தி.மு.க., ம.தி.மு.க., அ.தி.மு.க என ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு மறுபடியும் தி.மு.க ஆதரவாளராக மேடைதோறும் பிரசாரம் செய்து வாக்குச் சேகரித்துவருகிறார் இலக்கியச் சொற்பொழிவாளர் நாஞ்சில் சம்பத். ``நாட்டு மக்களின் வரிப்பணத்தைச் சூறையாடுபவர்களை, அழிச்சாட்டியம் செய்கிற அதிகார பித்தர்களை, கபட அரசியல்வாதிகளை சூரசம்ஹாரம் செய்வதற்கு எங்கள் அண்ணன் மு.க.ஸ்டாலின் வேல் ஏந்தி வருகிறார்'' என்று தி.மு.க மேடைகளில் உணர்ச்சி பொங்கப் பேசிவரும் அவரிடம் அண்மைக்கால அரசியல் நிகழ்வுகள் குறித்துப் பேசினோம்.
``சசிகலா தமிழ்நாடு திரும்பிய பிறகு அவரது தலைமையிலான கட்சியில் நாஞ்சில் சம்பத் இணைந்துவிடுவார். அதனால்தான் தி.மு.க-வில் இணைய அவர் ஆர்வம்காட்டவில்லை என்கிறார்களே?’’
``விடுதலையாகியிருக்கும் சசிகலா, தமிழ்நாடு வந்த பிறகு நாஞ்சில் சம்பத்தைத் தொடர்புகொள்வார் என்றெல்லாம்கூட செய்திகள் உலவிக்கொண்டிருக்கின்றன. அப்படியே அவர் என்னை அழைத்தாலும், அந்த அழைப்பை நிராகரிக்கிற இடத்தில்தான் நான் நின்றுகொண்டிருக்கிறேன். ஏனெனில்,1986-லிருந்தே தமிழக அரசியலில் நான் பயணித்துக்கொண்டிருக்கிறேன். நாடறிந்த சொற்பொழிவாளன் என்ற நிலையில் என்னுடைய தேவை தமிழ்நாட்டுக்கும், தமிழ் மொழிக்கும் இருக்கிறது. தி.மு.க-வில்தான் இப்போது நான் இயங்குகிறேன் என்றாலும்கூட, கட்சி அரசியல் என்று கரைந்துவிட்டால், என்னுடைய அடையாளத்தை நான் இழக்க வேண்டியது வரும். எனவே, இயங்க வேண்டும் என்ற துடிப்பு இருக்கிறது என்றாலும்கூட ஓர் அரசியல்வாதிபோல நடந்துகொள்ள என்னால் இனி முடியாது.''
Also Read: சசிகலா: `கெமிக்கல் ரியாக்ஷன்’, `சஸ்பென்ஸ்’, `பொறுத்திருந்து பாருங்கள்’ - தினகரன் அதிரடி
``அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரனோடுதானே உங்களுக்குக் கருத்து வேறுபாடு?''
``டி.டி.வி தினகரன் மீது தனிப்பட்ட எந்தக் கோப தாபமும் எனக்கு இல்லை. திராவிட இயக்கம் சார்ந்து சிந்தித்துச் செயல்படுகிற எந்தவொரு வேலைத் திட்டத்தையும் அவரிடமிருந்து நான் எதிர்பார்க்கவும் முடியவில்லை. அ.தி.மு.க-வில் நீடிக்க முடியாது என்றதொரு நெருக்கடி அவருக்கு வந்த பிறகு, அவர் தொடங்கிய கட்சியின் பெயரிலும்கூட திராவிடத்தின் பெயரையும், அண்ணாவின் பெயரையும் வைப்பதற்கு அவருக்கு மனம் இல்லை. ஆகவே, அவர் தன் கட்சியின் பெயரை அறிவித்த தினத்தன்றே, `கும்பல் அரசியல் நடத்துவதற்குத்தான் டி.டி.வி.தினகரனுக்கு நாட்டம் இருக்கிறதே தவிர, கொள்கை அரசியல் நடத்த மாட்டார்' என்று முடிவெடுத்து, நானே கட்சியிலிருந்து வெளியேறிவிட்டேன்.''
``சசிகலா வருகையை தற்போதைய அ.தி.மு.க தலைமைகள் விரும்பவில்லை என்கிறார்களே, உண்மையா?’’
``ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இருவரும் செய்நன்றி கொன்றவர்கள். இதில், துரோகம் செய்வதும், காட்டிக் கொடுப்பதுவும் ஓ.பி.எஸ்-ஸின் குருதியிலேயே உறைந்திருக்கிறது. பா.ஜ.க ஏவி விடுகிற கருவி அவர். சசிகலாவின் விடுதலையை இந்த இருவருமே விரும்பவில்லை. அந்த நாளை இருட்டடிப்பு செய்வதற்காகத்தான், ஜனவரி 27-ம் தேதி அம்மா நினைவிடத்தைத் திறந்திருக்கிறார்கள். இதைத் தனது ராஜதந்திரம் என்று எடப்பாடி கருதிக்கொண்டிருக்கிறார். ஆனால், ஜெயலலிதா நினைவிடத் திறப்புவிழாவைவிட, சசிகலாவின் விடுதலைக்கு ஒரு வெளிச்சம் கிடைத்திருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஜெயலலிதாவின் நினைவிடத்தைத் திறப்பதற்கு எடப்பாடிக்கும் ஓ.பி.எஸ்-ஸுக்கும் எந்த யோக்கியதையும் இல்லை என்று மு.க.ஸ்டாலினும் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். ''
Also Read: வாரிசு அரசியல் : உதயநிதியை நியாயப்படுத்தும் ஸ்டாலினின் கருத்து எத்தகையது? - ஒரு பார்வை!
``சசிகலா - ஓ.பி.எஸ் தலைமையிலான அ.தி.மு.க அணியோடு தமிழக பா.ஜ.க-வை கூட்டணி அமைப்பதற்கான வேலைகள் நடைபெறுவதாகக் கூறப்படுகிறதே?’’
``பா.ஜ.க இந்தத் தேர்தலில் எதையும் சாதிக்கப்போவதில்லை. அ.தி.மு.க-வைச் சிதைத்து, அந்த இடத்தில் பா.ஜ.க-வை இட்டு நிரப்ப முடியுமா என்ற எதிர்காலத்தை நோக்கித்தான் அவர்கள் நகர்ந்துவருகிறார்கள்.
இப்படி ஒரு முயற்சி செய்வதற்குக் காரணம் என்னவென்றால், தமிழ்நாட்டில் பா.ஜ.க பலவீனப்பட்டுவிட்டது. அவர்கள் நடத்திய வேல் யாத்திரையையும், திக் விஜயத்தையும் தமிழ்நாட்டு மக்கள் ஒட்டுமொத்தமாக நிராகரித்துவிட்டனர். எனவே, இங்கே காலூன்ற வாய்ப்பு இல்லை என்ற காரணத்தால், 'சாக்கடைத் தண்ணீர் என கருதுகிற சசிகலாவையும் தங்களோடு சேர்த்துக்கொள்ளலாம்' என்று குலத் துரோகம் செய்து பழக்கப்பட்ட குருமூர்த்தியின் வாயிலிருந்து வார்த்தைகள் வெளிவருகின்றன. ஆயிரம் இருந்தாலும், இப்படியொரு வார்த்தையைப் பயன்படுத்துவதற்கு குருமூர்த்திக்குத் தகுதியில்லை. அநாமதேயங்களெல்லாம் இந்த நாட்டு அரசியலில் ஆதிக்கம் செலுத்துகிற அவலங்கள்தான் என்னைப் போன்றவர்களை வேதனைப்பட வைக்கின்றன!''
source https://www.vikatan.com/government-and-politics/politics/i-will-not-come-to-politics-even-if-sasikala-invites-me-nanjil-sampath
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக