Ad

செவ்வாய், 18 ஏப்ரல், 2023

நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்... எப்போது? என்ன செய்ய வேண்டும்?

நம்மில் பலரின் வாழ்க்கை லட்சியம் கோடீஸ்வரர் ஆவதாக உள்ளது. வாழ்நாளில் குறைந்தபட்சம் ரூ.1 கோடியாவது சேர்த்துவிட வேண்டும் எனப் பலரும் துடிக்கிறார்கள். கோடீஸ்வரர் ஆவது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.

கோடீஸ்வரர் முதலீட்டில் மூன்று விஷயங்களை மட்டும் கவனித்தால் போதும். முதலீடு செய்யும் தொகை, முதலீடு செய்யும் காலம், முதலீடுக்கு கிடைக்கும் வருமானம் ஆகியவை அந்த மூன்று விஷயங்களாகும்.

கோடீஸ்வரர்...

எவ்வளவுக்கு எவ்வளவு அதிக தொகையை முதலீடு செய்கிறோமோ அந்த அளவுக்கு சீக்கிரமாக கோடீஸ்வரர் ஆக முடியும்.

முதலீட்டுக்கு கிடைக்கும் வருமானம் என்ன என்பதை ஆராய வேண்டும். முதலீட்டுக்கு எந்த அளவுக்கு அதிக வருமானம் கிடைக்கிறதோ, அந்த அளவுக்கு சீக்கிரம் கோடீஸ்வரர் ஆக முடியும். அதற்கு சரியான முதலீட்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கடைசியாக முதலீட்டும் காலம் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அதற்கு ஏற்ப கோடீஸ்வரர் ஆகலாம்.

எஸ்ஐபி முதலீடு மூலம் கோடீஸ்வரர்..!

சிறிய தொகையாக இருந்தாலும் நீண்ட கால முதலீட்டை தொடர்ந்து செய்து வந்தால்கூட கோடீஸ்வரர் ஆக முடியும். அதனால், முதலீட்டை எவ்வளவு சீக்கிரம் ஆரம்பிக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் ஆரம்பிப்பது நல்லது. ஒருவர் மாதம்தோறும் ரூ.2,000 வீதம் முதலீடு செய்து வருகிறார் என வைத்துக் கொள்வோம். இந்த முதலீட்டுக்கு அவருக்கு ஆண்டுக்கு சராசரியாக 15 சதவிகித வருமானம் கிடைத்தால் அவர் 28 ஆண்டுகளில் கோடீஸ்வரர் ஆவார். இதுவே அவரின் முதலீட்டுக்கு சராசரியாக 12 சதவிகித வருமானம் கிடைத்தால் அவர் 33 ஆண்டுகளில் கோடீஸ்வரர் ஆவார்.

சிவகாசி மணிகண்டன்   நிதி ஆலோசகர், Aismoney.com

இதுவே ஒருவர் மாதம்தோறும் ரூ.5,000-ஐ நல்ல ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்து வந்து அவருக்கு ஆண்டுக்கு சராசரியாக 12% வருமானம் கிடைத்தால் அவர் 25 ஆண்டுகளில் கோடீஸ்வரர் ஆகி விடுவார். இதுவே மாதம் ரூ.20,000 முதலீடு செய்து, அதற்கு ஆண்டுக்கு 12% வருமானம் கிடைத்தால் 15 ஆண்டுகளில் கோடீஸ்வரர் ஆகிவிடலாம். மாதம் ரூ.30,000 முதலீடு செய்தால் அதற்கு 12% வருமானம் கிடைத்தால் 12 ஆண்டுகளில் கோடீஸ்வரர் ஆகிவிடலாம்.

இதுவே முதலீட்டில் ரிஸ்க்கே எடுக்கவில்லை என்றால் ஆண்டுக்கு 6% வருமானம் தரும் ஃபிக்ஸட் டெபாசிட்டில் மாதம் ரூ.5,000 முதலீடு செய்தால் 40 ஆண்டுகளில் கோடீஸ்வரர் ஆக முடியும். இதுவே, மாதம் ரூ.30,000 முதலீடு செய்தால் 16 ஆண்டில் கோடீஸ்வரர் ஆக முடியும்.

எவ்வளவு சீக்கிரமாக ஆரம்பிக்கிறோம், எவ்வளவு அதிக தொகையை முதலீடு செய்கிறோம்; எவ்வளவு அதிக வருமானம் கிடைக்கிறது என்பதைப் பொறுத்து ஒருவர் விரைவிலேயே கோடீஸ்வரர் ஆகிவிடுவார்.

கோடீஸ்வரர் ஆக மாதம் எவ்வளவு முதலீடு?

அட்டவணையை எப்படிப் பயன்படுத்துவது?

மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் எஸ்.ஐ.பி முதலீட்டில் மாதம் ஒருவரால் எவ்வளவு தொகை முதலீடு செய்யலாம், அதன் மூலம் வெவ்வேறு வருமானத்தில் ஒருவர் எத்தனை ஆண்டுகளில் கோடீஸ்வரர் ஆக முடியும் என்பதை விரிவாகக் குறிப்பிட்டுள்ளோம்.

உதாரணமாக, ஒருவர் மாதம் ரூ.10,000 வீதம் எஸ்.ஐ.பி முறையில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்து வருகிறார். அவரின் முதலீட்டுக்கு ஆண்டுக்கு 10 சதவிகித வருமானம் கிடைத்தால் அவர் 22 ஆண்டுகளில் கோடீஸ்வரர் ஆகிவிடுவார்.

உங்களால் எவ்வளவு முதலீடு செய்ய முடியும் என்பதைத் தீர்மானித்து, அதற்கேற்ப நிதித்திட்டமிடல் செய்யுங்கள், விரைவாக உங்கள் முதலீட்டை தொடங்குங்கள்... கோடீஸ்வரர் ஆக வாழ்த்துகள்..!



source https://www.vikatan.com/personal-finance/money/what-to-do-to-become-a-millionaire-how-fast-can-you-become-a-millionaire

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக