Ad

வெள்ளி, 21 ஏப்ரல், 2023

15 மணிநேரம் வேலை; சம்பளம் கொடுக்காமல் கொடுமை - சென்னையில் மீட்கப்பட்ட 29 குழந்தைத் தொழிலாளர்கள்!

சென்னை, மண்ணடி மலையப்பன் தெருவில் தனியாருக்குச் சொந்தமான ஒரு பை தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு வெளிமாநிலச் சிறுவர்களைச் சட்டவிரோதமாக அடைத்துவைத்து, வேலை வாங்குவதாக அரசு தொழிலாளர்கள் நலத்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்திருக்கிறது. இந்தத் தகவலை, அதிகாரிகள் அந்தப் பகுதி போலீஸாருக்குத் தெரியப்படுத்தினர்.

குழந்தைத் தொழிலாளர்கள் - தனியார் தொழிற்சாலை

இதனடிப்படையில் நேற்று முன்தினம் மண்ணடி மலையப்பன் தெருவில், இரண்டாவது மாடியில் இயங்கிவரும் அந்த தனியார் தொழிற்சாலையில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில், பீகாரைச் சேர்ந்த 28 சிறுவர்கள், ஒரு நேபாள சிறுவன் என மொத்தம் அங்கு 29 சிறுவர்களைச் சட்டவிரோதமாக அடைத்துவைத்து வேலை வாங்கியது தெரியவந்தது.

அந்தச் சிறுவர்கள் அனைவருக்குமே 10 முதல் 17 வயது மட்டுமே ஆகிறது. அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்தச் சிறுவர்களிடம் 15 மணி நேரத்துக்கும் அதிகமாக வேலை வாங்கிக்கொண்டு, மூன்று வேளை உணவு மட்டுமே வழங்கியிருக்கிறார்கள். அதே சமயத்தில் அந்தச் சிறுவர்களுக்குச் சம்பளம் எதுவும் கொடுக்காமல், அனைவரையும் ஒரே குடோனில் அடைத்துவைத்திருந்ததும் தெரியவந்திருக்கிறது.

குழந்தைத் தொழிலாளர்கள் - தனியார் தொழிற்சாலை

இதனிடையே சிறுவர்களைச் சட்டவிரோதமாக அடைத்துவைத்து வேலை வாங்கிய அந்த நிறுவனத்தின் உரிமையாளர் முகமது சாகித் தலைமறைவாகியிருக்கிறார். அவரை போலீஸார் தீவிரமாகத் தேடிவருகிறார்கள். மேலும், மீட்கப்பட்ட 29 சிறுவர்கள் ராயபுரத்திலுள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/crime/29-child-bonded-laborers-rescued-from-a-private-factory-in-chennai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக