Ad

ஞாயிறு, 23 ஏப்ரல், 2023

Dhoni: "எனக்கு `Farewell' கொடுக்க வந்திருக்காங்க!" - மீண்டும் ஓய்வு பற்றிப் பேசிய தோனி

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியை 49 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்தப் போட்டி முடிந்த பிறகு சென்னை அணியின் கேப்டன் தோனி, பரிசளிப்பு விழாவில் சில முக்கியமான விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார்.

குறிப்பாக, சன்ரைசர்ஸூக்கு எதிரான போட்டியைப் போலவே அவரது ஓய்வு குறித்து மீண்டும் பேசியிருக்கிறார்.

வர்ணனையாளர் முரளி கார்த்திக் கேள்விகளை வீசினார். கொல்கத்தா மைதானம் முழுக்க மஞ்சள் ஜெர்சியோடு நிரம்பியிருந்த சிஎஸ்கே ரசிகர்களை பற்றி முதல் கேள்வியை கேட்டார். அதிலிருந்து தோனி பேசத் தொடங்கினார்.

Eden Garden
"இங்கே கூடியிருக்கும் ரசிகர்களின் அன்பிற்கு நன்றி. அவர்கள் எனக்கு பிரியாவிடை (Farewell) கொடுப்பதற்காக இப்படித் திரண்டிருக்கக்கூடும். அவர்களின் ஆதரவிற்கு நன்றி. இவர்களெல்லாம் அடுத்தப் போட்டியில் தங்களின் சொந்த அணியான கொல்கத்தாவின் ஜெர்சிக்கு மாறிவிடுவார்கள் என நம்புகிறேன்."

ரசிகர்களுக்கு நன்றிகளை கூறிய தோனி அதன்பிறகு இந்த ஆட்டம் குறித்து பேசத் தொடங்கினார். "வேகப்பந்து வீச்சாளர்கள் பவர்ப்ளேயில் அவர்களின் வேலையைச் சரியாகச் செய்துவிட்டார்கள். ஸ்பின்னர்கள் மிடில் ஓவர்களைப் பார்த்துக் கொண்டார்கள். மைதானத்தின் ஒரு பக்க பவுண்டரி குறைவான தூரத்தைக் கொண்டதாக இருந்தது. அதற்கேற்ப நாங்கள் திட்டங்களை வகுத்துக் கொண்டோம். ஒரு வீரர் காயமடைந்துவிட்டால் அவரால் பெரிதாக எதுவும் செய்ய முடியாது என்பதை நான் அறிவேன். அப்படியான நேரங்களில் நன்கு தயாராக இருக்கும் இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி ஊக்குவிக்க வேண்டும்!" எனப் பேசியிருந்தார்.

மேலும் ரஹானே குறித்தான கேள்விக்குப் பதில் கூறிய தோனி,

Rahane
ரஹானேவின் திறன் என்ன என்பது தெரியும். அவர் விருப்பப்படும் விதத்தில் ஆடும் சுதந்திரத்தை அவருக்குக் கொடுக்க வேண்டும். உங்களுடைய பலங்களை அறிந்து நேர்மறையான எண்ணத்தோடு அனுபவித்து ஆடுங்கள் என்பதுதான் அவருக்குக் கொடுக்கப்பட்ட அறிவுரை. மேலும், அவர் எந்த இடத்தில் ஆடினால் சௌகரியமாக உணர்வாரோ அதையும் உறுதி செய்து கொடுத்திருக்கிறோம்!" என தோனி பேசியிருந்தார்.

பல விஷயங்களை தோனி பேசியிருந்தாலும் அவரின் `Farewell' குறித்து பேசியதுதான் கூடுதல் கவனத்தை ஈர்த்தது. தோனி என்ன முடிவை, எப்போது எடுக்கப்போகிறார்?



source https://sports.vikatan.com/cricket/ipl-2023-dhonis-post-match-presentation-speech-during-the-match-with-kkr

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக