Ad

வியாழன், 13 ஏப்ரல், 2023

``எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டும்’’ - ராகுல் காந்தி, கார்கேயை சந்தித்த சரத் பவார்

அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் நடவடிக்கைகளை மம்தா பானர்ஜி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவார் எடுத்திருக்கின்றனர். ஆனால் சரத் பவாரை தவிர்த்து ஒவ்வொருவரும் காங்கிரஸ், பா.ஜ.க. இல்லாத எதிர்க்கட்சி கூட்டணியை உருவாக்க முயன்றனர்.

இதனால் இந்த முயற்சி தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது. தற்போது காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் இது குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கின்றன. கடந்த சில நாள்களுக்கு முன்பு பீகார் முதல்வர் நிதீஷ் குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தியை சந்தித்து, வரும் மக்களவை தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினர்.

ராகுல் காந்தி

அதோடு எதிர்க்கட்சிகளை ஓரணியில் சேர்ப்பது குறித்தும் விவாதித்தனர். நிதீஷ் குமார் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்புக்கு பிறகு கருத்து தெரிவித்த கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் காங்கிரஸ், பா.ஜ.க. அல்லாத மூன்றாவது அணிக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்தனர்.அவர்களை தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் நேற்று மாலையில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தியை மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின் போது மூன்று தலைவர்களும் மக்களவை தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளை ஓரணியில் சேர்ப்பது குறித்து பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து சரத் பவார், ``நான் எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரையும் சந்தித்து பேச விரும்புகிறேன். மம்தா பானர்ஜி, அர்விந்த் கெஜ்ரிவால் ஆகியோரையும் சந்தித்து பேசுவேன். அனைவரையும் சேர்ந்து எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியை முன்னெடுத்துச் செல்வோம்’’ என்றார்.

இந்தச் சந்திப்பு குறித்து மல்லிகார்ஜுன கார்கே, ``மும்பையிலிருந்து வந்து எங்களைச் சந்தித்து எங்களுக்கு சரத் பவார் வழிகாட்டியிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஏற்கெனவே பீகார் முதல்வர் நிதீஷ் குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் என்னையும், ராகுல் காந்தியையும் சந்தித்து பேசினர். நாங்கள் எதிர்க்கட்சிகளை ஒற்றுமையாக வைத்திருப்போம். நாடு, சுதந்திரம், அரசியலமைப்பு, பேச்சு சுதந்திரத்தை பாதுகாக்கவும், அரசு ஏஜென்சிகள் தவறாக பயன்படுத்தப்படுவதற்கு எதிராகவும், ஒன்றாக நின்று போராட தயாராக இருக்கிறோம்’’ என்று தெரிவித்தார்.

ராகுல் காந்தி இது குறித்து, ``எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் நடவடிக்கைகள் தொடங்கி விட்டதாக கார்கேயும், சரத் பவாரும் சொன்னார்கள். இது தொடக்கம் தான். அனைத்து எதிர்க்கட்சிகளும் இதில் உறுதியாக இருக்கிறோம். நாங்கள் அனைவரும் ஒற்றுமையாகவே இருக்கிறோம்’’ என்று தெரிவித்தார்.

சரத் பவார்

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சி எதிர்பார்த்ததை விட விரைவாக நடப்பதாக எதிர்க்கட்சி தலைவர்கள் தெரிவித்தனர். அதோடு விரைவில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் ஒன்றை கூட்ட காங்கிரஸ் கட்சி திட்டமிட்டிருக்கிறது. இந்த ஆலோசனை கூட்டத்துக்கு அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் அழைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.

ஆனால் மம்தா பானர்ஜி, சந்திரசேகர் ராவ், அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் வருவார்களா என்று தெரியவில்லை. இவர்கள் மூன்று பேரும் தங்களை எதிர்க்கட்சி கூட்டணிகளின் தலைவர்களாக முன்னிறுத்த முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இது தவிர ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் போன்ற தலைவர்கள் எந்தப்பக்கமும் சேராமல் இருக்கின்றனர்.



source https://www.vikatan.com/government-and-politics/pawar-meets-kharge-rahul-gandhi-leaders-say-beginning-of-process-to-unite-opposition-parties

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக