Ad

புதன், 12 ஏப்ரல், 2023

தேர்தல் ஆணையத்தில் திக்...திக்...திக்... முடிவுக்கு வருகிறதா அதிமுக-வின் சட்டரீதியான போராட்டங்கள்?!

அதிமுக-வின் அதிகாரத்தை கைபற்றுவதற்காக சட்ட போராட்டங்கள் இறுதி அத்தியாயத்தை நெருங்கி வருகிறது. தற்போது பொதுச் செயலாளாராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டதற்கு, கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவும் அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களும், அ.தி.மு.க-வின் அடிப்படை சட்ட விதிகள் மாற்றம் செய்யப்பட்டதும் முக்கிய பங்காற்றுகிறது.

அதிமுக பொதுக்குழு

எனினும், கட்சியின் சட்ட திருத்தங்களை இந்திய தேர்தல் ஆணையம் இன்னும் முழுமையாக அங்கீகரிக்கவில்லை என்பதால், பொதுச் செயலாளர் என்ற பதவியையும் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை என்பதுதான் பொருள். எனவேதான், அ.தி.மு.க பொதுச்செயலாளராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டதற்கான ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் இரு வாரங்களுக்கு முன்பாக அனுப்பியது எடப்பாடி தரப்பு.

அதுகுறித்து எந்த நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளாததால், ஆணையத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்றே கோப்புகளில் இருக்கிறது.
இதை மாற்றி, அ.தி.மு.க பொதுச் செயலாளராக தன்னை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி எடப்பாடி பழனிசாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் புருசந்திரா குமார், கவுரவ் அமர்வு முன்பு மார்ச் 12-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'எடப்பாடி பழனிசாமி அதிமுக-வின் பொதுச்செயலாராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டெல்லி உயர் நீதிமன்றம்

அந்த தகவல் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டும் அங்கீகரிக்காமல் தேர்தல் ஆணையம் வேண்டுமென்றே காலதாமதம் செய்கிறது. ஜூலை 11-ம் தேதி நடந்த தீர்மானங்களை இந்திய தேர்தல் ஆணையம் இன்னும் அங்கீகரிக்கவில்லை' என குறிப்பிட்டு, 'கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு வழக்கு விசாரணையை விரைந்து நடத்தி முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என வாதிட்டார். இதையடுத்து, 'அ.தி.மு.க சட்ட விதி திருத்தங்களை ஏற்பது பற்றி 10 நாள்களுக்குள் முடிவு எடுக்கப்படும்' என தேர்தல் ஆணையம் தரப்பில் உத்தரவாதம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

அதன்படி, வரும் 10 நாள்களில் அ.தி.மு.க-வின் ஒற்றை தலைமை விவகாரம் சட்ட ரீதியாக முடிவுக்கு வந்துவிடும் என்று எடப்பாடி தரப்பினர் நம்புகின்றனர். இதுதொடர்பாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஒருவரிடம் பேசினோம். ``அ.தி.மு.க-வின் சட்ட விதிகளை மாற்றம் செய்த ஆவணங்கள் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிறது. அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி பெயரில் தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவு கணக்கை ஏற்றுக்கொண்டது இந்திய தேர்தல் ஆணையம். எனினும் திட்டமிட்டே சட்ட விதிகள் மாற்றம் குறித்து தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்கமால் இருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி

ஏனென்றால், சட்டவிதிகள் திருத்ததை ஏற்றுக் கொண்டால், ஓ.பி.எஸ் உள்ளிட்டோரை நீக்கியது உள்ளிட்ட எல்லாமே செல்லும். அப்படி ஆணையம் ஏற்று கொள்ளும்போது, பொதுக்குழு தொடர்பாகவோ, பொதுச் செயலாளர் குறித்தோ ஓ.பி.எஸ் தரப்பில் எந்த வழக்கும் தொடுக்க முடியாது. எல்லா விதிகளும் சரியாக இருந்தும், தேர்தல் ஆணையம் மௌனமாக இருக்கிறது. இதில் உள்நோக்கம் இருப்பதாலேயே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். இனி ஆணையத்தால் இந்த விவகாரத்தை கிடப்பில் போட முடியாது. 10 நாள்களில் எங்கள் தரப்பில் கொடுக்கப்பட்ட அனைத்து ஆவணங்களை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்." என்றார்.  

அதற்கு வாய்ப்பே இல்லை என்று நம்மிடம் பேசத் தொடங்கினார் பன்னீர் தரப்பின் வழக்கறிஞர் ஒருவர். தொடர்ந்து பேசிய அவர், "நீதிமன்றம் போல தேர்தல் ஆணையம் செயல்படாது. தேர்தல் ஆணையத்தில் ஒரு ஃபைல் ஓகே ஆக வேண்டும் என்றால், எல்லா சட்டதிட்டங்களை அலசி ஆராய்வார்கள். அ.தி.மு.க-வின் உயிர்நாடியான சட்டங்களை மதிக்காமல், விதிகளை இஷ்டத்துக்கு மாற்றியிருக்கிறார்கள் எடப்பாடி தரப்பினர்.

அதிமுக - தேர்தல் ஆணையம்

அதனால்தான், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்க வசதியாக ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்துவது தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியது. எங்களை பொறுத்தவரையில் எடப்பாடி தரப்பு கொடுத்த ஆவணங்களை தேர்தல் ஆணையம் அங்கரிக்க வாய்ப்பே இல்லை." என்கிறார்.

தேர்தல் ஆணையம் என்ன முடிவெடுக்க போகிறது என்பதை 10 நாள்கள் பொறுத்திருந்து பார்க்கலாம்!



source https://www.vikatan.com/government-and-politics/politics/is-aiadmks-legal-battles-coming-to-an-end

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக