உச்ச நீதிமன்றம் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதி கொடுத்ததைத் தொடர்ந்து இந்து அமைப்புகள் நாடு முழுவதும் ராமர் கோயில் கட்ட நிதி வசூலித்து வருகின்றன. இது தவிர அயோத்தி ராமர் கோயில் டிரஸ்ட் ஆன்லைன் மூலமும் பணம் வசூலித்து வருகிறது. பா.ஜ.க-வினர் வீடு வீடாகச் சென்று பணம் வசூலித்து வருகின்றனர். இது பல்வேறு மட்டத்தில் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து சிவசேனா தலைவரும் மகாராஷ்டிரா முதல்வருமான உத்தவ்தாக்கரே தனது கட்சியினரை எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பேசுகையில் மேற்கண்ட தகவலை தெரிவித்தார். ``ராமர் பெயரில் மோசடி சக்திகள் பணம் வசூலித்துக்கொண்டிருக்கின்றன.
சிவசேனா தொண்டர்கள் மக்களிடம் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்’’ என்று பா.ஜ.க-வை உத்தவ்தாக்கரே மறைமுகமாகச் சாடினார். ``பிரச்னைகளை சந்திக்கும் சாமானிய மக்கள் சிவசேனாவிடம் வருகின்றனர். கட்சிக்கும் பொதுமக்களுக்கும் உள்ள உறவைப் பராமரிப்பது அவசியம். சிவசேனா கூட்டணி அரசின் சாதனைகள் குறித்து கட்சித் தொண்டர்கள் பொதுமக்களிடம் தெரிவிக்கவேண்டும். பொதுமக்களின் எதிர்பார்ப்புகள் குறித்து அரசிடம் தெரிவிக்க வேண்டும். கட்சியை வளர்க்க சிவசேனா சார்பில் வரும் 22-27-ம் தேதி வரை மக்களை சென்றடையும் `சிவ் சம்பர்க்’ பிரசாரம் மேற்கொள்ளப்படும்’’ என்று தெரிவித்தார். வரும் ஒன்றாம் தேதி சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க இருப்பதால் கூட்டணிக்கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை பகுதி வாரியாக சந்தித்து வருகிறார். உத்தவ்தாக்கரே, அவர்களை தனது வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்து அவர்களின் குறைகள், தொகுதியில் நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்து கேட்டு வருகிறார்.
Also Read: குஜராத்தைச் சேர்ந்த உள்துறை அமைச்சர் சிவசேனாவுக்குச் சவால்விடத் துணிந்துவிட்டார்! - உத்தவ் தாக்கரே
சிவசேனாவும், பா.ஜ.க-வும் கடந்த 2019ம் ஆண்டு வரை கூட்டணி கட்சிகளாகத்தான் இருந்தன. சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு ஆட்சியமைப்பதில் இருகட்சிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கூட்டணி உடைந்தது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் துணையோடு சிவசேனா ஆட்சியமைத்துள்ளது. சிவசேனாவின் ஆட்சியைக் கவிழ்க்க மேற்கொண்ட முயற்சிகள் பலனலிக்காத காரணத்தால் தற்போது பா.ஜ.க அமைதியாக இருக்கிறது.
தற்போது ஒவ்வொரு வீடாகச் சென்று ராமர் கோயிலுக்கு நிதி திரட்டுவதன் மூலம் மக்களிடம் நேரடித் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்ற திட்டத்துடன் ராமர் கோயிலுக்கு நிதி திரட்டி வருகிறது. மார்க்கெட்டுகளில் எல்லாம் ராமர் படத்துடன், `கோயில் கட்ட நிதி கொடுங்கள்’ என்று கூறிக்கொண்டு ஏராளமானோர் வந்து கொண்டிருக்கின்றனர். ராமர் கோயிலுக்கு நிதி கேட்டு கொடுக்காதவர்கள் வீடுகளில் பிரத்யேக எழுத்துக்களை எழுதி வைத்து செல்வதாக கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றம்சாட்டி இருந்தார்.
source https://www.vikatan.com/news/politics/maharashtra-cm-uddhav-thackeray-slams-bjp-in-mla-meet
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக