Ad

புதன், 12 ஏப்ரல், 2023

"டெல்லிக்கும் எடப்பாடிக்கும் நான் யார் என காட்டுகிறேன்" - சீனியர்களிடம் சீறிய பன்னீர்

"கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவெடுக்கவிருப்பதால், அ.தி.மு.க-வின் சட்டவிதிகளில் திருத்தங்கள் கொண்டு வந்ததை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க உத்தரவிட வேண்டும்" என டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இந்த வழக்கு நேற்று நீதிபதி புருசந்திரா குமார், கவுரவ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, தாங்கள் பதிலளிக்க பத்து நாள்கள் அவகாசம் கோரியிருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். இந்த நிலையில், அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் மேல்முறையீட்டு மனு விசாரணையில், ஏப்ரல் 16-ம் தேதி எடப்பாடி கூட்டியுள்ள செயற்குழுவுக்கு தடைவிதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

அ.தி.மு.க -பன்னீர் - எடப்பாடி

அதேநேரத்தில், 'செயற்குழு முடிவுகள், உறுப்பினர் சேர்க்கை, நீக்கம் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களும் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது. இறுதி விசாரணை ஏப்ரல் 20, 21-ம் தேதிகளில் நடைபெறும்' எனவும் நீதிமன்றம் கூறியிருக்கிறது. ஆக, இன்னும் பத்து நாள்களில் அ.தி.மு.க உட்கட்சிப் பஞ்சாயத்தில் ஒரு தெளிவு ஏற்படலாம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். சட்ட நடவடிக்கைகள் ஒருபக்கம் தீவிரமாகியிருக்கும் நிலையில், 'அரசியல்ரீதியாக ஓ.பன்னீர்செல்வம் என்ன செய்யப் போகிறார்... அவரின் காய் நகர்த்தல் என்ன?', விவரமறிய அவரது அணியைச் சேர்ந்த மூத்த தலைவர்களிடம் பேசினோம்.

நம்மிடம் பேசியவர்கள், "டெல்லி உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி தொடுத்திருக்கும் வழக்கில் பதிலளிக்க பத்து நாள்கள் அவகாசம் கோரியிருக்கிறது தேர்தல் ஆணையம். இதுவே எங்களுக்குச் சாதகம்தான். கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதென நாங்களும் முடிவெடுத்திருக்கிறோம். பா.ஜ.க கூட்டணியில் எங்களுக்கு சீட் ஒதுக்க வேண்டுமென, அக்கட்சியின் சீனியர் தலைவர் எடியூரப்பாவிடம் மனு அளித்திருக்கிறோம். ஏப்ரல் 20-ம் தேதியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது. அதற்குள், எங்கள் அணியின் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு, இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கே வழங்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் முறையிடவிருக்கிறோம்.

எடியூரப்பாவைச் சந்தித்த ஓ.பி.எஸ் அணியினர்.

இந்தச் சூழலில்தான், டெல்லி உயர் நீதிமன்றத்திலுள்ள வழக்கில், பத்து நாள்கள் அவகாசம் கேட்டிருக்கிறது தேர்தல் ஆணையம். சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு விசாரணையில் இருப்பது, இரட்டை இலைக்கு நாங்களும் உரிமைக்கோருவது உள்ளிட்ட விஷயங்களால், எடப்பாடிக்குச் சாதகமான பதிலை தேர்தல் ஆணையம் வழங்க வாய்ப்பில்லை. எடப்பாடியை பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காது என்பதே ஓ.பி.எஸ்-ன் கணக்கு.

ஏப்ரல் 24-ம் தேதி, திருச்சியில் நடைபெறும் முப்பெரும் விழாவை வெற்றிக்கரமாக நடத்துவதில்தான் தீவிரமாகியிருக்கிறார் ஓ.பி.எஸ். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, இரண்டு முறை அவருக்கு டெல்லி பரிபூரண ஆதரவை அளித்தது. பிப்ரவரி 2017-ல் அவர் தர்மயுத்தம் தொடங்கியபோது, அவருக்குப் பின்னால் கணிசமான எம்.எல்.ஏ-க்கள் வருவார்கள் என டெல்லி எதிர்பார்த்தது. ஆனால், அதைச் செய்துகாட்ட முடியவில்லை.

ஓ.பி.எஸ் தரப்பு

ஜூன் 2022-ல், எடப்பாடியுடன் ஓ.பி.எஸ் நேரடியாக முட்டிக்கொண்ட பிறகு, மாவட்டச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள், எம்.எல்,ஏ-க்கள் ஓ.பி.எஸ் பின்னால் ஓரளவுக்காவது திரள்வார்கள் எனவும் டெல்லி எதிர்பார்த்தது. அதுவும் நடக்கவில்லை. இதன் காரணமாக அவர்மீதான டெல்லியின் மரியாதைப் பார்வை மங்கத் தொடங்கியது. சமீபத்தில் சென்னை வந்திருந்த பிரதமர் மோடி, ஓ.பி.எஸ்-ன் தாய் இறப்பிற்கு துக்கம்கூட விசாரிக்கவில்லை. 'நமஸ்தே பன்னீர்' என்றுவிட்டு கிளம்பிவிட்டார். இதனால்தான், திருச்சி முப்பெரும் விழாவை பிரம்மாண்டமாக நடத்திட வேண்டுமென்பதில் தீர்மானமாக இருக்கிறார் ஓ.பி.எஸ்.

அமைப்புரீதியாக, 83 மாவட்டச் செயலாளர்கள் எங்கள் அணியில் இருக்கிறார்கள். அவர்களிடம், தலா 500 பேரை அவரவர் மாவட்டத்திலிருந்து அழைத்து வரும் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதற்கான செலவுகளை அந்தந்த மாவட்டச் செயலாளர்கள்தான் ஏற்க வேண்டும். இதுபோக, சில சமூக அமைப்புகள் மூலமாகவும் ஆட்களைத் திரட்டிவரும் வேலைகள் தீவிரமடைந்திருக்கின்றன.

சசிகலா, பன்னீர்

அ.ம.மு.க-வைச் சேர்ந்தவர்களும் விழாவில் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையே 50,000 கடந்துவிடும். விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்யும் பொறுப்பு கு.ப.கிருஷ்ணன், வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணனை தன் அருகில் வைத்திருப்பதன் மூலம், முக்குலத்தோர் - முத்தரையர் சமூக அரசியல் கணக்கை உருவாக்கிட முயற்சிக்கிறார் ஓ.பி.எஸ். இந்த சமூக அரசியல் கணக்கு ஒர்க் அவுட்டானால், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் எடப்பாடி அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.

சசிகலாவை நேரில் சந்தித்து, முப்பெரும் விழாவுக்கு அழைக்கும் முடிவிலும் இருக்கிறார் ஓ.பி.எஸ். இருவருமே, 'அ.தி.மு.க-வை மீட்டெடுக்க வேண்டும்' என்கிற நோக்கத்தில் இருப்பதால், இவர்கள் ஒன்றாக மேடையேறும் பட்சத்தில், அரசியலில் பெரிய கவனம் ஏற்படும். தினகரன் தனிக்கட்சி ஒன்றைத் தொடங்கி நடத்துவதால், அவர் வருவாரா என்பது சந்தேகம்தான். இந்த முப்பெரும் விழாவை வெற்றிக்கரமாக நடத்தினால் மட்டுமே, டெல்லி தன்னை மதிக்குமென்பது ஓ.பி.எஸ்-க்கு நன்கு தெரியும்" என்றனர் விரிவாக.

ஓ.பி.எஸ்.

ஓ.பி.எஸ்-ன் இந்த அரசியல் முன்னெடுப்புகளுக்கு தி.மு.க-வின் ஆசிர்வாதமும் இருக்கிறதாம். விழா வெற்றிக்கரமாக நடப்பதற்குத் தேவையான 'சத்து மாத்திரை'கள் வந்து இறங்குகின்றன என்கிறார்கள் பன்னீர் அணியின் திருச்சி மாவட்ட நிர்வாகிகள். திருச்சியில் நடந்த தன் அணியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முடிந்தபிறகு, 'டெல்லிக்கும், எடப்பாடிக்கும் நான் யார் என்பதைக் காட்டுகிறேன்' என சீனியர் நிர்வாகிகளிடம் சவால்விட்டிருக்கிறார் பன்னீர். விழா சுமூகமாக நடக்க, முதல்முறையாக தன் பர்ஸைத் திறந்து, சில 'சாக்லெட்'களையும் எடுத்து சீனியர் நிர்வாகிகளிடம் கொடுத்திருக்கிறார். அதுவே பெரிய ஆச்சர்யம்தான். பன்னீரின் அரசியல் பாதை தொடருமா, முடிவுறுமா என்பதையெல்லாம் திருச்சி விழாவும், தேர்தல் ஆணையமும் விரைவில் தெளிவுப்படுத்திவிடும்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/ops-takes-pledge-to-success-the-upcmming-trichy-meeting

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக