Ad

சனி, 8 ஏப்ரல், 2023

Doctor Vikatan: வியர்வையோடு இருக்கும்போது குளிக்கக்கூடாது என்பது உண்மையா?

Doctor Vikatan: வெயிலில் வெளியே சென்றுவிட்டு வந்ததும் அல்லது உடற்பயிற்சி செய்ததும் வியர்வை நீங்குவதற்கு உடனே குளிக்க நினைப்போம். ஆனால் வியர்வையோடு குளிக்கக்கூடாது என்கிறார்களே... அது உண்மையா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா

சருமநல மருத்துவர் டாக்டர் பூர்ணிமா

சூழல் மாசுள்ள வெளியிடங்களுக்குச் சென்றுவிட்டு வந்த உடனேயோ, உடற்பயிற்சியோ, வேறு வேலைகளோ செய்துவிட்டு வந்த பிறகோ வியர்வையோடு அப்படியே இருப்பது மிகவும் தவறு. உடனடியாகக் குளிக்க வேண்டியது மிக முக்கியம்.

வியர்வையோடு சருமத்தில் பாக்டீரியா நீண்ட நேரம் இருந்தால், அது பல்கிப் பெருக வாய்ப்புகள் அதிகம். அதன் காரணமாக உடலில் கெட்ட வாடை, இன்ஃபெக்ஷன் போன்றவை ஏற்படலாம். எனவே உடலில் வியர்வை தங்காமல் பார்த்துக்கொள்வதுதான் சரியானது.

இந்த விஷயத்தில் நாம் அணிகிற உடைகள் மிக முக்கியம். சிந்தெடிக் உடைகள் அணியும்போது அவை வியர்வையை உறிஞ்சாது. வியர்வை அப்படியே இருந்தால் சருமத்தில் அரிப்பு உள்ளிட்ட பல பிரச்னைகள் வரலாம். எனவே வியர்வையை உறிஞ்சும்படியான காட்டன் உடைகள்தான் சிறந்தவை.

மருந்துக் கடைகளில் டஸ்ட்டிங் பவுடர் என்று கிடைக்கும். அதை வாங்கி, அக்குள் பகுதி, மார்பகங்களுக்கு அடியில் எல்லாம் தடவிக் கொண்டு அதற்கு மேல் உடைகள் அணியும்போது வியர்வை தங்காமலும் கெட்ட வாடை வீசாமலும் இருக்கும்.

வியர்வை

வியர்வையால் வரும் இன்ஃபெக்ஷனும் தவிர்க்கப்படும். மற்றபடி வியர்வையும் அதன் வாடையும் நீங்கும்படி உடனே குளித்துவிடுவதுதான் ஆரோக்கியமானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



source https://www.vikatan.com/health/doctor-vikatan-is-it-true-that-you-should-not-take-a-bath-when-you-are-sweating

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக