Ad

செவ்வாய், 11 ஏப்ரல், 2023

கர்நாடகா: `தேர்தலில் வாய்ப்பு மறுப்பு' - பாஜக முன்னாள் முதல்வர் கட்சி தலைமைக்கு எதிராக போர்க்கொடி!

கர்நாடகா அரசியலில் தவிர்க்க முடியாத அரசியல் தலைவராக உள்ளவர், பா.ஜ.க முன்னாள் முதல்வர் ஜெகதிஷ் ஷெட்டார். எடியூரப்பாவுக்கு நிகரான அளவில் செல்வாக்குள்ள ஜெகதிஷ் ஷெட்டார், ‘‘தேர்தலில் போட்டியிட வேண்டாமென கட்சித்தலைமை கூறியதால் அதிருப்தியில் உள்ளேன். என்ன நடந்தாலும் தேர்தலில் போட்டியிடுவேன்,’’ எனக்கூறி, பா.ஜ.க மேலிடத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார். மே 10ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இவரின் கருத்து அரசியல் களத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

யார் இந்த ஜெகதிஷ் ஷெட்டார்?

67 வயதான ஜெகதிஷ் ஷெட்டார், தர்வாடு மாவட்டத்தின் ஹப்ளி – தார்வாடு தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏவாக உள்ளார். பா.ஜ.கவில் பல ஆண்டுகளாக பயணிக்கும் மூத்த தலைவரான ஜெகதிஷ் ஷெட்டார், 2012 – 2013ம் ஆண்டு கர்நாடகத்தின், முதலமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

ஜெகதிஷ் ஷெட்டார்

ஹப்ளி – தார்வாடு தொகுதியில் தொடர்ந்து, ஆறு முறை எம்.எல்.ஏ–வாக வெற்றி பெற்றுள்ள இவர், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி என, பல துறைகளில் அமைச்சராகவும் இருந்துள்ளார்.

‘என்ன நடந்தாலும் போட்டியிடுவேன்‘!

இப்படியான நிலையில், ஜெகதிஷ் ஷெட்டார் இன்று நிருபர்களிடம், ‘‘வரும் தேர்தல் குறித்து, என்னிடம் பா.ஜ.க மேலிட தலைவர்கள் தொடர்பு கொண்டு பேசினார்கள். தேர்தலில் மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதால், என்னை போட்டியிட வேண்டாமென அவர்கள் கூறியது, எனக்கு மிகவும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நான் தேர்தல்களில் ஒரு முறை கூட தோற்றதில்லை, 25 ஆயிரம் ஓட்டுக்களுக்கு மேல் பெற்று, ஆறு முறை வென்றுள்ளேன். 30 ஆண்டுகளுக்கும் மேலாக பா.ஜ.க கட்சிக்காக உழைத்துள்ளேன், என் மீது எந்தப்புகாரும் இல்லை, எனக்கான வாய்ப்பை மறுக்க எந்தக்காரணமும் இல்லை.

ஜெகதிஷ் ஷெட்டார்

வரும் தேர்தலுக்காக எனது தொகுதியில் வாக்கு சேகரிப்பு பணிகளை துவங்கிவிட்டேன். 2 மாதங்களுக்கு முன்பாவது தேர்தலில் போட்டியிட வேண்டாமென தெரிவித்திருந்தால் அதை ஏற்றுக்கொண்டிருப்பேன். வேட்புமனு தாக்கலுக்கு இரண்டு நாட்கள் உள்ள நிலையில், போட்டியிட வேண்டாமென தெரிவித்துள்ளது ஏற்புடையதல்ல. வரும் தேர்தலில் என்ன நடந்தாலும் சரி நான் போட்டியிடுவேன் என, கட்சித்தலைமையிடம் கூறியுள்ளேன். தங்கள் முடிவை மாற்றிக்கொள்ள வேண்டுமெனவும் அவர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளேன்,’’ எனப் பேசியுள்ளார்.

ஏற்கனவே சில பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் கட்சியை விட்டு வெளியேறி காங்கிரஸில் இணைந்து வரும் நிலையில், ஜெகதிஷ் ஷெட்டார் கட்சித்தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளது, பா.ஜ.க மேலிடத்துக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/government-and-politics/election/denial-of-ticket-in-elections-karnataka-bjp-ex-chief-minister-war-flag-against-the-party-leadership

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக