ஐபிஎல் ஏல பரபரப்பு தொடங்கியிருக்கிறது. சென்னையில் வரும் பிப்ரவரி 18-ம் தேதி 2021 சீசனுக்கான மினி ஐபிஎல் ஏலம் நடைபெற இருக்கிறது. இந்த ஏலத்தில் பங்கேற்க 1097 வீரர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருக்கிறார்கள். இதில் 283 வீரர்கள் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். ஆனால், இதில் இந்தமுறையும் ஜோ ரூட்டும், மிட்செல் ஸ்டார்க்கும் தங்கள் பெயரைப் பதிவு செய்யாமல் புறக்கணித்திருக்கிறார்கள்.
283 வீரர்களில் கரீபியன் வீரர்கள்தான் அதிகம். 56 மேற்கு இந்திய வீரர்களும், ஆஸ்திரேலியாவில் இருந்து 42 வீரர்களும், தென்னாப்பிரிக்காவில் இருந்து 38 வீரர்களும் தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருக்கிறார்கள்.
உலகின் மிகச்சிறந்த பெளலரான மிட்செல் ஸ்டார்க், 2015 சீசனுக்குப்பிறகு ஐபிஎல் தொடரில் கலந்துகொள்ளவே இல்லை. 2015-ல் இவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடினார். அந்த சீசனில் மட்டும் 20 விக்கெட்கள் எடுத்து அசத்தினார் ஸ்டார்க். ஆனால், அதன்பிறகு ஐபிஎல் ஏலத்தை தொடர்ந்து புறக்கணித்துவருகிறார் ஸ்டார்க். ஐபிஎல் தொடரைவிடவும் தேசிய அணிக்காக விளையாடுவதையே ஸ்டார்க் அதிகம் விரும்புகிறார் என்பதே காரணம். ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பேஷ் லீகில் அவர் இருந்தாலும் பெரும்பாலான போட்டிகளில் அவர் விளையாடுவதில்லை.
தற்போது உச்சபட்ச ஃபார்மில் இருக்கும் இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட்டும், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்யவில்லை. ஜோ ரூட், இங்கிலாந்து மற்றும் கவுன்ட்டி கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதே ஐபிஎல் புறக்கணிப்புக்குக் காரணம். ஐபிஎல் அணிகளுக்கும் தன்னை வாங்குவதில் பெரிய ஆர்வம் இல்லை என ஜோ ரூட் நினைப்பதும் இன்னொரு காரணம். இங்கிலாந்தின் மற்றொரு அதிரடி டி20 பேட்ஸ்மேனான டாம் பேன்ட்டனும் இந்த ஆண்டுக்கான ஏலத்தில் பங்கேற்கவில்லை. கவுன்ட்டி கிரிக்கெட்டில் பங்கேற்கயிருக்கிறார்.
2021 சீசனுக்கான ஏலத்தில் அதிகபட்ச ஆரம்ப விலையாக 2 கோடி ரூபாய்க்கு 11 வீரர்களின் பெயர் பட்டியலிடப்பட்டிருக்கிறது. வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹஸன், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், இங்கிலாந்தின் சாம் பில்லிங்கிஸ், லயம் பிளங்கெட், ஜேசன் ராய், மார்க் வுட், மொயீன் அலி, தென்னாப்பிரிக்காவின் காலிங் இங்ராம் ஆகியோர் இதில் இடம்பிடித்திருக்கிறார்கள். இந்த லிஸ்ட்டில் இடம்பிடித்திருக்கும் இரண்டே இந்திய வீரர்கள் ஹர்பஜன் சிங்கும், கேதர் ஜாதவும். இருவருமே சென்னை சூப்பர் கிங்ஸில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் ஸ்பாட் ஃபிக்ஸிங் செய்தார் என குற்றம்சாட்டப்பட்டு, தடைவிதிக்கப்பட்டு மீண்டு வந்திருக்கும் ஶ்ரீசாந்த்துக்கு 75 லட்சம் ரூபாய் ஆரம்பவிலை வைக்கப்பட்டிருக்கிறது.
உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனான இங்கிலாந்தின் டேவிட் மாலன் இந்த ஆண்டுக்கு ஐபிஎல்-ல் களமிறங்குகிறார். அவருக்கு 1.5 கோடி ரூபாய் ஆரம்பவிலையாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இவருக்கான போட்டாபோட்டி இந்த ஆண்டு அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கலாம். அதேப்போல் தற்போது நடைபெற்றுவரும் பிக்பேஷ் லீகில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்காக விக்கெட் சாதனைகள் படைத்துவரும் வேகப்பந்து வீச்சாளர் ஜை ரிச்சர்ட்சனுக்கும் பெரிய போட்டி இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் என அடையாளப்படுத்தப்பட்ட மார்னஸ் லாபுஷேன் தற்போதைய பிக்பேஷ் லீகில் ஆல்ரவுண்டராக அதிரடி காட்டினார். இவருக்கு 1 கோடி ரூபாய் ஆரம்ப விலையாக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நிலையில் இவரை வாங்குவதற்கான போட்டியும் இந்த ஆண்டு அதிகளவில் இருக்கும்.
சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் முதல்முறையாக ஐபிஎல் தொடரில் பதிவுசெய்திருக்கிறார். இவரின் ஆரம்பவிலை 20 லட்சம். ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இடதுகை ஸ்பின்னர் நூர் அஹமது லக்கன்வால்தான் இந்த ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க இருக்கும் மிக இளம் வயது வீரர். இவரின் வயது 16.
பிப்ரவரி 18 ஏலத்துக்கு முன்பாக இந்த 1097 வீரர்களில் அணிகள் யாரையெல்லாம் வாங்க விருப்பம் தெரிவிக்கின்றனவோ அவர்களின் பெயர்கள் மட்டுமே இறுதிசெய்யப்பட்டு ஏல நாள் அன்று அறிவிக்கப்படும்.
source https://sports.vikatan.com/ipl/mitchel-starc-and-joe-root-says-no-to-ipl
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக