Ad

ஞாயிறு, 9 ஏப்ரல், 2023

வார்டனை தாக்கிவிட்டு 12 சிறுவர்கள் தப்பியோட்டம்! - நெல்லை கூர்நோக்கு இல்லத்தில் பரபரப்பு

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் புதிய பேருந்து நிலையம் அருகே சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டுவரக் கூடிய அரசினர் கூர்நோக்கு இல்லம் உள்ளது. பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் 18 வயதுக்குக் குறைவான சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டு விசாரணையை எதிர்கொண்டு வருகின்றனர்.

காவல்துறையினர் விசாரணை

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களைச் சேர்ந்த இளம் சிறார்கள் கூர்நோக்கு இல்லத்தில் தங்க வைக்கப்படுகிறார்கள். தற்போது நெல்லையில் உள்ள இல்லத்தில் 20 பேர் தங்கியுள்ளனர். அவர்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்படுவதுடன், நற்போதனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

நெல்லை கூர்நோக்கு இல்லத்தில் தங்கியுள்ள அனைவருக்கும் 9-ம் தேதி இரவு உணவு வழங்கப்பட்டுள்ளது. அங்குள்ள 20 பேரும் உணவைப் பெற்றுக்கொண்டு தங்கள் அறைக்குச் சென்றபோது சிலர் மட்டும் கும்பலாக வந்து வார்டனை தாக்கிவிட்டு இல்லத்தில் இருந்து தப்பியோடி விட்டனர். எதிர்பாராத வகையில் நடந்த இந்தச் சம்பவத்தால் நிலைகுலைந்த வார்டன், இது பற்றி பெருமாள்புரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

கூர்நோக்கு இல்லத்தில் தங்கியிருந்தவர்களில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர், தூத்துக்குடி மற்றும் மாவட்டங்களைச் சேர்ந்த தலா மூவர், கன்னியாகுமரி மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த தலா ஒரு சிறுவர் என மொத்தம் 12 பேர் தப்பியோடிவிட்டனர். இது பற்றி கேள்விப்பட்டதும் நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பேருந்து நிலையம், ரயில் நிலையம், மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் சிறுவர்கள் பதுங்கி இருக்கிறார்களா என போலீஸார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். கூர்நோக்கு இல்லத்தின் கண்காணிப்பாளர் ஜெய்சங்கர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அருள்செல்வி உள்ளிட்ட அதிகாரிகளும் இல்லத்தின் வாயிலில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

நெல்லை அரசினர் கூர்நோக்கு இல்லம்

தப்பிச் சென்ற சிறுவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் சென்றார்களா என்பது பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த 8-ம் தேதி தேசிய குழந்தைகள் ஆணைய உறுப்பினர் ஆனந்த், அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்துவிட்டுச் சென்ற மறுநாளில் 12 சிறுவர்கள் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/crime/12-juveniles-escaped-from-the-government-observation-home-in-nellai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக