செய்ய பரத்துவமாய் சீரார் வியூகமாய் துய்ய விபவமாய்த் தோன்றியிவற்றுள் - எய்துமவர்க்கு இந்நிலத்தில் அர்ச்சாவதாரம் எளிதென்றான் பன்னு தமிழ்மாறன் பயின்று
- திருவாய்மொழி நூற்றந்தாதி
பக்தர்கள் தன்னை அடைவதற்கு ஏதுவாக ஐந்துவகையான நிலைகளில் பெருமாள் அருள்பாலிக்கிறான் என்கிறது சாஸ்திரம். பரத்வம், வியூகம், விபவம், அந்தர்யாமித்வம், அர்ச்சை என்னும் ஐந்து நிலைகளில் அருள்கிறான் அந்தப் பரமன். இந்த ஐந்து நிலைகளிலும் பக்தர்கள் எளிதில் பற்றிக்கொண்டு முக்தி பெற ஏதுவானது அர்ச்சாவதாரம் என்கிறார்கள் ஞானிகள். பெருமாள் 108 திவ்யதேசங்களில் அமர்ந்த, நின்ற, கிடந்த கோலத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பவன். இந்த மூன்று கோலங்களில் பெருமாள் காட்சிகொடுக்கும் தலங்களும் சில உண்டு. அவற்றுள் சிறப்புடைய ஒரு தலம், மதுரை கூடலழகர் கோயில். திவ்ய தேச வரிசையில் 47-வது திருத்தலம்.
சங்க இலக்கியங்களில் ஒன்றான பரிபாடல் ‘இருந்தையூர் இருந்த செல்வ’ என்று சுட்டுவதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் ‘இது வைகைக்கரைக் கண்ணது’ எனக் குறிப்பிடுகிறார். சிலப்பதிகாரத்தில் 'உவணச்சேவல் உயர்த்தோன் நியமம்' - கருட சேவலைக் கொடியாகக் கொண்ட திருமால் ஆலயம் என்று குறிப்பிடுவதும் இந்த ஆலயத்தைத்தான் என்றும் சொல்கிறார்கள். பக்தி இலக்கிய காலத்தில் திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், பெரியாழ்வார் ஆகியோர் போற்றிப்பாடியுள்ள தலம் இது.
கோயில் நகரில் கொலுவிருக்கும் பெருமாள்!
திரும்பும் திசையெங்கும் கோயில்கள் என்பதால் கோயில் நகரம் என்றும் தினம் தினம் திருவிழாக் காண்பதால் திருவிழா நகரம் என்றும் மதுரைக்குப் பெயர் உண்டு. அதை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்திருக்கும் ஆலயங்களில் கூடலழகர் பெருமாள் ஆலயம் முக்கியமானது. ஐந்து நிலை ராஜகோபுரம், எட்டு பிராகாரங்கள், ஏராளமான சந்நிதிகள், மூன்று தளங்களும் ஐந்து சிகரங்களும் கொண்டு அதிசயிக்கச் செய்யும் அஷ்டாங்க விமானம் எனக் காண்போர் வியக்கும் வகையில் அமைந்துள்ளது இந்த ஆலயம்.
இந்த ஆலயத்தின் மூலவர் கூடலழகர். பூதேவி ஶ்ரீதேவி சமேதராக அமர்ந்த கோலத்தில் அருள்பாலிப்பவர். கருவறைக்கு மேலே 125 அடி உயரம் கொண்ட அஷ்டாங்க விமானம் அமைந்துள்ளது. அதன் முதல் மாடியில் பெருமாள் நின்ற கோலத்திலும் இரண்டாம் மாடியில் சயனக்கோலத்திலும் காட்சி தருகிறார் பெருமான். இரண்டு மாடிகளிலும் இருக்கும் கருவறையைச் சுற்றி சிறிய பிராகாரம் ஒன்றும் உள்ளது. சயனக்கோலப்பெருமானுக்கு அந்தர வானத்துப் பெருமாள் என்பது திருநாமம். பெரியாழ்வார் பல்லாண்டு பாடியது இந்த அந்தர வானத்துப் பெருமானைக் கண்டே என்கிறது தல புராணம்.
பெரியாழ்வார்க்கு அருளிய பெரியோன்
வல்லபதேவன் என்னும் பாண்டியமன்னன் மதுரையை ஆண்டுவந்தான். அவன், வீடுபேறு தரவல்ல பரம்பொருள் யார் என்றும் அவனை அடைய உகந்த மார்க்கம் எது என்றும் அறிய விரும்பினார். ஞானியர் பலரையும் அழைத்துத் தன் சந்தேகத்தைக் கேட்டான். அங்கே உயர்ந்த ஒரு கம்பம் நட்டு அதில் பொற்கிழியும் கட்டிவைக்கப்பட்டது. 'யார் உண்மைப் பொருளை உரைக்கிறார்களோ அவர்களின் கைக்கு இந்தப் பொற்கிழி சென்று சேரும். இது இறைவனின் கட்டளை' என்று உரைத்தான். பல சமயத்தவரும் கூடி விவாதம் செய்தனர். ஆனால் பொற்கிழி அசைந்தபாடில்லை. இதற்கு முடிவுதான் என்ன என்று மன்னன் கவலைப் பட்டுக்கொண்டிருந்தபோது அவன் கனவில் தோன்றிய கூடலழகர், 'ஶ்ரீவில்லிபுத்தூரில் இருக்கும் விஷ்ணு சித்தரை அழைத்துவந்தால் உண்மைப் பொருள் அறியலாம்' என்று உரைத்து மறைந்தான்.
மன்னனும் விஷ்ணு சித்தரை அழைத்துவர ஆள்களை அனுப்பினான். அவரும் வடபத்ர சாயியிடம் உத்தரவு கேட்டுக்கொண்டு மதுரை வந்தார். விவாத சபையில் பல மதங்களைச் சேர்ந்தவர்களும் கூடியிருந்தனர். அவர்கள் நடுவே நின்ற விஷ்ணு சித்தர், 'திருமாலே பரம்பொருள். அவரை அடைவதுவே வாழ்வில் லட்சியம்' என்றும் உரைத்தார். அவர் இதைச் சொன்னபோது பொற்கிழி இருந்த தாங்கியிருந்த கம்பு வளைந்து பொற்கிழி அவர் கைக்கு வந்தது.
மன்னன் உண்மையை அறிந்துகொண்டு, விஷ்ணு சித்தருக்கும் பல்வேறு பரிசில்களை வழங்கினான். யானை மீது அவரை அமரச்செய்து வீதியுலாவரவும் ஶ்ரீவில்லிபுத்தூரில் விடவும் ஏற்பாடு செய்தான். ஊரே கூடியிருந்தது. தன் பிள்ளையான விஷ்ணு சித்தரின் வெற்றி உலாவைக் காணும் ஆவல் கூடலழகருக்கும் ஏற்பட்டது. தேவியரோடு கருட வாகனத்தில் ஏறி ஆகாச மார்க்கமாக வந்தார். அப்போது விஷ்ணு சித்தரும் மன்னனும் ஊர் மக்களும் அவரைக் கண்ணாரக்கண்டனர்.
பெருமாளின் பேரெழிலில் மயங்கிய விஷ்ணு சித்தர் அன்பின் மிகுதியால், திரளான மக்கள் பெருமாளின் அழகை ரசிக்கிறார்களே... பெருமாளுக்குக் கண்பட்டுவிடுமோ என்று வருந்தினாராம். உடனே, அந்தக் கண்ணேறு அகலுமாறு பெருமாளை வாழ்த்திப்பாட ஆரம்பித்தார்.
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு,
பலகோடி நூறாயிரம்,
மல்லாண்ட திண் தோள் மணிவண்ணா! உன்
சேவடி செவ்வி திருக்காப்பு
என்று மங்களக் காப்பிட்டுத் திருப்பல்லாண்டு பாடினார் விஷ்ணு சித்தர். பெருமாளையே வாழ்த்திப்பாடியதால் அவர் 'பெரியாழ்வார்' என்று போற்றப்பட்டார் என்கின்றன சமய நூல்கள். பெரியாழ்வார் போற்றிப்பாடிய அந்த அந்தரவானத்துப் பெருமாள் கூடலழகர் கோயிலில் வாசம் செய்யும் பெருமாளே என்கிறது தலபுராணம்.
ஆலய தரிசனம்
பெருமாள், நாச்சியார், ஆண்டாள் ஆகிய முக்கியமாக மூன்று சந்நிதிகள் இந்த ஆலயத்தில் உள்ளன. கோயிலுக்கு வெளியே ஒரு பிராகாரமும் உள்ளே பெருமாள் கோயிலுக்கு இரண்டு சுற்றும் நாச்சியார் கோயிலுக்கு ஒரு சுற்றும் பிராகாரம் உள்ளன. பெருமாள் கோயிலின் நடுமண்டபத்தில் கருடன், அனுமன், சேனை முதலியார், ராமர், கிருஷ்ணர் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. விமானத்தின் இரண்டாம் தளத்தில் பள்ளிகொண்ட பெருமாள் சந்நிதியைச் சுற்றி ஒரு பிராகாரம் உள்ளது. பிற பெருமாள் கோயில்களில் பெரும்பாலும் காணப்படாத நவகிரக சந்நிதி இந்த ஆலயத்தில் காணப்படுகிறது. நாச்சியார் கோயிலின் விமான உள் மண்டபம் சலவைக் கற்களால் ஆனது. முன்புறம் இருக்கும் 14 தூண்களில் இரண்டு தூண்கள் இசைத் தூண்கள்.
கோயிலுக்கு இரண்டு தீர்த்தங்கள் உள்ளன. ஒன்று ஹேம தீர்த்தம். இது வசந்த மண்டபத்துக்கு எதிரே உள்ளது. மற்றொன்று தெப்பக்குளம். இது கோயிலுக்கு வடக்கே டவுன்ஹால் ரோட்டில் உள்ளது. இதில்தான் மாசிமாத தெப்போற்சவம் நடைபெறும்.
Also Read: மதுரை, மூதூர் மாநகரத்தின் கதை - 3 | தேனூர் மண்டபம் வைகை ஆற்றுக்குள் வந்த கதை தெரியுமா?
கல்வெட்டுகள்
இந்தக் கோயிலில் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுப் படியெடுக்கப்பட்டுள்ளன (556, 557, 558). விஜயநகரப் பேரரசர்கள் காலக் கல்வெட்டுகளும் நாயக்கர்காலக் கல்வெட்டுகளும் இந்த ஆலயத்தில் காணப்படுகின்றன. கோயிலின் அஷ்டாங்க விமானத்தின் அடித்தளம், அர்த்தமண்டபம், மகா மண்டபங்களின் உட்புறம், பெரிய திருச்சுற்றுச்சுவர் ஆகிய இடங்களில் பல கல்வெட்டுக்கள் உள்ளன, இவற்றில் இக்கோயில் தொடர்பான ஐந்து தமிழ் கல்வெட்டுகள் அஷ்டாங்க விமானத்தின் அடித்தளத்திலும், அதன் முன்புள்ள மண்டபங்களிலும் உள்ளன.
இந்தக் கல்வெட்டுகளின் மூலம் கூடலழகர் கோயிலுக்கு வழங்கப்பட்ட கொடைகளை அறிந்துகொள்ள முடியும். கோயிலில் நித்யபடி நைவேத்தியத்துக்காகப் பல கிராமங்கள் வழங்கப்பட்ட செய்திகளைத் தெரிவிக்கின்றன கல்வெட்டுகள். அதேபோன்று நித்திய பூஜைக்கு அமுதுபடியும் பொற்காசும் நாயக்க மன்னர்களின் காலத்தில் வழங்கப்பட்ட செய்திகளையும் கல்வெட்டுகளின் மூலம் தெரியவருகின்றன.
பெருமாள்: ஶ்ரீ கூடலழகர்
உற்சவர்: வியூக சௌந்தர்ராஜப் பெருமாள்
தாயார்: ஶ்ரீ மதுரவல்லித் தாயார்
விமானம்: அஷ்டாங்க விமானம்
பிரார்த்தனை: திருமணத்தடை நீங்குதல், குழந்தைப்பேறு, கல்வி மேன்மை ஆகியன இந்தத் தலத்தின் சிறப்புப் பிரார்த்தனைகள் ஆகும். இங்கு தாயாருக்குப் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் வழக்கமும் பக்தர்களிடையே உள்ளது.
இடம்: மதுரை ரயில் நிலையத்திலிருந்து 2 பர்லாங் தூரத்தில் உள்ளது இந்த ஆலயம்.
source https://www.vikatan.com/spiritual/temples/shri-koodal-azhagar-temple-history-and-significance
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக