Ad

சனி, 6 பிப்ரவரி, 2021

`கூட்டுறவு விவசாயக் கடன்கள் ரத்து தேர்தல் சுயலாபத்துக்கான அறிவிப்புதான்’ - ஸ்டாலின்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் `உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி, ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நட்டாத்தி ஊராட்சியில் நடந்தது. மேடை ஏறுவதற்கு முன்பாக திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் சார்பில் தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு வெட்டிவேரால் ஆன வேல், சேவல்கொடி அளிக்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர், மேடை ஏறிய ஸ்டாலின், வழக்கம்போல், மக்கள், தொண்டர்களைப் பார்த்து கைகூப்பி, பின்னர் அப்படியே மக்கள் இருக்கும் பகுதிக்கு நடந்தார். செல்ஃபி எடுத்தல், கை குலுக்குதல், குழந்தைத் தூக்கிக் கொஞ்சுதல் ஆகியவற்றை முடித்துவிட்டு மேடை ஏறுவதற்கு முன், வயதான மூதாட்டி ஒருவர் ஸ்டாலினை அழைத்து கன்னத்தை தொட்டு நெற்றியில் முத்தமிட்டு ``நீதான்யா அடுத்த முதல்வரு” என உரக்கச் சொன்னார்.

ஸ்டாலினுக்கு முத்தமிட்ட மூதாட்டி

மகிழ்ச்சியில் மின்னிய ஸ்டாலின் அதே உற்சாகத்துடன் மேடை ஏறினார்.``தலைவரின் வாயிலிருந்து உதிரும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் மத்தியிலும், மாநிலத்திலும் சட்டமாகிறது” எனச் சொல்லி வரவேற்றுப் பேசிய, தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளரும் திருச்செந்தூர் தொகுதியின் எம்.எல்.ஏ-வுமான அனிதா ராதாகிருஷ்ணன், நினைவுப்பரிசாக வெள்ளியிலால் ஆன வாளை அளித்தார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க-வுக்கு உட்பட்ட திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளைச் சேர்ந்த மக்களும், தொண்டர்களும் திரண்டிருந்தனர்.

இவர்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு மேடையில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் போடப்பட்டது. அதிலிருந்து குலுக்கலில் 7 பேரின் கோரிக்கை மனுக்கள் எடுக்கப்பட்டு அவர்களின் பெயர் வாசிக்கப்பட்டது. அந்ததந்த நபர்கள் எழுந்து தங்கள் பகுதியின் பிரச்னைகளைப் பற்றி சுருக்கமாகப் பேசினர். திருச்செந்தூரைச் சேர்ந்த சுமதி, ``திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பிரகாரத்துல மோர் வித்துக்கிட்டிருந்த எங்க அம்மா பேச்சியம்மாள், ரெண்டு வருசத்துக்கு முன்னால, திடீரென கிரிவலப் பிரகாரம் இடிஞ்சு விழுந்ததுல இறந்து போயிட்டாங்க.

ஸ்டாலினுக்கு வெள்ளி வாள் நினைவுப்பரிசு வழங்கிய அனிதா ராதா கிருஷ்ணன்

நானும் என் தம்பியும் பாட்டியோட பாதுகாப்புலதான் வளர்ந்துக்கிட்டு இருக்கோம் எங்க படிப்புக்கு இதுவரை எந்த உதவியும் கிடைக்கல. படிப்புக்கு உதவி தேவை. அதோட, இடிஞ்சு விழுந்த மண்டபத்துக்குப் பதிலா இப்போ வரைக்கும் புது மண்டபம் கட்ட எந்த நடவடிக்கையும் இல்ல” எனப் பேசினார். அதற்குப் பதிலளித்துப் பேசிய ஸ்டாலின், ``தி.மு.க-வை இந்துக்களுக்கு எதிரான கட்சி என விமர்சிக்கிறார்கள். ஓடாத தேரை திருவாரூர் கோயிலில் ஓட வைத்தவர்தான் கலைஞர். தி.மு.க ஆட்சியில்தான் அதிகமான கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் கோயில்ல கிரிப்பிரகாரம் இடிஞ்சு விழுந்து ரெண்டு வருசத்துக்கு மேல ஆகியும் இதுவரை புதிய மண்டபம் கட்டுவதற்கு ஏன் இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை? `கோயில்கள் கூடது என்பது அல்ல. அது கொடியவர்களின் கூடாரமாக ஆகிவிடக்கூடாது’ என, `பராசக்தி’ திரைப்பத்துடல கலைஞர் சொன்ன வசனத்தை மீண்டும் நினைவுபடுத்துகிறேன்” என்றவர் சுமதி, அவரது சகோதரரின் கல்விக்கு உதவுவதாகக் கூறினார். சாலைவசதி, குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு, பேருந்து வசதி, தூண்டில் வளைவுப்பாலம், நூலகம் என மற்றவர்கள் தங்கள் பகுதியின் கோரிக்கைகள் குறித்துப் பேசினார்கள்.

செல்பி எடுத்த மகளிரணி நிர்வாகி

தொடர்ந்துப் பேசிய அவர், ``இந்த மாவட்டத்துல கடம்பூர் ராஜூன்னு ஒரு அமைச்சர் இருக்கார். அவர் மனசுல முதலமைச்சர்னு நினைச்சுக்கிட்டு நினைச்சதெல்லாம் பேசிக்கிட்டிருக்கார். `தூத்துக்குடி தொகுதி எம்.பி., கனிமொழி, எம்.பியாகி ரெண்டு வருசமாச்சு. என்னென்ன திட்டங்களை நிறைவேற்றியிருக்கார்னு சொல்ல முடியுமா?’ன்னு ரெண்டு நாளுக்கு முன்னால ஒரு பேட்டி கொடுத்திருக்கார். தொகுதியில என்னென்ன செஞ்சுருக்கேன்னு ஒரு பட்டியலே வச்சிருக்காங்க கனிமொழி.

அவங்க , ரெண்டு வருசத்துல செஞ்சதை விளக்க ரெண்டு மணி நேரத்துக்கும் மேல ஆகும். ஆனா, நீங்க தொகுதி எம்.எல்.ஏவா உங்க கோவில்பட்டி தொகுதிக்கு என்ன செஞ்சீங்க? மாவட்ட அமைச்சரா மாவட்டத்துக்கு என்ன செஞ்சீங்கன்னு சொல்ல முடியுமா? முதல்வர்போல பேசி, கேள்வி எழுப்பி பேட்டி கொடுக்கும் நீங்க, தூத்துக்குடியில துப்பாக்கிசூடு நடந்தபோது எங்கப் போனீங்க? சாத்தான்குளத்துல தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தின்போது எங்க போனீங்க மிஸ்டர் கடம்பூர் ராஜூ?, கொரோனா காலத்துலயும் தியேட்டர் உரிமையாளர்களிடம் பேரம் பேசியது விவகாரமெல்லாம் எங்களுக்குத் தெரியும்” என்றார். இறுதியாக, முதல்வர் பழனிசாமி குறித்து பேச ஆரம்பித்தார். ``கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி கடன்களை தள்ளுபடி செய்து சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார் முதல்வர் பழனிசாமி. ஆனால், இதே கோரிக்கையை விவசாயிகள் அரசிடம் கூறியபோது ஏன் கொண்டுகொள்ளவில்லை?

கலந்து கொண்டவர்கள்

விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது என உயர் நீதிமன்றத்திலேயே கூறிவிட்டு தற்போது திடீரென விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்வதாகக் கூறவேண்டிய அவசியம் என்ன?`தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளின் கடன்களை ரத்து செய்வோம்’ என, கடந்த சில நாள்களுக்கு முன்பு நான் கூறிய பிறகுதான், முதல்வர் பழனிசாமி கடன் தள்ளுபடி குறித்து அறிவித்துள்ளார். இது, விவசாயிகள் நலனின் மீதான அக்கறையான அறிவிப்பல்ல. தேர்தலைக் கருத்தில் கொண்ட சுயநலமான அறிவிப்புதான். நான் என்னவெல்லாம் அறிவிக்கிறோனோ அதையெல்லாம் முதல்வர் பழனிசாமி பின்பற்றி அறிவிப்பாக அறிவிக்கிறார். ஆனால், இந்த அறிவிப்பின் பின்னணி குறித்து மக்கள் நிச்சயம் புரிந்து கொள்வார்கள்” என்றார்.



source https://www.vikatan.com/news/politics/dmk-chief-stalin-slams-admk-government-in-thoothukudi-meet

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக