Ad

சனி, 22 ஏப்ரல், 2023

ஆடியோ விவகாரம்; `அமைச்சர் பி.டி.ஆருக்குச் சவால்விடுகிறேன்.. இன்று ஆளுநரைச் சந்திக்கிறோம்!'- அண்ணாமலை

கடந்த 14-ம் தேதி பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, தி.மு.க-வினரின் சொத்து மற்றும் ஊழல் பட்டியல் எனக் கூறி, சில தரவுகளை வெளியிட்டார். அது அரசியல் அரங்கில் பேசுபொருளானது. அதைத் தொடர்ந்து அண்மையில், நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்... அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் ஆகியோர் குறித்து `அவர்கள் 30,000 கோடி ரூபாய் சம்பாதிக்கின்றனர்' எனப் பேசுவது போன்ற ஆடியோ ஒன்றை பா.ஜ.க-வினர் வெளியிட்டனர். மேலும், அமைச்சர் பி.டி.ஆரின் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்று, அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அண்ணாமலை வலியுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில், தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆடியோ சர்ச்சைக்கு மறுப்பு தெரிவித்து, `சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்படும் ஆடியோ போலியானது' என விளக்கமளித்திருந்தார்.

பி.டி.ஆர்

அதைத் தொடர்ந்து, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, `இந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக ஆய்வுசெய்து விசாரிக்க பா.ஜ.க தலைவர்கள் குழு, இன்று ஆளுநரைச் சந்திக்கவிருக்கிறது' என்று தெரிவித்திருக்கிறார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``தமிழக நிதியமைச்சர் திரு பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தி.மு.க தலைவரும், தமிழக முதலமைச்சருமான திரு மு.க.ஸ்டாலினின் மகன் திரு உதயநிதி ஸ்டாலின் மற்றும் மருமகன் திரு சபரீசன் ஆகியோர் ஊழல் மூலம், ஒரே ஆண்டில் 30,000 கோடி ரூபாய் பணத்தை முறைகேடாகச் சம்பாதித்திருப்பதாகப் பேசியிருந்த ஒலி நாடாவின் உண்மைத் தன்மையை, சுதந்திரமான, நியாயமான, தடயவியல் தணிக்கை செய்யக் கோரி, தமிழக பா.ஜ.க தலைவர்கள் குழு ஒன்று, மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு ஆர்.என்.ரவி அவர்களை இன்று சந்திக்கவிருக்கிறது.

தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இந்த ஒலி நாடா பொய்யானது, யார் குரலில் வேண்டுமானாலும் இப்படிப் பேசி வெளியிட முடியும் என்று சமாளித்துக் கொண்டிருப்பதால், அவர் அந்த ஒலி நாடாவில் பேசிய அதே கருத்துகளை நான் பேசுவதுபோல ஒரு ஒலி நாடாவை வெளியிடுமாறு சவால்விடுகிறேன். என்னுடைய குரல் மாதிரியை ஆய்வுக்கு நான் வழங்கத் தயார். தமிழக நிதியமைச்சரும் தனது குரல் மாதிரியை வழங்க வேண்டும். இரண்டு ஒலி மாதிரிகளையும் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடக்கும் விசாரணை ஆணையத்திடம் சமர்ப்பிக்கலாம். இரண்டு ஒலி நாடாக்களின் உண்மைத் தன்மையை, நீதிமன்றம் விசாரித்துக் கூறட்டும் .

காலங்காலமாகப் பதவிகளை எல்லாம், வாரிசுகள் அனுபவித்துக் கொண்டு, தனது கட்சித் தொண்டர்களை போஸ்டர் மட்டுமே ஒட்டவைத்து ஏமாற்றுவதுபோல, இது அத்தனை எளிதானதல்ல என்பதைத் தமிழக நிதியமைச்சர் புரிந்துகொள்ள வேண்டும்.

அண்ணாமலை

நீங்கள் சொல்லும் விசித்திரக் கதைகளை, வேறு வழியில்லாமல் உங்கள் கட்சியினர் நம்பலாம். ஆனால், நீங்கள் என்ன கதை சொன்னாலும் நம்புவதற்கு, நம் தமிழக மக்கள் ஒன்றும் தி.மு.க-வினர் அல்ல; அவர்களின் புத்திசாலித்தனத்தைக் குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றும் தமிழக நிதியமைச்சரை மிகப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்" என்று குறிப்பிட்டிருக்கிறார் அண்ணாமலை.



source https://www.vikatan.com/government-and-politics/politics/tamilnadu-bjp-leader-annamalai-challenged-minister-ptr-over-audio-controversy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக