Ad

வெள்ளி, 14 ஏப்ரல், 2023

``அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில்கூட பட்டியலின மக்கள் வழிபட முடியவில்லை” - கே.பாலகிருஷ்ணன்

சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 133-வது பிறந்த நாளை முன்னிட்டு ராஜபாளையம், தென்காசி சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பேரணியையும் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "இந்தியா முன்னேற வேண்டுமானால் சமத்துவத்திற்கு தடையாக இருக்கும் சாதியமும் அதற்கு அடிப்படையாக இருக்கும் வருணாசிரம தர்மமும் ஒழிக்கப்பட வேண்டும் என டாக்டர் அம்பேத்கர் தன் வாழ்நாள் முழுவதும் போராடினார். அண்ணல் அம்பேத்கரின் இந்தப் போராட்டத்தை மேலும், மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலிமையோடு முன்னெடுக்கிறது. வருகிற மே மாதம் 16-ம் தேதி விழுப்புரத்தில் சாதிய சமத்துவ பாதுகாப்பு மாநாடு என்னும் பெயரில் பட்டியலின பழங்குடி மக்களுடைய வாழ்வாதார மாநாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற உள்ளது.

இந்தியாவில் கடைசி மனிதனுக்கு, தீண்டாமை என்ற பெயரால், சமூக ஒடுக்குமுறை என்ற பெயரால் இழைக்கப்படுகிற கொடுமைகளை ஒழித்துக் கட்டவேண்டும். இதை செய்வதற்கு, அதற்கு அடிப்படையாக இருக்கிற சாதியத்தை ஒழித்துக்கட்ட டாக்டர் அம்பேத்கர் தூக்கி பிடித்திருக்கிற போராட்டம் இந்தியாவிலே முன்னெடுக்கப்படும். தமிழகத்தில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது இழைக்கப்படுகிற பல்வேறு கொடுமைகளை தடுப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு இன்னும் தீவிரப்படுத்த வேண்டும். இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோயில்களில்கூட இன்னமும் பட்டியலின மக்கள் நுழைந்து வழிபட தடை விதிக்கப்படுகிற நிலைமை இருக்கிறது. ஏதோ ஒரு விதத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் இந்த சமூகஒடுக்கு முறை பட்டியலின மக்களுக்கு இழைக்கப்படுகிறது.

மரியாதை

உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தை நடத்திட காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. அனைத்து அமைப்புகளும் ஜனநாயக ரீதியாக ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், நடத்துவதற்கு அண்ணல் அம்பேத்கர் வகுத்துக்கொடுத்த அரசியல் சட்டம் உரிமையை கொடுத்திருக்கிறது. அந்த கோட்பாட்டின் அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த உரிமைகளை காரணம் காட்டி ஆர்.எஸ்.எஸ் போன்ற மதவெறி அமைப்புகளுக்கு அனுமதி அளிப்பதே மார்க்சிஸ்ட் கட்சி ஏற்கவில்லை.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, மனித உரிமை என்பதை பயன்படுத்தி நாட்டிலே மத கலவரத்தை உண்டாக்குகிற ஒரு அமைப்பு என்பதை ஏனோ உச்ச நீதிமன்றம் கவனத்தில் கொள்ள தவறிவிட்டது. எனவே, தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணியின்போது முறையான பாதுகாப்பு போடவேண்டும். சிறு அசம்பாவிதம் நடந்தாலும் அவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். சனாதன பேர்வழிகளை பொறுத்தவரை பேச்சு ஒன்று, செயல் ஒன்று என்ற நிலையில் இருக்கும். இரண்டிற்கும் தொடர்பு இருக்காது.

சி.பி.எம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

பிரதமர் நரேந்திரமோடி தமிழில் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கிறார். உலகிலேயே தமிழ்தான் மூத்தமொழி என்கிறார். அப்படியானால் அத்தகைய தமிழை மத்திய அரசு ஏன் ஆட்சி மொழியாக மாற்றவில்லை?. மேடையில் தமிழை தூக்கிப் பிடிக்கும் மத்திய அரசு, நடைமுறையில் இந்தியும், சமஸ்கிருதமும் தான் ஆட்சிமொழிக்கு தகுதி வாய்ந்தது என்கின்றனர். பிரதமர் மோடியின் குரலாக தற்போது ஆளுநரும் தமிழை உயர்த்தி பேசுகிறார். அவர்களின் வாயில் மட்டும்தான் தமிழ் இருக்கிறது. செயலில் தமிழுக்கு விரோதம் தான் இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் என்ற அமைப்பை ஏற்றுக் கொண்டவர்கள் அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ்ஸாக மட்டுமே இருப்பார்களே தவிர, அவர்கள் மரணிக்கும் வரை மனமாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை இல்லை" என தெரிவித்தார்.



source https://www.vikatan.com/government-and-politics/governance/till-the-date-scheduled-people-cant-enter-even-hrce-temples-says-kbalakrishnan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக