Ad

புதன், 17 பிப்ரவரி, 2021

கிசான் சம்மான் திட்ட முறைகேடு: திருப்பிச் செலுத்தாதவர்களுக்கு ஊரக வேலை வழங்கி வசூலிக்கத் திட்டமா?

சிறு, குறு விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை 2,000 ரூபாய் என தீர்மானித்து மூன்று தவணைகளாக ஒரு ஆண்டுக்கு 6,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை 2018 ஆம் ஆண்டு கொண்டுவந்தது மத்திய அரசு. 100% மத்திய அரசின் நிதியுடன் 01.12.2018 முதல் செயல்படத் தொடங்கியது இந்தத் திட்டம். இந்த திட்டத்திற்கு 5 ஏக்கர் நிலமுடைய சிறு, குறு விவசாயிகள் அனைவரும் தகுதியானவர்களே என்று முதலில் அறிவிக்கப்பட்டது. அரசு ஊழியர்கள், வருமானவரி செலுத்துபவர்கள், மாதத்திற்கு 10,000 ரூபாய்க்கும் அதிகமாக ஓய்வூதியம் பெறுவோர், இந்த நிதி உதவிக்கு விண்ணப்பிக்க முடியாது போன்ற சில கட்டுப்பாடுகளுடன் செயல்படுத்தப்பட்டது இந்த திட்டம்.

விவசாயி

அதன்படி, தகுதியான விவசாயிகள் ஆண்டிற்கு 6,000 ரூபாய் பெற்று வந்தனர். விவசாயிகளின் நன்மைக்காக கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்தில், சுமார் 5 மாதத்திற்கு முன்பாக தமிழகம் முழுக்க போலி விவசாயிகளை இணைத்து கோடிக்கணக்கில் முறைகேடு செய்யப்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது. முறைகேட்டில் ஈடுபட்ட மற்றும் துணைபோன அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கிய வேளாண்மைத்துறை, போலியாக இந்த திட்டத்தில் விவசாயிகள் என சேர்க்கப்பட்டவர்களைக் கணக்கெடுத்து அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட தொகையையும் பறிமுதல் செய்யும் பணியில் ஈடுபடத் தொடங்கியது. சிலரின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டன.

தமிழகம் முழுவதும் இந்த முறைகேடு நடந்திருந்தாலும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் அதிக அளவில் முறைகேடு நடைபெற்றதாக கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 1,09,943 பேர் போலி விவசாயிகளாக சேர்க்கப்பட்டு முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 95,476 போலி விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட பணம், உரியவருடைய வங்கிக்கணக்கு மூலமாக அரசுக்கு திரும்பப் பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள 14,467 போலி விவசாயிகளிடமிருந்து பணம் திரும்பப் பெறப்படாமல் உள்ளதாகவும், இதை வசூலிப்பதற்கு போலி விவசாயிகள் பட்டியலிலுள்ள, பணத்தை திருப்பி செலுத்தாத நபர்களுக்கு நூறு நாள் வேலைத் திட்டத்தின் மூலம் வேலை வழங்கி அதன் மூலம் அவர்கள் திருப்பி செலுத்த வேண்டிய தொகையை பிடித்தம் செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

இது தொடர்பாக முழுமையாக அறிந்துகொள்ள விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வட்டாரங்களில் விசாரித்தோம். ``விழுப்புரம் மாவட்டத்தில், 1,09,943 போலி விவசாயிகள் பிரதம மந்திரி கிசான் சம்மன் திட்டத்தில் போலியாக விவசாயிகள் என பதிவு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுடைய வங்கி கணக்கில் செலுத்திய தொகை திரும்பப்பெறும் பணி துவங்கியது. அதன் மூலம் 95,476 நபர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்ட தொகை மீண்டும் வங்கி மூலமாகவே வாங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 9 வட்டாரங்களில் 14,467 பேரிடமிருந்து பணம் திரும்பப்பெறப்படாமல் உள்ளது.

Also Read: கிசான் சம்மான் திட்டத்தில் ரூ.1,364 கோடி முறைகேடு... அம்பலப்படுத்திய ஆர்.டி.ஐ தகவல்!

அதாவது, முகையூர் - 4,757, திருவெண்ணைநல்லூர் – 4,765, செஞ்சி – 1,173, விக்கிரவாண்டி – 1,193, வல்லம் -778, மரக்காணம் – 714, ஒலக்கூர் – 355, கோளியனூர் – 247, மயிலத்தில்- 154 பேர் உட்பட மொத்தமாக 14,467 பேரிடமிருந்து இன்னும் தொகை வாங்கப்பட வேண்டியுள்ளது. இதுவரை, திருப்பி செலுத்தாத சம்பந்தப்பட்ட நபரிடம் பலமுறை வேளாண்மைத்துறை அதிகாரிகள் நேரடியாக சென்று பேசி, பணத்தை வங்கி கணக்கில் செலுத்தும்படி கூறிவந்தனர். அப்போதும் செலுத்தாத சில மக்கள், `நாங்கள் வேலை இல்லாமல் கூலி வேலைக்குத் தான் போகிறோம். ஏழ்மையில் வாழ்ந்து வருகிறோம். ஊரக வேலைவாய்ப்பு திட்டம் (100 நாள் வேலை) மூலம் வேலை கொடுத்தீங்கன்னா, திருப்பி கட்டுவதற்கு வசதியாக இருக்கும்’ என்று கோரிக்கை வைத்துள்ளனர். அதன்பேரில், ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம் அவர்களுக்கு வேலை அளித்து, அதன் மூலமாக வரவேண்டிய தொகையை வசூலிக்கலாம்” எனும் பரிந்துரை மாவட்ட ஆட்சியரிடம் கூறப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை

இன்னும் அதற்கான செயல்படுத்தும் ஆணை வரவில்லை. பின்னர், கூட்டம் நடைபெறும் போது முடிவு செய்யப்படலாம். அப்படி முடிவு செய்யப்பட்டால் ஆட்சியர் இது குறித்து அறிவிப்பார். இதுவரை பெறப்பட்டுள்ள பணம் அனைத்துமே வங்கிக்கணக்கு மூலமாக மட்டுமே பெறப்பட்டுள்ளது. வரவுள்ள தொகையும் வங்கிக் கணக்கு மூலமாகவே வசூலிக்கப்படும். ஏனெனில் இதிலும் முறைகேடு நடந்து விடக்கூடாது என்பதற்காக” என்றனர்.



source https://www.vikatan.com/government-and-politics/agriculture/pm-kisan-scam-viluppuram-officials-new-plan-to-recover-amount

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக