தாமோதர். சென்னையில் ஒரு பன்னாட்டு நிறுவன வேலையிலிருக்கும் இளைஞன். தன் வேலை தொடர்பான எல்லாம் அறிந்தவன். வேலைகளை மிகச் சரியானபடி திட்டமிட்டு முடிப்பவன். 'Error free champion' என அவர்கள் டீமில் கொடுக்கப்படும் விருதை தொடர்ச்சியாகப் பலமுறை பெற்ற 'தவறு செய்யா தாமு' அவ்வருடதிற்கான புரமோஷன் லிஸ்டில் தன் பெயரும் இருக்கும் என தீர்க்கமாக நம்பினான். அவன் மாத்திரமல்ல, அந்த டீமில் உடன் வேலை பார்த்தவர்களும்கூட இம்முறை அவனுக்குப் பதவி உயர்வு வந்து விடும் என நம்பிய ஸ்டார் பெர்ஃபார்மர். ஆனால் பதவி உயர்வு குறித்த பேச்சு வார்த்தையில் அவனுக்குக் கிடைத்தது பேரதிர்ச்சி. ஏனெனில் அவனது பெயர் லிஸ்டில் இல்லை.
"நான்தான் இதுக்கு சரியான சாய்ஸ்" என எண்ணிய தாமுவின் நம்பிக்கையை முற்றிலும் தகர்த்து, "நீ அதுக்கு சரிப்பட மாட்ட", என்றது நிர்வாகம்.
“டீமின் ஸ்டார் பெர்ஃபார்மர் நான், என் வேலைகளை தாமதிக்காமல் , “முடிஞ்சதா?” என நிர்வாகத்தை கேட்க வைக்காமல் கொடுத்த வேலையை கொடுத்த நேரத்திற்குள் முடித்தவன், முன் திட்டமிடல் இல்லாமல் அநாவசிய லீவ் போட்டதில்லை. இப்படி இருக்கும்போது எனக்கு ஏன் புரொமோஷன் இல்லை?” எனக் கேட்டவனுக்கு கிடைத்த பதில் , ”எல்லாம் சரிதான். எதையும் நாங்கள் மறுக்கலை. ஆனால் நீ சொன்ன எல்லாமே உன் வேலை தொடர்பானது. It's a part of your job. அதுக்குதான் உனக்கு வேலையும் சம்பளமும்! வாங்கும் சம்பளத்திற்கு நீ உன் வேலையை சரியாக செஞ்ச. ஆனா புரமோஷன் கொடுக்குமளவு ‘அதுக்கும் மேல’ எக்ஸ்ட்ராவா நீ வேற என்ன செஞ்சிருக்க?”
"நம் பிராஜக்ட்டில் இருக்கும் பிரச்னைககளில் ஏதேனும் ஒன்றை எடுத்து அதைத் தீர்வை நோக்கி கொண்டு போனாயா?
உன்னோட பாஸ் செய்யற வேலைகளுள் ஏதேனும் ஒன்றையாவது கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டினாயா?
உனக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளை தவறில்லாமல் திறம்பட குறிப்பிட்ட காலத்தில் செய்து முடிப்பது உன் வேலையின் ஒரு பகுதி. அதனால் உன் வேலையைத்தான் நீ செய்தாயே அல்லாமல் உன்னை நம்பி உயர் பொறுப்புக்களைக் கொடுப்பதற்கான நம்பிக்கையை நீ கொடுத்தாயா? இப்போ சொல்லு... உன்னை நான் ஏன் புரமோட் பண்ணனும்?”
தாமுவின் உயரதிகாரி அவனிடம் கேட்ட கேள்விகளை நாம் நம்மிடம் கேட்டுக் கொள்ள வேண்டும். “எனக்குக் கொடுக்கப்பட்ட வேலையைத் திறம்பட செய்தேன்... ஒரு நாள் கூட திட்டமிடாமல் லீவ் எடுக்கலை... கொடுத்த நேரத்திற்குள் என் வேலையை பெஸ்ட்டாக செய்து முடித்தேன்" எனப் பட்டியல் இடும் நாம், “என்னை நம்பி உயர் பதவிகளை, பொறுப்புகளைக் கொடுக்கலாம் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு நான் கொடுத்திருக்கிறேனா? என் பதவி உயர்வு குறித்த உரையாடல்கள் அவ்வப்போது அவர்களுடன் நடத்த முற்பட்டேனா?” போன்ற கேள்விகளைப் பட்டியலிடுவதும் அவசியம்.
ஏனெனில் என்னதான், “ஃபேவரைட்டிசம் புரமோஷன்களை ஆளுகின்றன” எனச் சொன்னாலும், உலகில் கொடுக்கப்படும் அனைத்து பதவி உயர்வுகளுக்கும் ஃபேவரைட்டிசம் மாத்திரமே காரணமல்ல. பல பதவி உயர்வுகளுக்குப் பின்னால் இவளை/இவனை நம்பி இந்த வேலையை கொடுக்கலாம் (Deserving Candidate) என்ற நம்பிக்கையை அவர்கள் நிர்வாகத்திற்கு கொடுத்திருப்பார்கள்.
இப்போது யோசியுங்கள்... உங்கள் உயரதிகாரியை "அதுக்கும் மேல நீ என்ன செஞ்ச?" எனக் கேட்க விடாமல், "நீ எல்லாத்துக்கும் மேல" எனச் சொல்ல வைக்கும் தகுதிகள் உங்களிடம் என்னென்ன இருக்கின்றன?
source https://www.vikatan.com/lifestyle/miscellaneous/morning-motivation-what-you-should-do-to-get-a-promotion-in-your-office
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக