அமெரிக்க பங்குச் சந்தையில் நடைபெறும் கேம்ஸ்டாப் விளையாட்டை நமது விகடன் இணையதளத்தில் தொடர்ந்து பார்த்து வருகிறோம். நாம் ஏற்கெனவே கூறியதுபோல கடந்த வாரம் வியாழன் இரவு வர்த்தகத்தில் கேம்ஸ்டாப் பங்குகளுக்கான டிமாண்ட் அதிகரித்தது என்று கூறியிருந்தோம். அதுதான் வெள்ளி அன்று சந்தையில் நடந்தது. கடந்த வெள்ளி அன்று கேம்ஸ்டாப் நிறுவன பங்கு மீண்டும் 127.56 டாலர் அதிகரித்து 325 டாலர் என்ற விலையில் முடிவடைந்தது. பங்குகளின் ஏற்ற இறக்கங்கள் மிக அதிக அளவு இருக்கின்றன. இது வலுவான பங்காக இல்லாத காரணத்தினால் இது தொடர்ந்து இறக்கத்தை இனி சந்திக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.
இப்போது சற்று விவரமாக கேம்ஸ்டாப் நிகழ்வுக்கு முன்பு பங்குச் சந்தைகளில் என்ன நடந்தது, சிறு முதலீட்டாளர் குழு அதில் என்ன மாற்றத்தைச் செய்தது என்பதைப் பார்ப்போம்.
ஒரு போர் நடைபெறுகிறது. ஒரு பக்கத்தில் உள்ள படையில் நவீன போர்க் கருவிகள் இருக்கின்றன. எதிரிகளை துல்லியமாய் தாக்கும் விமான ஏவுகணைகள் இருக்கின்றன. நவீன பீரங்கிகள் மற்றும் துப்பாக்கிகள் இருக்கின்றன. மற்றொரு பக்கத்தில் உள்ள வீரர்களுக்கு வேல் கம்பியும், வாளும், வில்லும் மட்டுமே இருக்கின்றன. இந்த இரண்டு படைகளுக்கும் போர் நடந்தால் யார் வெற்றி பெறுவார்கள். அந்த நிலைதான் பங்குச் சந்தையில் இதுவரை இருந்தது.
பெரிய தரகு / முதலீட்டு நிறுவனங்களில் மெத்தப்படித்த அனுபவம் வாய்ந்த ஃபண்ட் மேனேஜர்கள் இருந்தார்கள். சந்தையின் போக்கை கணிக்க பல வசதிகள் இருந்தன. அதிக அளவு பண பலம் இருந்தது. பெரிய தரகு நிறுவனங்கள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக்கொண்டு வர்த்தகத்தில் ஈடுபட்டனர்.
ஆனால், சிறு முதலீட்டாளர்களிடம் போதிய பணம் இருக்காது. அவர்களுக்கு சந்தையின் போக்கை கணிக்கும் நவீன டெக்னாலஜிகள் கிடைக்கப் பெறாது. ஒவ்வொரு சிறு முதலீட்டாளர்களும் தனித்து இருந்தனர். சந்தை பற்றிய தெளிவும் அரைகுறையாகவே அவர்களிடம் இருந்தது.
பங்குச் சந்தையில் தினசரி வர்த்தகத்தில் நாம் ஏற்கெனவே கூறியதுபோல ஒருவருடைய லாபம் மற்றவருடைய நஷ்டமாக இருப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.
இந்தச் சூழ்நிலையில் நடைபெறும் வர்த்தகப் போரில் பெரும் தரகர்களின் நவீன துப்பாக்கிகள் முன்பு சிறு முதலீட்டாளர்களின் வில் அம்பு தொடர்ந்து தோற்று வந்தது.
பங்கு தினசரி வர்த்தகத்தில் இதன் காரணமாக சிறு முதலீட்டாளர்கள் பெரும்பாலும் பணத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அவர்களின் பணத்தை பெரிய தரகு / முதலீட்டு நிறுவனங்கள் ஏமாற்றி அபகரிக்கும் சூழ்நிலையே தொடர்ந்து நிலவியது.
தமிழ் திரைப்படங்களில் தோற்கடிக்கப்பட்ட நாட்டின் இளவரசன் போர் செய்யத் தெரியாத சாதாரண நாட்டு மக்களுடன் சேர்ந்து தோற்ற நாட்டை மீட்ட பல கதைகளைப் பார்த்திருக்கிறோம். அதற்காக கதாநாயகன் பல ஏற்பாடுகளைச் செய்து பல புதிய உத்திகளைக் கையாண்டு போர் புரிந்து வெற்றி பெற்றதைக் கைதட்டி ரசித்திருப்போம். அந்தக் கதைதான் வால் ஸ்ட்ரீட்டில் நடந்தது.
இப்போது டெக்னாலஜியின் முன்னேற்றத்தால் பங்கு வர்த்தகத்தைக் கணிக்கக்கூடிய பல விஷயங்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. நமது நாட்டில் உள்ள Zerodha தரகு நிறுவனம் போல அமெரிக்காவில் இருக்கும் தரகு நிறுவனம்தான் Robinhood. இந்தத் தரகு நிறுவனம் சிறு முதலீட்டாளர்களுக்கும் சந்தையின் போக்கை கணிக்க உதவும் பல வசதிகளைச் செய்து தந்திருக்கிறது. Robinhood மட்டுமன்றி வேறு பல தரகு நிறுவனங்களும் இந்த வசதிகளைத் தமது வாடிக்கையாளர்களுக்குத் தந்திருக்கிறார்கள்.
இதன் காரணமாகப் பெரிய தரகு நிறுவனங்களுக்குக் கிடைக்கும் பல வசதிகள் சிறு முதலீட்டாளர்களுக்கும் கிடைக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இதன் மூலம் சந்தையின் போக்கை எளிதாக சிறு முதலீட்டாளர்களாலும் கணிக்க முடிந்தது.
என்றாலும், சிறு முதலீட்டாளர்களிடம் பெரிய தரகு நிறுவனங்களை எதிர்க்கும் அளவுக்கு பண பலம் இல்லாதிருந்தது. அவர்களில் பெரும்பாலானோருக்கு சந்தை பற்றிய புரிதலும் குறைவாக இருந்தது. மேலும், பங்குச் சந்தையில் பலரால் முழு நேரமும் ஈடுபட முடியாத சூழ்நிலை நிலவியது. அவர்களில் பெரும்பாலானவர்கள் வேறு அலுவலகங்களில் பணிக்குச் சென்று வருபவர்களாகவும் இருந்தனர்.
இந்த இடத்தில்தான் reddit உதவி செய்கிறது. பெரிய ராஜாவை எதிர்க்க சாதாரண முதலீட்டாளர்கள் கூட்டணி அமைக்கிறார்கள். அவர்கள் அனைவரும் சேர்ந்து பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவதன் மூலம் தரகு நிறுவனத்தைத் தோற்கடிக்கும் அளவுக்கு பண பலம் சேர்ந்துவிடுகிறது. சிறுவயதில் படித்த ஒற்றுமையே பலம் என்பது உண்மையாகிறது. இந்தச் சிறு முதலீட்டாளர்கள் அனைவரும் reddit மூலம் இணைந்து பெரிய தரகு நிறுவனத்தை வீழ்த்த வியூகம் அமைக்கிறார்கள்.
கேம்ஸ்டாப் விளையாட்டு ஒரு நாளில் நடந்த விஷயம் கிடையாது. இதற்கான மிகப் பெரிய திட்டமிடல் பலகாலம் சிறு முதலீட்டாளர்கள் குழுவிடையே நடைபெற்று இருக்கும். தகுந்த காலத்துக்காகக் காத்திருந்து பருத்த இரை கிடைத்தவுடன் சிங்கத்தை நான்கு எருதுகள் சேர்ந்து வேட்டையாடிவிட்டன. இதுதான் அமெரிக்க பங்குச் சந்தையில் நடந்தது.
இந்தப் பிரச்னை கேம்ஸ்டாப் நிறுவனத்தில் மட்டும் நடந்த பிரச்னை அல்ல. பத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்களில் ஷார்ட் செய்த தரகு நிறுவனங்கள் மிகப் பெரிய நஷ்டத்தைக் கடந்த வாரங்களில் சந்தித்துள்ளன. அவர்கள் அனைவரும் சிறு முதலீட்டாளர்கள் குழுவால்தான் தோற்கடிக்கப்பட்டு இருக்கின்றனர். கடந்த வாரத்தில் அமெரிக்க பங்குச் சந்தையில் அதிகம் ஷார்ட் செய்யப்பட்ட 10 நிறுவனங்களின் விவரம் பின்வருமாறு.
இது மேம்போக்காகப் பார்க்கும்போது சுலபமாகச் செய்யப்பட்டது போல இருக்கலாம். ஆனால், இங்கு சிறு முதலீட்டாளர்கள் குழு மிகப் பெரிய ரிஸ்க்கை எடுத்துள்ளது. ஷார்ட் செய்யாமல் உண்மையிலேயே ஒரு பங்கை ஒருவர் விற்க முயன்றால் அந்தப் பங்குகளை வாங்கும்போது மிகப்பெரிய நஷ்டம் வந்தடைந்து விடும்.
ஆனால், இங்குதான் பெரிய தரகு நிறுவனத்தின் அலட்சியப் போக்கு சிறு முதலீட்டாளர்களுக்கு உதவுகிறது. ஒரு நிறுவனத்தின் மொத்த பங்குகளின் அளவைவிட 1.3 மடங்கு அதிகம் உள்ள பங்குகளை விற்பதற்கு தரகு நிறுவனம் ஷார்ட் செய்கிறது.
சந்தையில் சுழற்சியில் இருக்கும் பங்குகளைவிட அதிக பங்குகளை எப்படி விற்க முடியும் என்று தரகு நிறுவனம் யோசிக்கக்கூட செய்யவில்லை. அதற்குக் காரணம் அதன் ஆணவப் போக்காக அமைந்தது. அவர்கள் அப்படித்தான் 30 வருடங்களாகச் செய்து வருகிறார்கள். அவ்வளவு பங்குகளையும் அதிக விலை கொடுத்து ஒருவர் வாங்குவார் என்று தரகு நிறுவனம் கனவில் கூட நினைக்கவில்லை.
இந்த விளையாட்டில் அமெரிக்காவில் மிகப்பெரிய தரகு நிறுவனமான மெல்வின் கேப்பிடல் என்ற நிறுவனம் மிகப் பெரிய பாதிப்பை அடைந்துள்ளது. இதன் காரணமாக அந்த நிறுவனம் திவாலாகும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டது. ஆனால், அந்த நிறுவனம் மட்டும்தான் பாதிக்கப்பட்டதா என்றால் அதுதான் இல்லை. வேறு சில பெரும் தரகு / முதலீட்டு நிறுவனங்களும் தமது பணத்தை இழந்திருக்கின்றனர்.
இதுபோன்ற முதலீட்டு நிறுவனங்களின் அட்டகாசம் அனைத்து பங்குச் சந்தைகளிலும் இருக்கிறது. பெரிய தரகு நிறுவனம் நினைத்தால் ஒரு பங்கின் விலையை எந்த அளவுக்கும் உயர்த்த முடியும். நல்ல பங்கை மதிப்பில்லாததாக்க முடியும். இதுபோன்ற பல நிகழ்வுகள் அமெரிக்க பங்குச் சந்தையில் நடந்துள்ளன.
தரகு நிறுவனங்களின் இதுபோன்ற செயலால் பல சிறிய நிறுவனங்கள் திவாலாக இருக்கின்றன. அந்த நிறுவனங்கள் கேம்ஸ்டாப் விளையாட்டுக்குப் பிறகு, பங்குச் சந்தையில் பெரும் முதலீட்டு நிறுவனங்களுக்குக் கடிவாளம் போடப்படும் நேரம் வந்து விட்டது என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இந்தியாவிலிருந்து அமெரிக்க பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்யும் வசதியும் வந்துவிட்டது. சிறு முதலீட்டாளர்கள் குழுவில் வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் மட்டுமன்றி இந்தியாவில் வசிக்கும் இந்தியர்களும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் reddit மூலமே இணைந்திருக்கிறார்கள்.
நமது பங்குச் சந்தையிலும் ஷார்ட் மூலம் தரகு நிறுவனம் பணம் பார்க்க முடியும் என்றாலும், நம் சந்தையில் உள்ள கட்டுப்பாடுகள் இதுபோன்ற மிகப்பெரிய சூதாட்டங்களைத் தடுக்க உதவுகின்றன. அவற்றைப் பற்றியும் விரிவாகப் பார்க்கலாம்.
1. நமது நாட்டில் ஷார்ட் செய்வது பங்குச் சந்தையில் அனுமதிக்கப்பட்டாலும் அதே நாளில் கணக்கை நேர் செய்ய வேண்டும். விற்ற பங்கை அடுத்த நாளுக்கு கொண்டு செல்ல முடியாது. டெரிவேட்டிவ் செக்மென்ட்டில் மட்டும்தான் அடுத்த நாளுக்கு எடுத்துச் செல்ல முடியும்.
2. ஆனால், குறைந்த அளவு நிறுவனங்கள் மட்டுமே டெரிவேட்டிவ் செக்மென்ட்டில் வர்த்தகம் ஆகின்றன.
3. ஃப்யூச்சர் ஆப்ஷன் மூலம் வர்த்தகம் செய்யும்போது ஷார்ட் செய்வதற்கு அதிக முன்பணம் வசூலிக்கப்படுகிறது. மேலும், பங்குகளுக்கான டிமாண்ட் கண்காணிக்கப்படும். அதிக டிமாண்ட் எழுந்தால் அந்தப் பங்கு F&O செக்மென்ட்டில் வர்த்தகமாவது தற்காலிகமாக நிறுத்தப்படும்.
4. ஒவ்வொரு பங்குக்கும் சர்க்யூட் லிமிட் நிர்ணயிக்கப்பட்டிருக்கும். அதுவும் அதிக ஏற்ற இறக்கங்களைக் கட்டுப்படுத்தும்.
இதன் காரணமாக இந்தியாவில் அவ்வளவு சுலபமாக கேம்ஸ்டாப் பிரச்னை போல நடப்பதற்கு வாய்ப்பு கிடையாது. என்றாலும், அனைத்துக் கட்டுப்பாடுகளிலும் உள்ள சந்து பொந்துகளைப் பயன்படுத்தி ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதனால் கேம்ஸ்டாப் பிரச்னை நம்முடையது அல்ல என்று சொல்லிவிட முடியாது. நம்முடைய கட்டுப்பாடுகள் நிச்சயம் இதுபோன்று நடப்பதைத் தடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. என்றாலும், பங்குச் சந்தை ஆணையமான செபி அமெரிக்க நிகழ்வை ஆராய்ந்து தேவையான மாற்றங்களை இந்திய பங்குச் சந்தையிலும் ஏற்படுத்த வேண்டும் என்றே தோன்றுகிறது.
Also Read: `வால் ஸ்ட்ரீட் என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா?' - #GameStop கேங்ஸ்டர்ஸ் `சம்பவம்' செய்தது எப்படி?
வெளிநாடுகளுடன் ஒப்பிட்டால் பங்குச் சந்தையில் ஈடுபடும் இந்தியர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. பங்குச் சந்தை என்றால் சூதாட்டம் என்பது பெரும்பான்மையான மக்களின் கருத்தாக உள்ளது. அமெரிக்க நிகழ்வுகள் மக்களின் இதுபோன்ற அச்சத்தை மெய்ப்பிக்கக் கூடியதாக இருக்கிறது.
அதனால் சிறு முதலீட்டாளர்களின் அச்சத்தைப் போக்க வேண்டிய கடமை, இந்தியப் பங்குச் சந்தையை நெறிப்படுத்தும் செபி அமைப்புக்கு நிச்சயம் இருக்கிறது. சிறு முதலீட்டாளர்களை பெருமளவில் அச்சமில்லாமல் பங்குச் சந்தையில் ஈடுபட வைக்கும் பொறுப்பு செபிக்கு இருக்கிறது. அதை உணர்ந்து செபி தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே சாமானிய முதலீட்டாளரின் கோரிக்கையாக உள்ளது.
source https://www.vikatan.com/business/share-market/is-it-possible-for-gamestop-saga-to-happen-in-india-share-market
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக