Ad

திங்கள், 10 ஏப்ரல், 2023

10, 12-வது படித்துவிட்டு சிகிச்சை பார்த்த போலி டாக்டர்கள்; அடுத்தடுத்து சிக்கிய 4 பேர்! - அதிர்ச்சி!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் கூட்டுச்சாலையில் மெடிக்கல் ஒன்று இயங்கி வருகிறது. இந்த மெடிக்கலை திண்டிவனம் ஆர்.எஸ்.பிள்ளை வீதியைச் சேர்ந்த சாதிக் பாஷா என்பவர் நடத்தி வந்திருக்கிறார். இந்த நிலையில் அந்த மெடிக்கல் மீது பல்வேறு புகார்கள் எழுந்தது. எனவே, நேற்று முன்தினம் திண்டிவனம் காவல் ஆய்வாளர் கலைச்செல்வி மற்றும் ஒலக்கூர் போலீஸார் தலைமையில் சாதிக்பாஷா நடத்தி வரும் மெடிக்கலில் விசாரணை மேற்கொண்டனர்.  

சாதிக்பாஷா மெடிக்கல் ஆய்வு

அதில், சாதிக்பாஷா பத்தாம் வகுப்பு படித்துவிட்டு பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்துவந்தது தெரியவந்தது. இதனையடுத்து, திண்டிவனம் அரசு மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அலுவலர் சாந்தகுமாரி, ஒலக்கூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், சாதிக் பாஷா மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதேப்போல், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த கண்ணமங்கலம் அருகே உள்ள வண்ணாங்குளம், ஓண்ணுபுரம், குன்னத்தூர், கொங்கரம்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் போலி மருத்துவர்கள் மருத்துவம் பார்த்து வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் சென்றிருக்கிறது. எனவே, செய்யார் மாவட்ட சுகாதார நல இணை இயக்குநரின் உத்தரவின் பேரில், ஆரணி அரசு மருத்துவமனையின் மருத்துவ அலுவலர்கள் மற்றும் சுகாதார துறையினர் வண்ணாங்குளம், அத்திமலைபட்டு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

செந்தில்குமார் - பழனிவேல்

இந்த ஆய்வின்போது, வண்ணாங்குளம் கிராமத்தில் தனது வீட்டிலேயே மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்த  பழனிவேல்(40) என்பவர் பிடிபட்டார். அவரிடம், சுகாதார துறையினர் விசாரணை மேற்கொண்டதில், பழனிவேல் பி.பார்ம் படித்துவிட்டு மருத்துவம் பார்த்துவந்தது தெரியவந்தது. எனவே, மருத்துவ அலுவலர்கள் பழனிவேல் உபயோகப்படுத்திய மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்தனர். இதுமட்டுமின்றி, ஆரணி - வேலூர் சாலையில் உள்ள அத்திமலைபட்டு அருகே 10-ம் வகுப்பு மட்டும் படித்துவிட்டு வீட்டிலேயே மருத்துவம்  பார்த்த செந்தில்குமார் பிடிபட்டார். அவரிடமிருந்தும் மருத்துவ உபகரணங்கள்  பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, போலி மருத்துவர்கள் செந்தில்குமார் மற்றும் பழனிவேலை கண்ணமங்கலம் காவல்நிலையத்தில் மருத்துவ அலுவலர்கள் ஒப்படைத்தனர். 

அவர்கள் மீது, வழக்கு பதிவு செய்த போலீஸார், ஆரணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இதேப்போல், வந்தவாசி அருகே பிரம்மதேசம் கிராமத்தில், முறையாக மருத்துவம் படிக்காமல் சுரேஷ்பாபு என்பவர் கிளினிக் வைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது கண்டறியப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில், போலி டாக்டர் சுரேஷ்பாபுவை கைது செய்துள்ள பிரம்மதேசம் போலீஸார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலி டாக்டர்கள்

விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில், முறையான மருத்துவம் பயிலாமல் 4 பேர் போலியாக கிளினிக் வைத்து நடத்தி பொதுமக்களுக்கு சிகிச்சை பார்த்து வந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/crime/four-fake-doctors-have-been-caught-successively-in-tiruvannamalai-and-villupuram-districts

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக