Ad

திங்கள், 24 ஏப்ரல், 2023

SRHvDC: `நீங்க சுமார்னா... நாங்க ரொம்ப சுமாரு...' - மந்தமான போட்டியில் ஆக்ரோஷமாக வென்ற டெல்லி!

ஸ்லோ சைக்ளிங் ரேஸினையே மாரத்தானாக வைத்ததைப் போல இழுவையாக நீண்ட போட்டி ஃபினிஷிங் லைனுக்கே உரிய த்ரில்லை இறுதி ஓவரில் தாங்கியிருந்தது.
Warner

டாஸை வென்று பேட்டிங் என்றார், ஹைதராபாத் களத்தினை வேறு யாரையும்விட நன்றாகவே அறிந்த வார்னர். ஐபிஎல் கோப்பையை வென்ற அனுபவமுள்ள அவர் போன்ற ஒரு கேப்டன் கிடைத்தும் வரிசையான தோல்வியே தொடர்ந்ததற்கான முக்கியக் காரணம் டெல்லியின் கட்டமைப்பில் இருக்கும் குழப்பங்கள்தான். பரிட்சை எழுதும் போது முதலில் உள்ள பக்கங்களை அழகாக எழுதிவிட்டு போகப் போக கிறுக்கித் தள்ளும் மாணவனாக, டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக அதுவும் ஓவர்சீஸ் வீரர்களை வாங்கிப் போட்டுவிட்டு, ஒரு சரியான ஃபினிஷர்கூட இல்லாமலேயே ஆடி வருகின்றனர். கிட்டத்தட்ட ஓப்பனர்கள் அணிவரிசை நடத்தும் கேகேஆரின் அதே குழறுபடிதான் இங்கேயும். ஃபார்மில் உள்ள அக்ஸர் படேலினை முன்கூட்டி இறக்கி ரன் பார்க்கலாம் என்பதையும் பின்பற்றாமல் `லோ ஸ்கோரிங் கேம்கள் நிச்சயம் தோல்வியே லட்சியம்' என்றுதான் பல போட்டிகளிலும் ஆடி வந்தனர். கடந்த இரு போட்டிகள் சற்றே அது மாற்றி வருகிறது.

இம்பேக்ட் ப்ளேயராகக்கூட இருக்க வேண்டாமென ப்ரித்வி ஷாவினை வெளியேற்றி பில் ஷால்டையே வார்னரோடு இறக்கினர்.

ஓப்பனரே மாறினாலும் உடைப்பு அடைபடவில்லை. இங்கிலாந்தின் ஸ்விங் கண்டிஷனிலேயே ஆடிப் பழகியவர்தான் ஆனாலும் புவனேஷ்வரின் அவுட் ஸ்விங்கருக்கு ஈடுகொடுக்காது வெளியேறினார் ஷால்ட். மார்ஷ் முதல் பந்திலிருந்தே அடித்து நொறுக்குவது என கங்கணம் கட்டியது போல் மார்கோ ஜென்சன் ஓவரில் நான்கு பவுண்டரிகளை விளாசி பிரமாதமாகத் தொடங்கினார். ஆனால் நடராஜனின் ஷார்ட் ஆஃப் லெந்த் பந்து அவரது பேட்டுக்கு முன்னதாக பேடோடு நட்புப் பாராட்டி அவரை நடையைக் கட்ட வைத்தது.

மறுமுனையில் இருந்த வார்னர், இந்த சீசனின் அதிக ரன்களைப் பெற்றவர்களின் பட்டியலில் முந்தியிருப்பவர். எனினும் இப்போட்டிக்கு முன்னதாக ஒரு சிக்ஸரைக்கூட இத்தொடரில் அடிக்காதவர்.
SRHvDC

அப்படிப்பட்டவருக்கு பந்துவீச வந்த வாசிங்டன் சுந்தரோ இந்த சீசனில் ஒரு விக்கெட்டைக்கூட இதற்கு முந்தைய போட்டிகளில் எடுக்காதவர். ஃப்ளாஷ் பேக்கில் ஆர்சிபி நாட்களில் பவர்பிளே என்றாலே விக்கெட் உத்தரவாதம் தந்த அதே வாசிங்டன் சுந்தர் தான் இத்தொடரின் தொடக்கத்திலிருந்தே முன்பு போல் சிறப்பாக ஆடவில்லை. அப்படிப்பட்ட இருவருக்கும் இடையேயான மோதலில் சுந்தரின் பந்தில் ஸ்வீப் ஷாட் ஆடி வார்னர் சிக்ஸரடித்து சன்ரைசர்ஸுக்கு படையல் காத்திருக்கிறதென எச்சரிக்கை விடுக்க, `இம்முறை என் முறை' என பவர்பிளேவுக்கு அடுத்த தரப்பட்ட எட்டாவது ஓவரிலேயே வார்னரை வீழ்த்தி சுந்தரும் பழி தீர்த்துக் கொண்டு கணக்கை நேர் செய்தார். ஆனால் அதோடு நிற்கவில்லை சுந்தரின் சுழல் ஜாலம்.

SRHvDC

மொத்த முதல் பாதியில் க்ளைமாக்ஸ் காட்சிகளின் திருப்பங்களைக் கொண்டு வந்தது சுந்தரின் அந்த ஒரு ஓவர் மட்டுமே. வார்னரோடு ஓயாமல் சர்ஃப்ராஸ் கான் மற்றும் அமன் ஹக்கீமினையும் காவு கேட்டது சுந்தரின் பந்து. வீசிய ஐந்து பந்துகளுக்குள் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி டில்லியை மறுபடியும் டிஃபென்சிவ் மோடுக்குள் வீசினார் சுந்தர். இதன்பிறகு இணைந்த அக்ஸர் - மணீஷ் பாண்டே மட்டும்தான் டெல்லியின் கோட்டையில் மீதமிருந்த மதில் சுவர்கள். கிட்டத்தட்ட 10 ஓவர்கள் நீடித்தது இக்கூட்டணி. விக்கெட்டுகளைக் காத்தார்கள் எனினும் ரன்களை துரிதக்கதையில் சேர்க்கத் தவறி விட்டார்கள். வெறும் 69 ரன்களை மட்டுமே அந்த 59 பந்துகள் கொண்டு வந்திருந்தன. அதன்பிறகு அக்ஸரின் ஹாட்ரிக் பவுண்டரிகள் மட்டுமே டில்லியின் ஒரே ஆறுதல்‌. இறுதி மூன்று ஓவர்களில்கூட 16 ரன்களை மட்டுமே எட்ட முடிந்த டில்லிக்கு வெற்றி என்பதே பேராசையாக மட்டுமே இருக்குமென்ற எண்ணமே உருவானது.

பந்தினை சேதப்படுத்தக் கூடாது என்ற விதி பேட்ஸ்மேனுக்கானதென தவறாகப் புரிந்து கொண்ட டெல்லி பேட்ஸ்மேன்களின் அமைதி தவழ்ந்த அணுகுமுறையால் 145 என்ற எளிய இலக்கை டெல்லி நிர்ணயித்தது. இருப்பினும் பேட்ஸ்மேன்களால் கையிலிருந்து விடுவிக்கப்பட்ட வெற்றியை தங்களது கைகளுக்குள் மீண்டும் கொண்டுவர டெல்லி கேப்பிடல்ஸ் பௌலர்கள் தங்களால் ஆன அத்தனையையும் செய்தனர். அவர்களுக்கு இரு புள்ளிகளைத் தருவதற்கான முழு ஆதரவையும் சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்களும் நல்கினர்.

Axar

பவர்பிளே ஓவர்களா பைனரி எண்களா எனுமளவு பவர்பிளே முழுவதும் 1 மற்றும் 0 மட்டுமே காணப்பட்டது. ஓவருக்கு ஒரு பவுண்டரி வந்ததுதான் என்றாலும் ஸ்கோர் போர்டினை வெறிச்சோட வைத்திருந்தன டாட் பால்கள். ஆறு பவுண்டரிகளை அடித்திருந்தும் இதனால் சரியாக 36 ரன்கள் மட்டுமே பவர்பிளேயில் சன்ரைசர்ஸால் சேர்க்க முடிந்திருந்தது. 14 பந்துகளில் ஏழு ரன்களை மட்டுமே அடித்து ஆட்டமிழந்த ஹாரி ப்ரூக் ஏறக்குறைய போட்டிக்கு மூடுவிழா நடத்துவது போலவே ஆடிச் சென்றிருந்தார். ஃபீல்டிங் கட்டுப்பாடுகள் இருக்கும் போதே சேர்க்க முடியாத ரன்களை இருபக்கமும் அணை கட்டிய பின் எப்படி சேர்ப்பது? இங்கே விட்டதை இறுதி வரை அவர்களால் பிடிக்க முடியவில்லை, பிடிக்கவும் டில்லி பௌலர்கள் அனுமதிக்கவில்லை.

SRHvDC
மத்திய ஓவர்களா மந்த ஓவர்களா எனுமளவு ஆடியது ராகுல் திரிபாதி - மாயங்க் அகர்வால் கூட்டணி. 38 பந்துகளில் அவர்களும் மிகச் சரியாக கால்குலேட்டட் இன்னிங்க்ஸ் ஆடி 38 ரன்களை மட்டுமே எடுத்திருந்தனர்.

12-வது ஓவரில் இந்தக் கூட்டணியை அக்ஸர் முறிக்க அங்கிருந்து நான்கு ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை வரிசையாக இழந்தது சன்ரைசர்ஸ். 69/2 என இருந்த ஸ்கோரினை 85/5 என கொண்டு வந்து நிறுத்தி அசத்தியது டில்லியின் பௌலிங் படை. மீண்டெழ முடியாதவாறு அடி விழுந்து கொண்டே இருந்தது சன்ரைசர்ஸுக்கு. அக்ஸர் இரண்டு விக்கெட்டுகளையும், இஷாந்த் மற்றும் குல்தீப் தலா ஒரு விக்கெட்டையும் அந்த நான்கு ஓவர்களில் வீழ்த்த ஏறக்குறைய போட்டி டெல்லியின் பக்கமாகவே நகரத் தொடங்கியது. இருப்பினும் புதிதாய் இணைந்த வாசிங்டன் சுந்தர் - கிளாசன் கூட்டணி சற்றே ஆட்டம் காட்டி முகேஷ் மற்றும் நார்க்கியாவின் ஓவர்களைக் காஸ்ட்லி ஆக்கியது. 26 பந்துகளில் 41 ரன்களைக் குவித்தனர். குறிப்பாக கிளாசன் கிளாஸான ஆட்டத்தை ஆடி 19 பந்துகளிலேயே 31 ரன்களை சேர்த்து விட்டார்.

இந்தக் கூட்டணி உடைக்கப்படாமல் இருந்திருந்தால் சன்ரைசர்ஸ் சேஃப் ஜோனுக்கு நகர்த்திருக்கும். மத்திய ஓவர்களில் விழுந்த கொத்துக் கொத்தான விக்கெட்டுகளைவிட நார்க்கியா வீழ்த்திய கிளாசனின் விக்கெட்தான் அவர்களை விபத்தை சந்திக்க வைத்தது. இறுதி ஓவரில் 13 ரன்கள் வேண்டுமெனும் சூழலில் முகேஷ் அற்புதமாக வீசி அதனை டிஃபெண்ட் செய்தார். முன்னதாக அவருக்கெதிராக ரஸல் விளாசிய சிக்ஸர்கள் எல்லாம் டெல்லி ரசிகர்கள் கண்களில் வந்து போக, பயம் சூழ, யார்க்கர்களால் சிறப்பிக்கப்பட்ட அவரது அற்புத ஓவர் வெற்றியை டில்லியின் வசம் சேர்த்தது.

SRHvDC

சுவாரஸ்யமற்ற ஆட்டமாக தோன்றினாலும் சன்ரைசர்ஸுக்கு சாதகமாக ஒன்சைடாக நகருமென்றே கணிக்கப்பட்டாலும் டெல்லி பௌலர்கள் வாயில் காவலர்களாக தங்களது கோட்டையை ஒவ்வொரு ஓவரிலும் காத்ததுடன் எந்த இடத்திலும் சன்ரைசர்ஸின் கை மட்டுமல்ல கைவிரல் கூட ஓங்காமல் ரன்ரேட்டை தங்கள் பிடிக்குள் இறுக்கி இறுதி ஓவரின் இறுதிப் பந்து வரை ரசிகர்களை இருக்கைகளோடு கட்டிப் போட்டனர். சன்ரைசர்ஸோ எந்த விதப் போராட்டமும் இன்றி விழ வேண்டிய வெட்டுக்கு விரும்பித் தலையைக் கொடுத்தது. 145 ரன்களை மட்டுமே எட்ட வேண்டும், பேட்டிங்கிற்கு களமும் கை கொடுக்கும் எனுமிடத்தில்கூட தனது சேஸிங்கை சரியாக திட்டமிடாமல் வெறும் ஏழு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளது சன்ரைசர்ஸ்.

SRHvDC
அக்ஸர் மற்றும் குல்தீப் தலா நான்கு ஓவர்களை சிறப்பாக வீசியும் 43 ரன்களைக் கொடுத்திருந்தனர், அதே நேரத்தில் மீதமிருந்த நான்கு பௌலர்களுமே ரன்களைக் கசிய விடவில்லை. யாரேனும் ஒருவர் அத்தவறை செய்திருந்தாலும் டெல்லிக்கு அது பாதகமாகவே முடிந்திருக்கும்.
SRHvDC

டெல்லியின் பௌலிங் சிறப்பாகவே இருந்தது என்றாலும் இது சன்ரைசர்ஸ் தோற்குமளவிலான போட்டியில்லை. பௌலர்களால் டெல்லி வென்றது என்பதை விட தனது பேட்ஸ்மேன்களாலேயே சன்ரைசர்ஸ் அஸ்தமித்தது என்றே கூற வேண்டும்.



source https://sports.vikatan.com/cricket/ipl-2023-dc-vs-srh-match-report

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக