Ad

வெள்ளி, 14 ஏப்ரல், 2023

``அதானி பிரச்னையை பேசினாலே பயந்து நடுங்குகிறார்கள்" - மத்திய அரசை சாடிய ரவிக்குமார் எம்.பி

அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, நேற்று மாலை விழுப்புரம் பழைய பேருந்துநிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு வி.சி.க-வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின், 'சனநாயகம் காப்போம்' என்ற பெயரில் விழுப்புரம் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் தலைமையில், புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலை வரை பேரணியாக சென்றனர். இதற்காக விழுப்புரம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் சுமார் 3,000 வி.சி.க-வினர் திரண்டு வந்திருந்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரவிக்குமார், "அதானி முறைகேடு காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் நிலைகுலைந்து போயிருக்கிறது. இந்த நிலையிலும் எல்.ஐ.சி என்கிற பொதுத்துறை நிறுவனத்துடைய பணத்தை எல்லாம் எடுத்து, மீண்டும் அதானியுடைய நான்கு நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறார்கள். இந்த அதிர்ச்சிகரமான உண்மை, இரண்டு நாள்களுக்கு முன்னே வெளியாகி இருந்தது. தொடர்ந்து அதானியுடைய முறைகேடுகளை மூடி மறைப்பதிலும், அவரைக் காப்பாற்றுவதிலும் நரேந்திர மோடி அரசு ஈடுபட்டிருக்கிறது.

வி.சி.க பேரணி - விழுப்புரம்

இது இந்திய பொருளாதாரத்திற்கு மட்டுமல்ல, இந்திய ஜனநாயகத்திற்கே மிகப்பெரிய சவாலாக, அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. ஆகவேதான் எழுச்சி தமிழரின் வழிகாட்டுதலின்படி, 'சனநாயகம் காப்போம்' என்ற பெயரிலே இன்று விழுப்புரத்தில் மாபெரும் பேரணி நடத்தியிருக்கிறோம். எனவே, மத்திய அரசு அதானிக்கு ஆதரவான தனது நிலைபாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். அதானி மீது விசாரணை நடத்த மோடி அரசு முன் வர வேண்டும் என வலியுறுத்துகிறோம். 

இந்தியாவிலேயே மிகப்பெரிய ஊழல் என்று சொல்லப்படுகின்ற அதானி ஊழலிலே, பா.ஜ.க இன்று சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது.

 'இதைப் பற்றி நாடாளுமன்றத்தில் பேசிவிடுவார்கள், அது பதிவாகிவிடும்' என்ற அச்சத்திலே தான் வரலாற்றிலே இல்லாத அளவிற்கு பட்ஜெட் கூட்டத்தொடரையே ஒரு நாள் கூட நடத்தாமல் ஒட்டுமொத்த கூட்டத் தொடரையும் காலி செய்திருக்கிறார்கள். அதானி பிரச்னையை பேசியதற்காகத்தான் ராகுல் காந்தியின் பதவியைப் பறித்திருக்கிறார்கள். 

பேரணிக்காக பேருந்து மீது அமர்ந்து வந்த வி.சி.க-வினர்

அதானி பிரச்னையை பேசினாலே பயந்து நடுங்குகிறார்கள். அந்த மெகா ஊழலை மறைப்பதற்காக பல தில்லுமுல்லுகளை அவர்கள் செய்கிறார்கள். அதனுடைய ஒரு பகுதி தான் அண்ணாமலையின்  செயல். அதற்கு திமுக உரிய பதிலை கொடுக்கும். ஆளுநர் தமிழைப் பற்றி பேசியிருப்பது அவர்கள் முன்னெடுத்திருக்கும் புதிய அவதாரம், புதிய நாடகம். ஓட்டு வாங்குவதற்காக எல்லாவித தந்திரங்களையும் பாஜக, ஆர்.எஸ்.எஸ் செய்யும். அதனுடைய வெளிப்பாடு தான் ஆளுநர் பேசியது. நேற்றைய தினம் பிரதமர் மோடி அவர்கள், மத்திய அமைச்சர் எல்.முருகன் வீட்டிற்கு சென்று தமிழ் புத்தாண்டு கொண்டாடி, 'தமிழ் மொழிபோல பழமையான மொழி வேறு ஏதும் இல்லை' என்று புகழ்ந்து பாராட்டி இருக்கிறார். 

அதானி - மோடி

இவர்களுக்கு உண்மையிலேயே தமிழ் மொழி மீது பற்றிருந்தால் நான் ஒன்றே ஒன்றை கேட்கிறேன். ஒரே நாளில் சமஸ்கிருதத்திற்காக நான்கு மத்திய பல்கலைக்கழகங்களை பாஜக அரசு சட்டம் இயற்றி உருவாக்கியது. தமிழ் மீது பற்றிருந்தால்... தமிழுக்காக ஒரு மத்திய பல்கலைக்கழகத்தை அவர்கள் உருவாக்கட்டுமே" என்றார் காட்டமாக.



source https://www.vikatan.com/government-and-politics/politics/during-the-rally-held-on-behalf-of-vck-mp-ravikumar-spoke-angrily-about-the-central-government

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக