அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான 'ஹிண்டன்பர்க் ரிசர்ச்' சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், "அதானி குழுமம் தொடர்பாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டோம். அந்த நிறுவனம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டுவருகிறது. மிக அதிக அளவில் கடன் இருக்கிறது.
அதானி குழுமத்தைச் சேர்ந்த ஏழு முக்கிய நிறுவனங்கள் தங்களது நிதிநிலையை உண்மைக்குப் புறம்பான முறையில் பலமானதாகக் காட்டி, அதன் மூலம் பங்குச் சந்தையை ஏமாற்றி லாபம் பார்த்தன. வெளிநாடுகளில் ஷெல் நிறுவனங்களை உருவாக்கி அவற்றின் மூலம் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டது" என்பது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டியது.
இந்த விவகாரத்தை கையில் எடுத்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பின. பதிலுக்கு பாஜக வெளிநாடுகளில் இந்தியாவை பற்றி ராகுல் காந்தி தவறாக பேசிவிட்டதாக குற்றம்சாட்டியது. இதனால் பெரும்பாலான நாள்கள் நாடாளுமன்றம் முடங்கியது.
குறிப்பாக அதானி குழுமத்தின் போலி நிறுவனங்களில் யாரோ ரூ.20,000 கோடி முதலீடு செய்யப்பட்டு இருப்பதாகவும், அது யாருடைய பணம் என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி வருகிறார். ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் அதானி குழுமம் மறுத்து வருகிறது.
இந்நிலையில் அதானி குழுமம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "அதானி குழும புரமோட்டர்கள், அதானி நிறுவனத்தில் கனிசமான பங்குகளை வைத்திருக்கிறார்கள். அவர்கள் அதானி டோட்டல் காஸ் நிறுவனத்தின் 20 சதவீத பங்குகள், அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் 35 சதவீத பங்குகள் ஆகியவற்றை பிரான்சை சேர்ந்த டோட்டல் எனர்ஜிஸ் நிறுவனத்துக்கு விற்று 287 கோடி டாலர் திரட்டினர்.
2019-ம் ஆண்டில் இருந்து படிப்படியாக இந்த பணம் திரட்டப்பட்டது. பிரான்ஸ் நிறுவனத்திடம் இப்படி கிடைத்த பணத்தில் 255 கோடி டாலர் (ரூ.20 ஆயிரம் கோடி) அதானி குழும துணை நிறுவனங்களான அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், அதானி பவர், அதானி டிரான்ஸ்மிஷன், சிறப்பு பொருளாதார மண்டலம் போன்றவற்றில் மறுமுதலீடு செய்யப்பட்டது.
புதிய வணிகங்களின் வளர்ச்சிக்காக இப்படி செய்யப்பட்டது. இந்த பணத்தைத் தான் போலி நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டதாக சிலர் வர்ணிக்கிறார்கள். எல்லா பரிமாற்றங்களும் பங்குசந்தை கணக்கு தாக்கலில் வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
அனைத்தும் பொது வெளியிலும் வைக்கப்பட்டுள்ளன. பங்குசந்தை விதிமுறைகளை முழுமையாக கடைபிடித்து வருகிறோம். இருப்பினும் திசை திருப்பும் வகையில் செய்தி பரப்புவது வருந்தத்தக்கது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். "இந்த விவகாரம் முழு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியது. அதானிக்கு பயம் இல்லை என்றால் விசாரணைக்கு தயாராக இருக்கிறேன் என்று சொல்ல வேண்டியது தானே?. அவர் சுத்தமாக இருந்திருந்தால் எப்படி பங்கு திடீர், திடீரென உயர்ந்தது.
பெரும்பாலான பங்குகளை அவரது குடும்பமே எப்படி வைத்துக்கொள்ள முடியும்?. அதனால் அதானி ஒரு நியாமான தொழிலதிபர், தன் மீது எந்த தவறும் இல்லை, நியாயமான முறையில் தான் வந்தது என்றால் எங்கிருந்து வந்ததோ அங்கு சென்று விசாரித்துக்கொள்ளலாம் என்று அவர் தெரிவிக்க வேண்டும்.
எந்த ஷெல் நிறுவனத்தில் இருந்தும் எனக்கு பணம் வரவில்லை.. நியாயமான முறையில் தான் பணம் வந்தது என்று சொன்னால் விசாரணைக்கு தயாராக இருப்பதாக அறிவிக்க வேண்டும். நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு தயாராக இருக்கிறேன் என்று தெரிவிக்க வேண்டும். ஏன் இதையெல்லாம் அதானியோ, அவரது நண்பர் பிரதமர் மோடியோ தெரிவிக்கவில்லை?" என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/governance/rahuls-accusation-and-adanis-explanation-regarding-money-investment
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக