கோடை காலம் வந்து விட்டால் மாம்பழங்களின் வரத்து அதிகரித்துவிடும். எங்கு பார்த்தாலும் மாம்பழங்களாகவே காட்சியளிக்கும். மகாராஷ்டிராவில் கொங்கன் பகுதியில் மட்டுமே விளையக்கூடிய அல்போன்சா மாம்பழங்கள் ஒரு டஜன் 1000 ரூபாயிக்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று மத்திய பிரதேசத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே விளையும் நூர்ஜஹான் மாம்பழம் ஒன்றின் விலை மட்டும் 2000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இந்த மாம்பழத்தின் விலை இந்த அளவுக்கு அதிகமாக இருப்பதற்கு அதன் அளவும் ஒரு காரணமாகும். ஒரு பழத்தின் எடை அதிக பட்சம் 5 கிலோ வரை இருக்கிறது. அறுகி வரும் மாம்பழ ரகங்களில் ஒன்றாக அறியப்பட்டுள்ள இந்த மாம்பழம் மத்திய பிரதேச மாநிலம் குஜராத் எல்லையில் உள்ள அலிராஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கத்திவாடா என்ற இடத்தில் மட்டுமே மட்டுமே விளைகிறது. அதுவும் தனியார் பண்ணைகளில் மட்டுமே இந்த மரங்கள் தற்போது காணப்படுகிறது.
அதோடு மாநிலம் முழுவதும் மொத்தமே 8 மரங்கள் மட்டுமே இருக்கிறது. இந்த மரங்களை அதன் உரிமையாளர்கள் மிகவும் கவனமாக பாதுகாத்து வருகின்றனர்.
இது குறித்து மத்திய பிரதேச மாநிலம் அலிராஜ்புரா வேளாண்மை அறிவியல் மையத்தில் பணியாற்றும் டாக்டர் ஆர்.கே.யாதவ் கூறுகையில், "கடந்த 10 ஆண்டுகளில் நூர்ஜஹான் மாமரங்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதோடு அதன் எடையும் 4.5 முதல் 5 கிலோவிலிருந்து 3.5 கிலோவாக குறைந்துவிட்டது. அடுத்த தலைமுறைக்கு இந்த மாம்பழத்தை பாதுகாக்க விரும்புகிறோம். இதற்காக இனப்பெருக்க முறையில் இரண்டு மரங்களை விஞ்ஞானிகள் நட்டுள்ளனர். அவை இன்னும் 3 ஆண்டில் பழங்களை கொடுக்க ஆரம்பிக்கும். இத்திட்டம் வெற்றி பெற்றால் மற்ற மாம்பழங்களும் இம்முறையில் நடப்படும்" என்றார்.
அழிவது ஏன்?
நூர்ஜஹான் மாம்பழம் அதிக எடையுடன் இருந்தாலும் மற்ற மாம்பழங்களைப் போன்று அதிக இனிப்பு சுவையாக இருக்காது. எனவே அந்த மாம்பழங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லாமல் இருந்தது. இதனால் அரசு அதனை பாதுகாப்பதில் மெத்தனமாக இருந்துவிட்டது.
தற்போது இந்த மாம்பழத்தை பாதுகாப்பதோடு அதன் சுவையை அதிகரிக்கவும் ஆராய்ச்சி செய்யப்பட்டு வருவதாக டாக்டர் யாதவ் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு இந்த மாம்பழம் அதிகபட்சமாக 3.8 கிலோ எடை கொண்டதாக இருந்தது. இனிப்பு சுவை குறைவாக இருப்பதால் அதனை தொழில் தேவைகளுக்கு பயன்படுத்தலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானை பூர்வீகமாக கொண்ட இந்த மாம்பழ மரங்கள் வைத்திருப்பவர்கள் பழத்தை முன்பதிவு செய்து விற்பனை செய்கின்றனர். 3 நூர்ஜஹான் மாமரங்கள் வைத்திருக்கும் சிவ்ராஜ் சிங் இது குறித்து கூறுகையில், "மத்திய பிரதேசம் மற்றும் எல்லையோர குஜராத் பகுதியை பழ பிரியர்கள் முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்கின்றனர். ஒரு பழம் 2 கிலோவிலிருந்து 3.5 கிலோ வரை இருக்கிறது" என்றார்.
ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பூப்பூக்கும் நூர்ஜஹான் மாம்மரங்கள் ஜூன் தொடக்கத்தில் பழங்களை கொடுக்க தொடங்கும். ஒரு மாம்பழம் ஒரு அடி நீளத்திற்கு இருக்கும். இந்த ஆண்டு ஆலங்கட்டி மழை காரணமாக மாமரங்களில் பூக்கள் உதிர்ந்துவிட்டன. இதனால் பழங்களின் விளைச்சல் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே விளையும் கடந்த ஆண்டை விட அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
source https://www.vikatan.com/agriculture/farming/noorjahan-mango-in-a-state-of-extinction-in-madhya-pradesh
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக