வீட்டுக்கு வெளியே பனி பெய்கிற புகைப்படத்தைப் பகிர்ந்துவிட்டு, "ஏதோ புவி வெப்பமடைதல் என்று சொல்லிக்கொண்டிருந்தீர்களே, எங்கே அது?!" என்று யாராவது ட்விட்டரில் கேள்வி எழுப்புவார்கள். பல்லாயிரக்கணக்கானோர் "மிகவும் சரி", "அட, ஆமாம்ல" என்றெல்லாம் பின்னூட்டம் இடுவார்கள். அந்த ட்வீட் வைரலாகும். மேலைநாடுகளின் குளிர்காலங்களில் அடிக்கடி நடக்கும் நிகழ்வு இது. ட்விட்டரின் செல்லப்பிள்ளையான முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூட இப்படி ஒரு ட்வீட்டை சில வருடங்களுக்கு முன்பு பதிவிட்டிருந்தார்.
காலநிலை மாற்றம் சார்ந்த விவாதங்களிலும், "புவி வெப்பமடைகிறது என்று சொல்கிறீர்கள். ஆனால் புயல் வந்துவிட்டால் உடனே அந்தர்பல்டி அடித்து, அதுவும் காலநிலை மாற்றம்தான் என்கிறீர்கள். வெப்பமடைந்த பூமியில் மழையும் புயலும் எப்படி வரும்?" என்ற கேள்வி அடிக்கடி வரும்.
மேலோட்டமாகப் பார்த்தால், சரியான கேள்விகளாகவே இவை தெரிகின்றன, இல்லையா? ஆனால், பதில்களை நாம் புரிந்துகொண்டால் அந்த எண்ணம் மாறலாம்.
பசுமைக்குடில் வாயுக்களின் அளவு அதிகரிப்பதால் புவியின் சராசரி வெப்பநிலை அதிகரிக்கிறது. ஆனால், பிரச்னையின் நீள அகலம் அது மட்டுமே இல்லை. புவி வெப்பமடைதல் என்பது ஒரு ஆரம்பப்புள்ளி மட்டுமே. 'அபூர்வ சகோதரர்கள்' திரைப்படத்தில் ஒரு சிறிய பந்தை உருட்டிவிட்டதும் என்னென்னவெல்லாமோ நடந்து இறுதியில் அம்பு ஒன்று விடுவிக்கப்படும் இல்லையா? புவி வெப்பமடைதல் அந்தச் சிறிய பந்து போல, அவ்வளவுதான். பிரச்னையின் தாக்கம் எங்கெங்கோ நீள்கிறது.
இந்தக் குழப்பத்துக்கு முடிவு கட்டிவிடலாம் என்றுதான் 'புவி வெப்பமடைதல்' (Global Warming) என்பது 'காலநிலை மாற்றம்' (Climate Change) என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது. சரியாகக் கணிக்க முடியாத அதிதீவிர பருவகால நிகழ்வுகள், காலநிலை மாற்றத்தால் இடம்பெயரும் வனவிலங்குகள், உயரும் கடல்மட்டம், உருகும் பனிப்பாறை, மழை, வெள்ளம், வறட்சி, திடீர் பனிப்பொழிவு, காட்டுத்தீ என்று புவி வெப்பமடைதலால் ஏற்படக்கூடிய எல்லா பாதிப்புகளையும் உள்ளடக்கியதுதான் காலநிலை மாற்றம்.
சரி, அப்படிப்பார்த்தாலும் கேள்விகளுக்கான பதில் பாதிதானே கிடைத்திருக்கிறது? இதன் பெயர் காலநிலை மாற்றம் என்றே வைத்துக்கொள்ளலாம், ஆனாலும் வெப்பமடைந்த பூமிதானே இதன் அடிப்படை? வெப்பம் அதிகமானால் எப்படி மழை அதிகரிக்கும்?
வெப்பநிலை அதிகரிக்கும்போது, நீர் ஆவியாக மாறுவதும் அதிகரிக்கிறது. தவிர, வெப்பமான காற்றால் அதிக ஈரப்பதத்தை சேமித்துக்கொள்ள முடியும். சராசரி வெப்பநிலை ஒரு டிகிரி செல்சியஸ் அதிகரித்தால், அந்தச் சூழலில் காற்றுக்குள் 7% ஈரப்பதத்தைக் கூடுதலாக சேமிக்கலாம். ஆகவே, காற்றின் சராசரி வெப்பநிலை அதிகரிக்கும்போது, அதற்குள் சேகரிக்கப்படும் ஈரப்பதமும் அதிகரிக்கிறது. இதனால் மழைப்பொழிவின் அளவும் அதிகரிக்கிறது.
ஆனால், வெப்பம் அதிகமான இடத்துக்குள்ளேயே மழை பொழியும் என்று சொல்லிவிடமுடியாது. அந்த மழை எங்கே, எப்போது போய்ச் சேரும் என்பதெல்லாம் மற்ற பருவகாலச் சூழல்களைப் பொறுத்தது.
காலநிலை மாற்றத்தால் ஒரு வருடத்தின் சராசரி மழைநாள்கள் குறைகின்றன என்பது உண்மைதான், ஆனால் ஒருவேளை மழை தொடங்கிவிட்டால் அது தீவிரமானதாகவே இருக்கும் என்பது விஞ்ஞானிகள் கருத்து.
அந்தமானில் வசிக்கும் மக்கள், "மழையா இது?! யாரோ ஒரு பெரிய பக்கெட்டுல தண்ணியை எடுத்து வேகமா தலைகீழா கவிழ்த்த மாதிரி இருக்கு" என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். விஞ்ஞானிகளின் கருத்துப்படி பார்த்தால், அடுத்தடுத்த வருடங்களில் எல்லா மழையுமே பக்கெட் மழையாக இருக்கத்தான் வாய்ப்புகள் அதிகம். ஏற்கெனவே, "வரலாறு காணாத மழை அளவு" போன்ற விவரணைகளைக் கேட்கத் தொடங்கிவிட்டோம். ஒரு வருடத்துக்கான மொத்த மழை அளவை இரண்டு நாள்களிலேயே பார்த்துவிட்ட ஆப்பிரிக்க நாடுகளும் சமகால வரலாற்றில் உண்டு.
இதில் இன்னொரு பிரச்னையும் இருக்கிறது, மழைக்கான முன்தயாரிப்புகள், மேலாண்மைத் திட்டங்கள் எல்லாமே சராசரி மழை அளவின் அடிப்படையில்தான் அமைக்கப்பட்டிருக்கின்றன. எதிர்பார்க்காமல் வரும் மழை பெரிய அளவில் கொட்டித் தீர்க்கும்போது அதற்கான முன்னேற்பாடுகள் நம்மிடம் இல்லாமல் போகலாம், அதனாலும் பாதிப்புகள் அதிகமாகலாம். மழை மட்டுமல்ல, காலநிலை மாற்றத்தால் வரும் பருவகால நிகழ்வுகள் எல்லாமே எளிதில் கணிக்கமுடியாதவை, தீவிரமானவை. இவற்றை "Unpredictable extreme weather events" என்கிறார்கள் வல்லுநர்கள்.
இது ஏன் நிகழ்கிறது?
சீட்டுக்கட்டு கோபுரம் ஒன்று சரிகிறது என்று வைத்துக்கொள்வோம். மேலே இருக்கிற ஒரு சீட்டை சரித்தால், அந்தக் கோபுரம் எப்படியெல்லாம் சரியும் என்பதைத் துல்லியமாகக் கணிக்க முடியுமா? சில சீட்டுக்கள் தட்டையாக இருக்கலாம், சில வளைந்திருக்கலாம். சில அடுக்குகள் சரியாகவும் சில அடுக்குகள் மோசமாகவும் அமைக்கப்பட்டிருக்கலாம். கோபுரம் சரியத் தொடங்கும்போது காற்று வீசலாம். திடீரென்று யாராவது கோபுரத்தைக் காப்பாற்றுவதற்காகக் கையை நீட்டி இன்னும் சில சீட்டுக்களைத் தட்டிவிடலாம். எது வேண்டுமானாலும் நிகழலாம்.
காலநிலை மாற்றமும் அதுபோன்றதுதான். காலநிலை என்பது ஒரு உலகளாவிய வலைப்பின்னல் என்பதால் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பருவகால நிகழ்வுகளும் தீவிரமானவையாகவும், எளிதில் கணிக்க முடியாதவையாகவும் இருக்கின்றன.
உதாரணமாக, நீராவியை எடுத்துக்கொள்வோம். வெப்பம் அதிகமானால் நீர் ஆவியாகும். இது நம் எல்லாருக்கும் தெரிந்ததுதான். வெப்பமான காற்று அதிக நீராவியை/ஈரப்பத்ததை சேமிக்கும் என்பதை ஏற்கெனவே பார்த்தோம். ஆகவே வெப்பத்தால் கூடுதல் நீர் ஆவியானாலும், அது வேறு எங்கும் போகாமல் காற்றுக்குள்ளேயே சேமிக்கப்படுகிறது.
நீராவிக்குப் பசுமைக்குடில் விளைவை ஏற்படுத்தும் தன்மை உண்டு. அதுதான் சிக்கலே.
காற்றுக்குள் சேர்கிற நீராவி, பசுமைக்குடில் விளைவால் காற்றின் வெப்பத்தை மேலும் அதிகப்படுத்துகிறது. கூடுதலாக சூடேறிய காற்றால் இன்னும் கொஞ்சம் நீர் ஆவியாகிறது. ஆவியாகிற நீர் காற்றின் வெப்பத்தைத் தொடர்ந்து அதிகரிக்கிறது. மீளாச் சுழற்சி.
இன்னும் ஒரு தலைசுற்றும் உதாரணத்தைப் பார்க்கலாம். கரியமில வாயு, மீத்தேன் போன்ற பசுமைக்குடில் வாயுக்கள் அதிகரிப்பதால் வெப்பம் கூடுகிறது. அதனால் ஆர்ட்டிக் பனிக்கட்டிகள் உருகுகின்றன. ஆர்ட்டிக் பனிக்கட்டிகளுக்குள் மீத்தேனும் கரியமில வாயுவும் சேமிக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பனிக்கட்டிகள் உருகும்போது, உள்ளே அடைபட்டிருக்கிற மீத்தேனும் கரியமில வாயுவும் வெளியேறுகின்றன. அவை காற்றில் கலந்து, மேலும் வெப்பத்தை அதிகரிக்கின்றன. அதனால் பனிக்கட்டிகள் மேலும் உருகுகின்றன!
இவைபோன்ற பல பின்னூட்டச் சுழல்கள் (Feedback loops) காலநிலையில் உண்டு என்பதால், எந்த மாற்றம் எந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை மிகச்சரியாகச் சொல்வது கடினம். ஒரு புயலையோ வறட்சியையோ சுட்டிக்காட்டி,"இந்த நிகழ்வுக்குக் காலநிலை மாற்றம் காரணமா?" என்று கேட்டால் குழப்பமான பதிலே மிஞ்சும். ஏற்கெனவே சொன்னதுபோல் காலநிலை மாற்றம் என்பது நுணுக்கமானது. "குற்றம் நடந்தபிறகு ஒரு இடத்துக்குப் போய் பூதக்கண்ணாடியோடு தேடினால் காலநிலை மாற்றம் என்ற துப்பு கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கிறீர்களா என்ன? காலநிலை மாற்றம் என்பது தனிப்பட்ட குற்றவாளியல்ல, தொடர்ந்து நம்மைச் சுற்றி இயங்கும் வலைப்பின்னல்" என்கிறார் ஆராய்ச்சியாளர் டேவிட் வாலஸ் வெல்ஸ். சில நிகழ்வுகளுக்கு அது ஆரம்பப்புள்ளி, சில நிகழ்வுகளுக்கு அது ஒரு வேகமூட்டி. ஆனால் வழக்கமான பருவகால நிகழ்வுகள்கூட காலநிலை மாற்றத்தின் பின்னணியில்தான் நடக்கின்றன என்பதால் எல்லாவற்றிலும் அதன் நிழல் படிந்திருக்கிறது.
"காலநிலை மாற்றம்" என்ற பெயரை மாற்றி, "காலநிலை அவசரநிலை", "காலநிலை ஆபத்து" (Climate emergency, Climate threat) என்று சொல்லவேண்டும் என்றும் குரல்கள் எழுந்திருக்கின்றன. "மாற்றம்"" என்பது ஒரு இதமான சொல் என்பதால், நிலைமையின் தீவிரம் புரியாமல் போய்விடுகிறது எனவும், இது உலகளாவிய அச்சுறுத்தல் என்பதை எல்லா நாடுகளும் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் எழுதுகிறார் சூழலியல் எழுத்தாளர் டேமியன் கேரிங்க்டன். புவி வெப்பமடைதல் என்று சொல்வதை விடவும், புவி சூடேறுகிறது என்று சொல்லுங்கள் என்று வேண்டுகோள் விடுக்கிறார் அவர்.
ஐ.நா சபையின் சுற்றுச்சூழல் குழு 2020-ன் இறுதியில் உலகளாவிய கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. ஐம்பது நாடுகளைச் சேர்ந்த 12 லட்சம் பேர் இதில் பங்கேற்றார்கள். காலநிலை சார்ந்த கருத்துகள் மக்களிடம் கேட்டறியப்பட்டன. கணக்கெடுப்பில் கிட்டத்தட்ட 63% பேர், "காலநிலை மாற்றம் என்பது உலகளாவிய அவசரநிலை (Global emergency)" என்று சொல்லியிருக்கிறார்கள்.
இது அவசரநிலை என்பதுதான் நிதர்சனமான உண்மை.
2020-ம் ஆண்டில் நடந்த தீவிர பருவகால நிகழ்வுகளின் பட்டியல் திகிலூட்டுகிறது. மூன்று பெரிய காட்டுத்தீ நிகழ்வுகள், பத்து வருடங்களில் இல்லாத அளவுக்கு சீனாவில் ஏற்பட்ட ஒரு வறட்சி, மனித வரலாற்றிலேயே அதிகம் செலவு வைத்த புயலாகக் கருதப்படும் இந்தியாவின் ஆம்பன் புயல் (14 பில்லியன் டாலர் செலவு), 200 பேர் பலியான கென்யா/உகாண்டாவின் வெள்ளப்பெருக்கு, பிலிப்பைன்ஸைத் தாக்கிய அதிதீவிர கோனி புயல் என்று அது நீண்டுகொண்டே போகிறது.
உலக வானிலை ஆராய்ச்சி மையம், அட்லாண்டிக் கடல் புயல்களுக்கான பெயர்ப்பட்டியலை வருடாவருடம் வெளியிடும். 2020-ல் முப்பது புயல்கள் ஏற்பட்டதால் பட்டியலில் இருந்த பெயர்கள் எல்லாமே தீர்ந்துபோய், கிரேக்க எழுத்துகளைப் பெயர்களாகச் சூட்டவேண்டிய நிலை ஏற்பட்டது! அந்த அளவுக்கு நிலைமை தீவிரமாகியிருக்கிறது.
இந்த அவசரநிலையை எதிர்கொள்ள கரிம பட்ஜெட் ஒன்று தேவை என்கிறார்களே அது என்ன? சராசரி வெப்பநிலை எவ்வளவு இருந்தால் அச்சுறுத்தலிலிருந்து தப்பிக்கலாம்? கரிம உமிழ்வு என்பது அடிக்கடி விவாதிக்கப்படுகிறதே, அதை எப்படிக் குறைப்பது?
அடுத்த கட்டுரையில் விவாதிக்கலாம்...
- Warming Up...
source https://www.vikatan.com/government-and-politics/environment/why-global-warming-became-climate-change
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக