Ad

திங்கள், 17 ஏப்ரல், 2023

``சுய விளம்பரம் தேடும் அண்ணாமலையின் செயலை பாஜக-வினரே ஏற்றுக்கொள்ளவில்லை!” - கே.எஸ்.அழகிரி சாடல்

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்துக்கு வந்திருந்த காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``சட்டத்துக்குப் புறம்பாகப் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி சம்பாதித்தால் மட்டுமே ஊழல். ஆனால், அண்ணாமலை ஊழல் பட்டியல் வெளியிடுவதாகக் கூறி சொத்துப் பட்டியலை வெளியிட்டிருக்கிறார். சொத்துப் பட்டியல் என்பது உண்மையாக இருந்தாலும்கூட, அவர் வெளியிட்ட சொத்துகளின் மதிப்பு தவறானது.

கே.எஸ்.அழகிரி

அண்ணாமலை சுய விளம்பரத்துக்காக இது போன்று கூறி வருகிறார். ஆக்கபூர்வமான அரசியல்தான் வெற்றி பெறும். இது போன்ற விளம்பர அரசியல் வெற்றி பெறாது. அண்ணாமலையின் செயல்பாடுகளை அவரது கட்சியே ஏற்றுக்கொள்ளவில்லை. புல்வாமாவில் 40 ராணுவ வீரர்கள் இறந்ததற்குக் காரணம் பா.ஜ.க-தான். `ராணுவ வீரர்களுக்காக விமானங்கள் கேட்டபோது, மத்திய அரசு தர மறுத்துவிட்டதால், தரைவழியாக அவர்கள் சென்றபோது, தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். இது குறித்து பிரதமர் மோடி, அமித் ஷாவிடம் கூறியபோது, என்னை அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டனர்.

பிரதமர் மோடி

பிறகு ராணுவ வீரர்கள் மரணத்தை பா.ஜ.க அரசு தேச தியாகமாக மாற்றிக்கொண்டது' என காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் கருத்து தெரிவித்திருக்கிறார். தற்போது, இந்த விவகாரத்துக்காக பிரதமர் மோடி தனது பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு அரியலூரில் ரயில் கவிழ்ந்த விவகாரத்தில் மத்திய ரயில்வே அமைச்சராக இருந்த லால்பகதுார் சாஸ்திரி, தன்னுடைய பதவியை ராஜினமா செய்தார். ஆனால், சதி வேலைக்குப் பிறகும் பதவியை ராஜினாமா செய்யாமல் பிரதமர் மோடி இருப்பது, அவரின் பொறுப்பற்றத்தனத்தைக் காட்டுகிறது" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/tamilnadu-congress-committee-head-ks-alagiri-slams-bjp-leader-annamalai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக