சேலம் ஆத்தூர் அருகே உள்ள வீரகனூரில், முகமூடி கொள்ளையர்கள் அருகருகே உள்ள வீட்டிற்குள் அடுத்தடுத்து நுழைந்து, வீட்டில் இருந்தவர்களை தாக்கி, நகைகளையும், பணத்தையும் களவாடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதையடுத்து சம்பவ இடத்திற்கு டி.ஐ.ஜி., எஸ்.பி உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆத்தூர் வீரகனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ராயர்பாளையம், குமரன்மலை அடிவாரத்தில் வசிக்கும் குமாரசாமி வீட்டிலும், தீபன் வீட்டிலும் நேற்று நள்ளிரவு அடுத்தடுத்து முகமூடி திருடர்கள் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். அவர்கள் வீட்டில் இருந்தவர்களைத் தாக்கி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுபற்றி வீரகனூரைச் சேர்ந்த குமாரசாமியின் மூத்த மகன் சிங்காரம், ''நான் ராயர்பாளையம் ஊருக்குள் இருக்கிறேன். எங்க அப்பா குமாரசாமி, அம்மா அமிர்தம், தம்பி வாசுதேவன் தோட்டத்தில் உள்ள வீட்டில் இருந்தார்கள். அப்பாவிற்கு 72 வயது இருக்கும், அம்மா விபரம் அறியாதவர், உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டோடு இருக்கிறார். நேற்று நள்ளிரவு சுமார் 1:00 மணிக்கு தொடர்ந்து நாய் கத்திக் கொண்டே இருந்திருக்கிறது.
அப்பாவும், அம்மாவும் வெளியே வந்து பார்த்திருக்கிறார்கள். அப்போது மறைந்திருந்த 6 முகமூடி திருடர்களில் ஒருவன் அப்பாவின் தலையில் கட்டையால் அடித்திருக்கிறான். அப்பா கீழே விழுந்து மயக்கம் அடைந்து விட்டார். அம்மாவையும், தம்பியையும் கட்டி போட்டு விட்டு பீரோவை உடைத்து மக்காசோளம் விற்ற பணம் ரூ. 54,000, மருந்து வாங்க வைத்திருந்த 6,000 ரூபாய் என மொத்தம் 60,000 ரூபாய் ரொக்க பணத்தையும், நகை 13 பவுனும் எடுத்துக் கொண்டு சென்று விட்டார்கள்'' என்றார்.
ராயர்பாளையத்தைச் சேர்த தினேஷ், '' கொள்ளை நடந்த குமாரசாமி வீட்டிற்கு அருகே வசிப்பவர் என்னுடைய நண்பர் தீபன் வயது 30. அவுங்க அப்பா பேரூராட்சி துணைத் தலைவராக இருந்தவர். அவர் மறைந்து விட்டார். தீபன் அவருடைய மனைவி, குழந்தைகள், வயதான தாய் ஆகியோர் இருந்திருக்கிறார்கள். நேற்று நள்ளிரவு 6 முகமூடி திருடர்கள் தீபன் வீட்டிற்குள் புகுந்து அனைவரையும் தாக்கி கட்டிப் போட்டு மனைவியின் தாலி, தோடு, செயின் என மொத்தம் 25 பவுன் நகைகளும், வீட்டில் வைத்திருந்த 1.25 லட்சம் ரொக்க பணமும் எடுத்துக் கொண்டனர்.
பிறகு தீபன் குடும்பத்தினரை வீட்டுக்குள் வைத்து தாழிட்டு சென்று விட்டார்கள். தீபன் எனக்கு போன் செய்த பிறகே வீட்டிற்கு வந்து அவர்களை திறந்து விட்டேன். முகமூடி கொள்ளையர்கள் கொரோனா கவச உடையைப் போல உடல் முழுவதும் மூடி வந்தார்கள். தமிழில் பேசினார்கள். சத்தம் பேட்டால் கொன்று விடுவோம். அமைதியாக இருந்தால் எங்களுக்கு தேவையான பொருட்களை எடுத்து சென்று விடுவோம்.என்று திபன் கூறினார் '' என்றார்.
இதுபற்றி சேலம் மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் விசாரித்த போது, ''இந்த கொள்ளைச் சம்பவத்தை கண்டறிய 5 டீம் அமைக்கப்பட்டிருக்கிறது. வீரகனூர் சுற்று வட்டார கிராமங்களுக்கு காவல்துறை பலப்படுத்தப்பட்டுள்ளதோடு இரவு ரோந்து பணிகளும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. விசாரணை தீவிரமடைந்திருக்கிறது. இன்னும் ஓரிரு நாட்களை கொள்ளையர்கள் கண்டுபிடித்து விடுவோம்'' என்றார்கள்.
source https://www.vikatan.com/government-and-politics/crime/salem-robbery-the-robbers-came-by-covering-the-whole-body
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக