Ad

திங்கள், 10 ஏப்ரல், 2023

``நாம் நிறைவேற்றிய தீர்மானத்தின் நல்விளைவாக ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்கிறார்!" - முதல்வர் ஸ்டாலின்

ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில் தமிழ்நாடு அரசு, கடந்த ஆண்டு அக்டோபரில் நிறைவேற்றியனுப்பிய ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவில் அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டிருந்தும், ஆளுநர் ஆர்.என்.ரவி அதற்கு ஒப்புதலளிக்காமல் கடந்த மார்ச்சில் திருப்பியனுப்பினார். அதிலும், இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கு சட்டம் இயற்ற அரசுக்கு அதிகாரம் இல்லையென ஆர்.என்.ரவி கூறியிருந்தார். பிறகு இதில் சட்டமியற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என மத்திய அரசு கூறியிருந்தது.

ஆன்லைன் சூதாட்டம்: ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின்

அதைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின், ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவை மீண்டும் நிறைவேற்றியனுப்பினார். இப்படியான சூழலில் சட்டமன்றத்தில் ஸ்டாலின், ஆளுநருக்கெதிராக தனித்தீர்மானம் கொண்டுவந்த சில மணிநேரங்களிலேயே, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்தார். இந்த நிலையில், `நாம் நிறைவேற்றிய தீர்மானத்தின் நல்விளைவாக ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்திருக்கிறார்' என ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து சட்டப்பேரவையில் உரையாற்றிய ஸ்டாலின், ``இன்று காலை நாம் நிறைவேற்றி அனுப்பிய அரசினர் தனித் தீர்மானத்தில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடைச் சட்டம் குறித்த மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்கள் ஆளுநரின் அனுமதிக்காக அனுப்பிவைக்கப்பட்டு, நிலுவையில் உள்ளதைச் சுட்டிக்காட்டி, இதனால் தமிழ்நாட்டின் நிர்வாக நலனும், இளைஞர்களின் எதிர்காலமும் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும் எடுத்துக்காட்டியிருந்தோம். மேலும், பொது வெளியில் ஆளுநர் தெரிவித்து வரும் சர்ச்சைக்குரிய கருத்துகள் குறித்தும் நாம் இங்கு குறிப்பிட்டிருந்தோம்.

முதலமைச்சர் ஸ்டாலின்

இந்தச் சூழ்நிலையில், இந்த மாமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தின் ஒரு நல்விளைவாக, இன்று மாலை ஆளுநர் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தொடர்பான மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார் என்ற செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். மேலும், இந்தச் சட்டமானது இன்றே தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியையும் பேரவைத் தலைவர் மூலமாக இந்த அவைக்குத் தெரிவித்து அமர்கிறேன்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/governor-approved-online-gambling-prohibition-bill-by-reflection-of-resolution-against-him-says-cm-stalin

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக