நீலகிரி மாவட்டம் கூடலுார் ஓவேலி ஆத்துார் குயின்ட் பகுதியில் காட்டு யானைகளை கண்காணிக்கும் பணியில் நேற்று முன்தினம் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். நள்ளிரவு 1 மணியளவில் இந்தப் பகுதியை வனத்துறை வாகனம் கடக்கையில், சில பேர் தலை தெறிக்க ஓடியிருக்கிறார்கள். சந்தேகமடைந்து சுதாரித்த வனத்துறையினர், இரண்டு நபர்களை துரத்திப் பிடித்தனர்.
அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், கடமான் இறைச்சியை மறைத்து வைத்திருப்பதைக் கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.இவர்களிடம் மேற்கொண்ட தொடர் விசாரணையில் மேலும் 4 பேருக்கு இதில் தொடர்பிருப்பதையும் உறுதி செய்தனர். இது மட்டும் அல்லாது கைதான பாவா அ.தி.மு.க., நீலகிரி மாவட்ட வர்த்தக அணி துணைச் செயலாளராக இருப்பதும் தெரியவந்தது.
இது குறித்து நம்மிடம் பேசிய கூடலூர் வனத்துறையினர்,``இந்தப் பகுதியில் இறந்து கிடந்த கடமான் ஒன்றின் இறைச்சியை சமைத்து உண்பதற்காக, ஆறு பேர் எடுத்து சென்றனர். இருவரை கைது செய்து, 18 கிலோ கடமான் இறைச்சியைப் பறிமுதல் செய்துள்ளோம். அவர்கள் கொடுத்த தகவல் அடிப்படையில், மேலும் நான்கு பேரைக் கைது செய்தோம். இவர்களுக்கு மொத்தம் 90,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது" என்றனர்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த உள்ளூர் நபர் ஒருவர் பேசுகையில்,``அன்று இரவு காட்டுக்குள் இரண்டு முறை வெடி சத்தம் கேட்டது. பயங்கர வெளிச்சத்துடன் ஒரு வண்டி வேகமாகப் போனது. வனத்துறை வருவதைப் பார்த்து சிலர் ஓடினர். அதில் ஒருவரிடம் துப்பாக்கி இருந்தது. அனைவரும் தப்பித்து ஓடிவிட இருவரை மட்டுமே வனத்துறையினர் பிடித்து அழைத்துச் சென்றனர்"என்றார்.
இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் சகாதேவன்,``அ.தி.மு.க-வின் நீலகிரி மாவட்ட வர்த்தக அணி துணைச் செயலாளர் மற்றும் அவரது கூட்டாளிகள், ஒரு கட்டுமான் மற்றும் குறைக்கும் மான் என இரண்டு மான்களை வேட்டையாடிருப்பதாகத் தெரிகிறது. கையும் களவுமாக சிக்கிய குற்றவாளிகளை ஆளுங்கட்சி தலையீடு காரணமாக தப்பிக்கவைத்து இருப்பதாக தெரிகிறது. உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காவிட்டால் வனத்துறையைக் கண்டித்து கூடலூரில் போராட்டம் நடத்தப்படும்" என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/controversy/gudalur-forest-department-in-deer-hunting-arrest-controversy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக