Ad

வியாழன், 4 பிப்ரவரி, 2021

சென்னை டெஸ்ட் : இங்கிலாந்து முதல் பேட்டிங்... இரண்டு ஆஃப் ஸ்பின்னர்களோடு இந்தியா! #INDvENG

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியிருக்கிறது. கிட்டத்தட்ட ஓர் ஆண்டுக்குப்பிறகு இந்தியாவில் நடக்கும் முதல் சர்வதேசப்போட்டி என்பதோடு, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இடம்பிடிப்பதற்கான முக்கியமானப் போட்டி என்பதால் உலக கிரிக்கெட் ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனமும் சென்னை டெஸ்ட்டின் மீது குவிந்திருக்கிறது.

மூன்றாவது நாளுக்குமேல் சேப்பாக்கம் பிட்ச் முழுக்க முழுக்க பெளலிங்கிற்கு சாதகமானப் பிட்சாக மாறலாம் என்பதால் டாஸ் வென்றதும் முதல் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்.

இந்திய கேப்டன் கோலி இரண்டு ஆஃப் ஸ்பின்னர்களோடு இந்த டெஸ்ட்டில் களமிறங்கியிருக்கிறார். மண்ணின் மைந்தர்களான அஷ்வினும், வாஷிங்டனும் ஸ்பின் ஏரியாவை கவனிக்க, வேகப்பந்து வீச்சுக்கு இஷாந்த் ஷர்மா, ஷபாஸ் நதீம், ஜஸ்பிரித் பும்ராவைக் களமிறக்கியிருக்கிறார்கள். இந்தியாவின் நம்பர் 1 பெளலரான ஜஸ்பிரித் பும்ரா இந்திய மைதானத்தில் விளையாடும் முதல் சர்வதேச டெஸ்ட் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

ரோஹித் ஷர்மா, ஷுப்மான் கில், செதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்கியா ரஹானே, ரிஷப் பன்ட் என்பதுதான் இந்தியாவின் பேட்டிங் ஆர்டர்.

இங்கிலாந்தைப் பொறுத்தவரை கேப்டன் ஜோ ரூட்டுக்கு இது 100வது டெஸ்ட் போட்டி. இலங்கையில் சமீபத்தில் நடந்துமுடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக ஆடிய ஜோ ரூட், சென்னையிலும் ரன்களைக் குவிப்பார் என எதிர்பார்க்கலாம். இங்கிலாந்து, இளம் வீரரான ஓலி போப்பை களமிறக்கியிருக்கிறது. அடுத்த ஜோ ரூட் என அடையாளப்படுத்தப்படும் ஓலி போப்பும் சென்னை பிட்சில் சாதிப்பார் என்றே எதிர்பார்க்கலாம்.

இங்கிலாந்து அணியில் ஸ்டூவர்ட் பிராட் இடம்பிடிக்கவில்லை. இடது கை ஆர்த்தோடாக்ஸ் ஸ்பின்னரான ஜேக் லீச் மற்றும் ஆஃப் ஸ்பின்னரான டாம் பெஸ் என இரண்டு ஸ்பின்னர்கள் இங்கிலாந்து அணியில் இடம்பிடித்திருக்கிறார்கள். ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை அணியில் கொண்டிருக்கிறது இங்கிலாந்து.

பேட்டிங்கில் இருந்து பெளலிங்கிற்கு சாதகமாக மாறும் சென்னை பிட்சில் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்!



source https://sports.vikatan.com/cricket/england-opts-to-bat-first-in-chennai-test

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக