திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தை அடுத்த புது நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். காய்கறி வியாபாரம் செய்து வரும் மாரியப்பனுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். அவரது மகன் கணேஷ் (17) செங்குன்றத்தை அடுத்த எம்.ஏ நகரில் உள்ள தனியார்ப் பள்ளி ஒன்றில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், மாரியப்பன் மகன் கணேசன் நேற்று வழக்கம் போல் காலை பள்ளிக்குச் சென்று விட்டு மாலை பள்ளியிலிருந்து நண்பர்களுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். அப்போது 4.30 மணி அளவில் சாலையோரத்தில் நின்றுகொண்டிருந்த வெள்ளை நிற ஸ்விஃப்ட் காரில் இருந்து இறங்கிய 5 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று நண்பர்களுடன் சென்று கொண்டிருந்த கணேசனை அடித்து இழுத்துச் சென்றுள்ளது.
அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் அந்த கும்பலிடம் இருந்து கணேசனைக் காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால், அவர்களைக் கீழே தள்ளி விட்டு அந்த கும்பல் கணேசனை காருக்குள் தள்ளி விட்டு அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளது. அப்போது கணேசனின் நண்பர்கள் காரில் இருந்து ஒருவரை மட்டும் கீழே இழுத்துத் தள்ளிப் பிடித்து வைத்தனர். அதனையடுத்து, சுதாரித்துக் கொண்ட கடத்தல் கும்பல் அங்கிருந்து காரை எடுத்துக்கொண்டு பறந்துள்ளது.
விசாரணையில், பிடிபட்ட நபர் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் (25) என்று தெரியவந்தது. மேற்கொண்டு போலீஸார் விசாரித்ததில் சந்தோஷ், தனது நண்பர் பூபதி என்பவருக்காக மாரியப்பன் மகன் கணேசனைக் கடத்தியது தெரியவந்தது. குடும்ப பிரச்னையில் நண்பனின் மனைவி குடும்பத்தைப் பழிவாங்கத் திட்டமிட்டுக் கடத்தியது விசாரணையில் அம்பலமானது.
இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். ``மனைவி சண்டை போட்டுப் பிரிந்த சென்ற கோபத்தில் நண்பர்களுடன் சேர்ந்து பூபதி, அவர் மனைவி குடும்பத்தினரைப் பழிவாங்கத் திட்டமிட்டுள்ளார். அதன் படி, மனைவியின் தம்பி கணேசனைக் கடத்தி அவர் குடும்பத்தினரை மிரட்டப் பூபதி இப்படிச் செய்தது விசாரணையில் தெரியவந்தது.
Also Read: ஹைதராபாத்: வேனில் கடத்தல்; செல்போனில் தகவல்! - மாணவியை உடனடியாக மீட்ட போலீஸ்
மாணவர் கணேஷ் பத்திரமாக இருக்கிறார். பிடிபட்ட கும்பல் கைதுசெய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது" என்றனர்.
மனைவியுடனான குடும்ப பிரச்னையில் ஆள் வைத்து மனைவியின் தம்பி கடத்தப்பட்ட சம்பவம் செங்குன்றம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
source https://www.vikatan.com/news/crime/red-hills-police-arrest-man-over-wifes-brother-kidnapping
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக