ் வாங்கும் அமெரிக்க பைடன் அரசு - என்ன நடக்கிறது?

ஜனவரி மாதம் அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பிறகு, அவர் வெளியிடப்போகும், அறிவிப்புகள் மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் குறித்து உன்னிப்பாக கவனிக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகள் குறித்த முக்கியமான ஒரு அறிவிப்பை ஜோ பைடன் வெளியிட்டுள்ளார்.

பைடனின் முடிவுகள் டிரம்பின் முடிவுகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் என அனைவருக்கும் தெரிந்திருந்தது. பைடனின் சமீபத்திய அந்த முடிவு அதற்கு சாட்சியாக வெளியிடப்பட்டுள்ளது.

வெளியுறவுக் கொள்கைகள் குறித்து பைடன் ஆற்றிய உரையில் தெரிவிக்கப்பட்ட முக்கியமான ஒன்று, ஏமன் போருக்கு அமெரிக்கா அளித்து வரும் ஆதரவை திரும்ப பெறுவது என்பது. கிட்டதட்ட ஒரு லட்சத்துக்கும் அதிகமானோரின் உயிரிழப்புக்குக் காரணமான, பல குழந்தைகள் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்குப் பட்டினியால் வாட காரணமான அதே ஏமன் போருக்குத்தான் அமெரிக்கா ஆதரவு வழங்குவதை நிறுத்துவதாகத் தெரிவித்திருக்கிறார் ஜோ பைடன்.

போரை நிறுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது அதுதானே செய்தி என்று நீங்கள் கேட்டால் ஆம் அதுதான் இதில் தெரியக்கூடிய முதன்மை செய்தி, ஆனால் பின்னோட்டத்தில் இதற்குக் கிளைகளாகப் பல செய்திகள் மறைந்திருக்கின்றன என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு முதலில் நாம் ஏமன் போர் குறித்து பேச வேண்டும்.

ஏமன் உள்நாட்டு போர்

ஏமனின் உள்நாட்டு போர் என்பது செளதி தலைமையில் அதன் கூட்டணி நாடுகள் மற்றும் யேமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு இடையில் நடந்து வருகிறது. இதில் செளதி அரேபியாவின் எதிரி நாடான இரான் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. அமெரிக்கா இதில் செளதி அரேபியாவிற்கு ஆதரவளித்து வருகிறது. இருப்பினும் இது மறைமுகமாக இரான் மற்றும் செளதி அரேபியாவுக்கு நடக்கும் போராகவே பலரால் கருதப்படுகிறது.

இந்த போரின் ஆணி வேரைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் கிட்டதட்ட இருபது ஆண்டுகாலம் இரானின் அதிபராக இருந்த அலி அப்துல்லா சலே குறித்து பேச வேண்டும். 1990ஆம் ஆண்டிலிருந்து ஏமனின் அதிபராக இருந்த இவர் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற `அரபு வசந்தம்` என்று கூறப்படுகிற அரபு நாடுகளில் ஏற்பட்ட புரட்சிக்கு பிறகு ஆட்சியிலிருந்து நீக்கப்படுகிறார். பின்பு செளதி அரேபியா மற்றும் வளைகுடா நாடுகள் ஒத்துழைப்பு கவுன்சிலின் முயற்சியில் புதிய அதிபராக மன்சூ ஹடி பதவியேற்கிறார். அதே சமயம் தாங்கள் ஓரங்கட்டப்படுவதாக ஏமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள் நினைக்கின்றனர். ஏமனில் நடைபெற்ற புரட்சியில் பங்கேடுத்து சலேவின் ஆட்சியை கவிழ்ப்பதற்கான முக்கிய காரணமாக இருந்தவர்கள் இவர்கள்.

ஆனால் புதிய ஆட்சியின் மீது இருந்த அதிருப்தியில் ஒரு கட்டத்தில் சலேவுடன் இணைகிறார்கள். பின்னாளில் அவர் தன் நிலையை மாற்றுவதாக கூறியவுடன் அவரை கொன்றுவிடுகிறார்கள் இது வேறு ஒரு கிளைக்கதை.

மீண்டும் ஏமன் போருக்கு வருவோம். 2014ஆண்டு புதிய அதிபரான ஹடிக்கு போர்க்கொடி தூக்கிய ஹூதி கிளர்ச்சியாளர்கள் முன்னாள் அதிபர் சலேவுடன் சேர்ந்து ஏமன் தலைநகர் சனாவை கைப்பற்றுகிறார்கள். அப்போது அதிபராக இருக்கும் ஹடி சவுதி அரேபியாவுக்கு தப்பிச் செல்கிறார். இங்கிருந்துதான் தொடங்குகிறது ஏமன் உள்நாட்டு போர்.
இதற்கு பிறகு ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஒருபுறமும், ஏமன் அரசுக்கு ஆதரவாக செளதி தலைமையிலான படைகள் ஒரு புறமும் யேமனில் போரிட்டு வருகின்றனர்.
இந்த போர் மத்திய கிழக்கின் மிக ஏழ்மையான நாடாக யேமனை மாற்றியுள்ளது.

செளதி அரேபியா மற்றும் இரான்

முன்பே கூறியது போல இது யேமனில் நடக்கும் போர் என்றாலும், திரை மறைவில் இது இரானுக்கும் செளதிக்கும் இடையே நடைபெறும் போராகவே பலர் கருதுகின்றனர். இதுகுறித்து புரிந்து கொள்ள நாம் இரான் மற்றும் செளதி அரேபியாவுக்கு இடையே இருக்கும் போதலுக்கான காரணம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

பொது சம பலத்தில் இருக்கும் இருவருக்கும் ஒரு அதிகார சண்டையாகக்கூட இதனை பார்க்கலாம்.

அடிப்படையில் செளதி அரேபியாவுக்கும் இரானுக்குமான போர் என்பது மத்திய கிழக்கில் யார் ஆதிக்கம் செலுத்துவது என்ற போட்டியே.

அந்த பிராந்தியத்தில் இருபெரும் எதிரி நாடுகளாக செளதி அரேபியாவும், இரானும் உள்ளனர். இரு நாடுகளிடத்திலும் எண்ணெய் வளம் நிறைந்துள்ளது.

இந்த இருநாடுகளுக்கு இடையே உள்ள இந்த மோதல் தன்மைக்கு இரு நாடுகளில் உள்ள மத பிரிவும் காரணம்.

இரானில் ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். செளதியில் சன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.

அரசக் குடும்பத்தால் ஆளப்படும் செளதி அரேபியாவில் இஸ்லாம் பிறந்ததாகவும் கூறப்படுகிறது. உலகளவில் எண்ணை ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கும் ஒரு நாடு. முஸ்லிம் நாடுகளின் அரசன் தான் தான் என்ற நினைப்பில் இருந்த செளதி அரேபியாவுக்கு 1979ஆம் ஆண்டு இரானில் நடைபெற்ற இஸ்லாமிய புரட்சி சவாலாக அமைந்தது.

ஆம் இந்த இஸ்லாமிய புரட்சி என்பது, இரானில் ஆட்சி செய்து வந்த பஹலவி அரச ராஜியத்திற்கு எதிராக நடைபெற்றது. அந்த புரட்சியில் ராஜாங்க அரசு தூக்கி எறியப்பட்டு, இரானின் அதிஉயர் தலைவர் என்று அழைக்கப்படுகிற அயதுல்லா கமேனியின் தலைமையில் இஸ்லாமிய குடியரசு ஆட்சி அமைந்தது. சரி இதற்கும் செளதி அரேபியாவிற்கு என்ன தொடர்பு என்ற கேள்வி எழுலாம். புதியதாக அமைந்த அயதுல்லா கமேனியின் அந்த ஆட்சி தனது எல்லைகளை தாண்டியும் அதை விரிவுப்படுத்த வேண்டும் என்ற கொள்கையை கொண்ட இடத்தில்தான் செளதி அரேபியா இந்த காட்சிக்குள் நுழைகிறது.

செளதியின் கூட்டாளி அமெரிக்கா

ஏமன் போரில் செளதி, இரானுக்கு அடுத்தபடியாக முக்கிய பங்கு வகிக்கும் நாடு அமெரிக்கா. செளதி அரேபியா மற்றும் அமெரிக்காவும் நட்பு நாடுகள். இதை எதிரிக்கு எதிரி நண்பன் என்ற சொலவடைக்கு அமையவும் பொருத்தி பார்க்கலாம். ஆம் இரு நாடுகளுக்கும் எதிரியாக இருப்பது இரான். அமெரிக்கா மற்றும் இரானுக்கு இடையேயான அந்த விரிசல் என்பது 1953ஆம் ஆண்டில் தொடங்கியது.

இரானில் 1953ஆம் ஆண்டில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதமர் முகமது மொசாடக், எண்ணெய் வளத்தை தேசியமயமாக்க நினைத்தபோது அவரின் ஆட்சியைக் கவிழ்த்து முகமது ரெசா ஷாவுக்கு ஆதரவாக இருந்து ஷாவை பதவியில் அமர செய்தது அமெரிக்கா மற்றும் பிரிட்டன். அதன்பிறகு 1979ஆம் ஆண்டில் நடைபெற்ற இரான் புரட்சி வரை ரெசா ஷாதான் அங்கு ஆட்சியில் இருந்தார்.

சமீபத்தில்கூட இரான் புரட்சிகர ராணுவ தலைவர் காசெம் சுலேமானி அமெரிக்காவால் கொல்லப்பட்டார். இது இருநாடுகளுக்கும் இடையேயான பதற்றத்தை அதிகரித்ததோடு போர் ஏற்படுமோ என்ற அச்சத்தையும் கூட்டியிருந்தது குறிப்பிட்த்தக்கது.

Also Read: பசியில் வாடும் ஏமன் குழந்தைகளும் சவுதி அரேபியா-அமெரிக்க உறவும்! #VikatanInfographics

செளதி மற்றும் அமெரிக்கா இருநாடுகளும் 1930களிலிருந்து ராஜரீக உறவுகளை பேணி வருகின்றன. அமெரிக்கா செளதி அரேபியாவை தனது முக்கிய கூட்டணி நாடாகவே கருதி வருகிறது. மேலும் அமெரிக்கா தனது ஆயுதங்களை செளதி அரேபியாவில் இறக்குமதி செய்து வருகிறது. ஏமன் போர் சமயத்தில் செளதி அரேபியா மிகப்பெரிய அளவில் ஆயுதங்கள் வாங்கி குவித்திருப்பதாக பல அறிக்கைகள் தெரிவிக்கின்றன. டிரம்ப் செளதி மீது கடுமை காட்டாததற்கு இதுவும் ஒரு காரணமாக கூறப்பட்டது.
டிரம்ப்பின் ஆட்சிக்காலத்தில் செளதி அரேபியாவுக்கு அவர் தீவிர ஆதரவை தெரிவித்து வந்தார்.

2018ஆம் ஆண்டு இஸ்தான்புல்லில் உள்ள செளதி தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொல்லப்பட்டதில் செளதி அரச குடும்பத்தினரின் பங்கு உள்ளது என்று கூறப்பட்டது. சர்வதேச கண்டனங்கள் வலுத்தநிலையில் ஒரு கட்டத்தில் செளதி அரேபிய அரசுக்கு எதிராக பேசும் நிலைக்கு அமெரிக்கா வந்தது.

செளதி அரசக் குடும்பம் கஷோக்ஜியின் கொலையில் ஈடுபட்டிருந்தால் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்றும் கூட டிரம்ப் தெரிவித்திருந்தார். இருப்பினும் செளதி மற்றும் அமெரிக்காவுக்கு இடையே உறவில் எந்த விரிசலும் ஏற்படவில்லை.
ஜமால் கஷோக்ஜியின் கொலை குறித்து மட்டுமல்ல செளதி அரேபியாவில் நடக்கும் மனித உரிமை மீறல் செயல்களுக்கும் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.

Also Read: `உள்நாட்டு போருக்கும் காலராவுக்கும் பலியாகும் உயிர்கள்...’ - கொரோனாவை எதிர்கொள்ளுமா ஏமன்?

ஏமன் போர் கொடூரங்கள்

கிட்டதட்ட ஆறு வருடங்கள் ஒரு நாட்டில் கடுமையான ஒரு போர் ஒன்று நிகழ்ந்தால் அங்கு என்னென்ன அவலங்கள் நேரக்கூடும் என்பதற்கு பெரிய விளக்கங்கள் ஏதும் தேவையில்லை. தீராத நோய்த்தொற்று, பசி, பஞ்சம், பாதுகாப்பற்ற தன்மை இதுதான் ஏமன் மக்களின் வாழ்க்கை.

கொரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் ஆட்டம் கண்டிருந்தாலும் யேமனில் அது நிலையை கொடுமையாக்கியது என்றே கூற வேண்டும். ஏற்கனவே அங்கே பட்டினியும் பஞ்சமும் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கும் சூழலில்தான் எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றுவதுபோல கொரோனாவும் வந்து சேர்ந்தது.

சுத்தமான நீர் கிடைக்காத ஒரு தருவாயில் வைரஸை தடுப்பதற்கு அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய அந்த நாட்டின் மக்கள் எங்கே போவார்கள்? அங்கே போரிடும் இருதரப்புகளுமே உணவு, மருந்து என அந்த மக்களுக்கு தேவையான உதவிகள் கொண்டு செல்லும் பாதைகளையும் மார்க்கங்களையும் முடக்கியுள்ளது. கொரோனா இந்த உலகில் கால் பதிப்பதற்கு முன்னரே அங்கு மில்லியன் கணக்கான மக்கள் உதவிகளை நம்பிதான் வாழ்கிறார்கள் என ஐநா தெரிவித்திருந்தது.

உணவுக்கு பஞ்சமிருந்தாலும் நோய்களுக்கு அங்கு பஞ்சமில்லை. டெங்கு, காலரா, மலேரியா என பல தொற்று நோய்கள் அங்கு பரவிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாடுகளும் தங்கள் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை சொல்லிக் கொண்டிருந்த சமயத்தில் அதை கணக்கிடக்கூட முடியாத ஒரு மோசமான நிலையில்தான் இருந்தது ஏமன்.

பல லட்சக் குழந்தைகள் அங்கு பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த குழந்தைகளின் புகைப்படம் ஒன்று போதும் யேமனில் நடைபெறும் போர்க் கொடுமையை சுட்டிக் காட்ட. ஏமனில் செளதி அரேபியா நடத்திய ஆயிரக்கணக்கான வான் தாக்குதல் பள்ளிகள், மருத்துவமனைகள் என எதையும் விட்டுவைக்கவில்லை. கிட்டதட்ட அந்த நாட்டின் பாதிக்கும் அதிகமான மக்களுக்கு உதவி தேவைப்படுவதாக ஐநா தெரிவிக்கிறது. இந்த போரை நிறுத்த ஐநா முயற்சிகளை எடுத்தும் அது எந்த பலனையும் கொடுக்கவில்லை.

பைடனின் இந்த முடிவின் அர்த்தம் என்ன?

US President Joe Biden speaks about foreign policy, at the State Department in Washington. Biden's announcement that the U.S. will end its support of a Saudi-led coalition's years-long war against Yemen's Houthi rebels likely will increase pressure on the kingdom to end its campaign there

டிரம்பின் ஆட்சிக் காலத்தில் போல் இல்லாமல், செளதியை நோக்கிய அமெரிக்காவின் போக்கு தனது ஆட்சிக் காலத்தில் கடினமானதாகவே இருக்கும் என ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.

செளதி அரேபியாவுக்கு ஏமன் போரில் ஆதரவு வழங்குவதை நிறுத்தும் என தெரிவித்துள்ள பைடன் முதல் கட்டமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கும், செளதி அரேபியாவிற்கு ஆயுதங்களை விற்க போவதில்லை என தெரிவித்துள்ளார். மேலும் ஏமன் போரை நிறுத்தும் முயற்சியாக புதிய தூதர் ஒருவரை நியமிக்கப்போவதாக பைடன் தெரிவித்துள்ளார்.


பைடனின் ஆட்சிக் காலத்தில் செளதி அரேபியாவுடன் மட்டுமல்ல பிற மத்திய கிழக்கு நாடுகளை நோக்கிய அமெரிக்காவின் போக்கிலும் மாறுதல்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: ஜோ பைடன் காத்திருக்கும் எதிர்பார்ப்புகள்!

பைடன் தனது ஆட்சிக் காலத்தில் செளதி அரேபியா மற்றும் அதன் இளவிரசர் சல்மானுடன் இருக்கும் உறவையும் மாற்றியமைக்க முயல்வார். டிரம்பின் நிர்வாகம் ஜமால் கஷோக்ஜி கொலை தொடர்பாக போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என ஏற்கனவே பைடன் உடனிருப்பவர்கள் தெரிவித்து வந்தனர்.

பைடன் ஆட்சியில் செளதியுடன் அமெரிக்கா கடுமை காட்டும் என்றால் இரானுடன் எந்த மாதிரியான உறவை மேற்கொள்ளும் என்ற கேள்வியும் இங்கே எழுகிறது. முன்பு கூறியிருந்தது போல டிரம்பின் ஆட்சிக் காலத்தில் இரானுடன் ஏற்பட்டிருந்த அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து வெளியேறி இரானுக்கு பொருளாதார தடைகளையும் அமெரிக்கா விதித்தது. இந்நிலையில் அமெரிக்காவின் இரானுடனான நிலைப்பாடு குறித்து வரக்கூடிய நாட்களில் தெரியும்.

- ஆதிரை



source https://www.vikatan.com/government-and-politics/international/us-to-end-its-support-of-a-saudi-led-coalitions-years-long-war-against-yemens-houthi-rebels

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக