நீலகிரி மாவட்டம், கொடநாடு அருகில் அமைந்திருக்கிறது மேடநாடு வனப்பகுதி. யானை, சிறுத்தை, கரடி, காட்டுமாடு உள்ளிட்ட வனவிலங்குகள், இருவாச்சி போன்ற அரியவகை பறவையினங்கள், பூர்வீக சோலைமரக்காடுகள், குறிஞ்சிப்புதர்கள் எனச் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருக்கிறது. `மேடநாடு வனப்பகுதி' என்ற பெயரில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக வனத்துறையால் கண்காணிக்கப்படுகிறது.
இந்த நிலையில், மேடநாடு பகுதியிலுள்ள தனியார் தேயிலைத் தோட்டத்துக்குச் சாலை இணைப்பை ஏற்படுத்தும்நோக்கில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் அத்துமீறி சுமார் 2 கிலோமீட்டர் தொலைவுக்குச் சாலை அமைத்திருப்பதாக வனத்துறையினருக்குப் புகார் வந்திருக்கிறது.
புகாரின் அடிப்படையில் அங்கு சென்று வனத்துறை அதிகாரிகள் ஆய்வுமேற்கொண்டதில், சட்டவிரோதமாக விரிவாக்கம் செய்யப்பட்டிருப்பதை உறுதிசெய்திருக்கின்றனர்.
அதையடுத்து, அனுமதி பெறாமல் நடைபெற்ற பணியில் ஈடுபட்ட எஸ்டேட் மேலாளர், கனரக இயந்திர ஓட்டுநர்கள் 2 பேர் என மொத்தம் 3 பேர்மீது வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர். மேலும் சட்டவிரோத பணிக்குப் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களையும் பறிமுதல் செய்திருக்கிறது வனத்துறை.
இந்த அத்துமீறல் குறித்து வனத்துறை அதிகாரிகள், "சுற்றுலாத்துறை அமைச்சரின் மருமகன் தேயிலைத் தோட்டம் இந்தப் பகுதியில் இருக்கிறது. இவரது தோட்டத்துக்குச் சாலையை இணைக்கும் வகையில், இடையில் வனப்பகுதியிலுள்ள கைவிடப்பட்ட சாலையில் வனத்துறை அனுமதி பெறாமல் தடைசெய்யப்பட்ட இயந்திரங்களைக் கொண்டு பணிகளைச் செய்திருக்கிறார்கள்.
வனச்சட்டத்தின் அடிப்படையில் தோட்ட மேலாளர் பாலமுருகன், ரோடு ரோலர் ஓட்டுநர்கள் உமர் ஃபரூக், பங்கஜ்குமார் சிங் ஆகிய 3 பேர்மீது வழக்கு பதிவுசெய்திருக்கிறோம். தோட்ட உரிமையாளரான சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரனின் மருமகன் சிவகுமாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது" என்றனர்.
source https://www.vikatan.com/environment/a-case-has-been-registered-against-those-who-encroached-the-forest-area-in-nilgiris
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக