Ad

புதன், 3 பிப்ரவரி, 2021

திருவாரூர்: மழை நிவாரணம் வழங்குவதில் பாரபட்சம்?! - கொதிக்கும் மக்கள்

மார்கழி மாதம் எதிர்பாராமல் பெய்த தொடர் கன மழையினால், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. தொடர் கனமழையால் வீடுகள் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைப்பட்டார்கள். இவர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் தற்போது நிவாரண உதவிப்பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொராடாச்சேரி ஒன்றியம் எண்கண் கிராமத்தில் நிவாரணப் பொருள்கள் வழங்குவதில் பாரபட்சம் நடைபெறுவதாகவும், உண்மையாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இந்த நிவாரணப் பொருள்கள் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, இப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

சாலை மறியல்

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய எண்கண் ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் வெற்றிச்செல்வன், ‘’பொங்கலுக்கு முன்னாடி தொடர்ச்சியா பெய்த கனமழையில, எண்கண், தைக்கால், கீழகாலணி பகுதியில உள்ள நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைஞ்சிது. இது எல்லாம் ஏழை எளிய மக்கள் வசிக்கக்கூடிய கீற்று, ஓட்டு வீடுகள். வெட்டாறுல உடைப்பு ஏற்படக்கூடிய அபாயமும் ஏற்பட்டதால், 275 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள், முகாம்கள்ல மூன்று நாள்களுக்கு தங்க வைக்கப்பட்டாங்க. இவங்கள்ல பெரும்பாலானவங்க விவசாயம் மற்றும் கட்டட வேலைகளுக்குப் போகக்கூடிய கூலித் தொழிலாளர்கள்.

வேலைக்குப் போனால்தான் வருமானம். இதனால் முகாம்கள்ல தங்கியிருந்தவங்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக, ஒரு குடும்பத்துக்கு 10 கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் வழங்கப்படும்னு தமிழக அரசு அறிவித்தது. எங்க ஊராட்சியில 130 குடும்பங்களுக்கு இந்த நிவாரணப் பொருள்கள் கொடுத்தாங்க. இதுல என்ன வேடிக்கையான கொடுமைனா, முகாம்கள்ல தங்க வைக்கப்பட்டிருந்த குடும்பங்களுக்கும், மழையினால உண்மையாகவே வீடுகள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் முழுமையாக நிவாரணப் பொருள்கள் கொடுக்கல. இப்ப நிவாரணப்பொருள்கள் வழங்கப்பட்ட 130 குடும்பங்கள்ல, 50 சதவீத குடும்பங்கள் ஓரளவுக்கு வசதிப்படைச்சவங்க... அரசாங்க உதவியை நம்பிருக்க வேண்டிய சூழல்ல இல்லாதவங்க. உண்மையாகவே பாதிக்கப்பட்ட 400 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் கொடுக்கப்பட்டிருக்கணும்.

வெற்றிச்செல்வன்

அப்படி இல்லைனாலும் கூட முகாம்கள்ல தங்கியிருந்த 275 குடும்பங்களுக்குமாவது முழுமையா கொடுத்திருக்கணும். இதுல பாரபட்சம் நடந்திருக்கு. நிவாரணப் பொருள்கள் வாங்கினவங்களுக்கு மட்டும் தமிழக அரசு, ஒரு குடும்பத்துக்கு பத்தாயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்போகுதுனு ஒரு வதந்தி கிளம்பினதுனாலயும், ஓரளவுக்கு வசதிப் படைச்சவங்களும் கூட இந்த நிவாரணப் பொருள்களை ஏதோ ஒரு செல்வாக்குல வாங்கியிருக்காங்க. திருவாரூர் தாலுகா அலுவலகம் மூலம் தான் இதுக்கான கணக்கெடுப்பு செஞ்சி இதை கொடுத்திருக்காங்க. இது தொடர்பா மறுக் கணக்கெடுப்பு நடத்தி, உண்மையாக பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்படணும்’’ என தெரிவித்தார். இது தொடர்பாக திருவாரூர் தாலுகா தாசில்தார் நக்கிரனிடம் பேசியபோது ‘’இதுல எந்த ஒரு முறைகேடும் நடக்கல. மறுபடியும் கணக்கெடுப்பு நடத்தப்படும்’’ என்பதோடு முடித்துக்கொண்டார்.



source https://www.vikatan.com/government-and-politics/protest/public-protest-against-relief-fund-given-by-government

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக