Ad

ஞாயிறு, 9 ஏப்ரல், 2023

தலையில் சுமக்கும் மரப்பெட்டி, தினமும் 5. கி.மீ நடைபயணம்; உடைந்துபோன வளையல்காரர்களின் வாழ்க்கை!

1980, 90களில் எல்லாம், வளையல்காரர்களின் வரவை எதிர்பார்த்தே பெண்கள் கூட்டம் காத்திருக்கும். பெரிய மரப்பட்டியினைத் தலையில் சுமந்தவாறு, கிராமம் கிராமாகச் சென்று வளையல் விற்பனையில் ஈடுபடுவார்கள்.

`வளையல்கார மாமா' என்று கிராமத்துப் பெண்களால் அழைக்கப்படும் இவர்கள், கிராமத்திற்குள் சென்றுவிட்டால் போதும், கிராமத்துப் பெண்கள் அனைவரும் அவர்களைச் சூழ்ந்துவிடுவார்கள். 

மாறிவரும் இன்றைய காலச்சூழ்நிலையில், தலையில் மரப்பெட்டியைச் சுமந்து சென்று விற்பனை செய்யும் வளையல்காரர்கள் அரிதாகிவிட்டனர். பெண்கள் யாரும் அவர்களுக்காகக் காத்திருப்பதில்லை.

இந்தச்  சூழலில்தான், புதுக்கோட்டையின், நகர வீதிகளில் தலையில் மரப்பெட்டியினைச் சுமந்தவாறு சென்று கொண்டிருந்தார் முதியவர் ஒருவர். தள்ளாத வயதிலும், மரப்பெட்டியைச் சுமந்து சென்றுகொண்டிருந்த முதியவரை ஆச்சரியத்துடன் பின்தொடர்ந்தேன்.

சற்று தூரம் சென்றதும், ஒரு பெண் அவரை வழிமறிக்க, மெல்ல, மரப்பட்டியைத் தரையில் இறக்கி வைத்தவர், வேகமாகத் திறந்தார். பெட்டிக்குள் இருந்த அழகழகான வளையல்கள் நம் கவனத்தை ஈர்த்தன. அந்தப் புத்தம்புது வளையல்களிலிருந்து வந்த ஒரு வித வாசம் பரவியது.

வளையல்காரர் சன்னாசி

அரிதாகிப்போன வளையல்காரர்களில், சன்னாசியும் ஒருவர் என்பதைத் தெரிந்துகொள்ள முடிந்தது.

 அவரைப் பற்றியும், இன்றைய வளையல் வியாபாரத்தையும்  தெரிந்துகொள்ளும் ஆர்வம் எனக்குள் வந்தது. 

வியாபாரத்தை முடித்தகையோடு, வளையல்காரர் சன்னாசியிடம் பேசினேன், "புதுக்கோட்டை பெருங்களூர் பக்கத்துல இருக்க வைத்தூர்தான்  எனக்குச் சொந்த ஊரு. நாங்க எல்லாம் தெலுங்கு மொழி பேசுற ஆளுங்க. இன்னைக்கு, நேத்து இல்லை, எங்க பாட்டன், பூட்டன் காலத்துலயே இந்த ஊருக்கு வந்திட்டாங்க. எங்க ஊர்ல இருக்க பெரும்பலானவங்களுக்கு வளையல் விற்பனை செய்யிறதுதான் தொழில். எனக்கு விவரம் தெரிய எங்க தாத்தா, அப்புறம் அப்பா, இப்போ நான் இந்த வளையல் வியாபாரம் செஞ்சிக்கிட்டிருக்கேன். 30 வருஷத்துக்கு முன்னால எல்லாம், எல்லாரும் தலையிலும், சைக்கிளிலும் கட்டிக்கிட்டுதான் விற்பனை செய்யணும். இப்போ, இந்தத் தலைமுறைப் பிள்ளைங்க எல்லாம் பெரிய பெரிய வண்டியிலும், கடை போட்டும் விற்பனை செஞ்சுகிட்டிருக்காங்க. என்னோட சேர்த்து, ஒரு ஆறு, ஏழு பேர்தான், இன்னமும் இந்தப் பெட்டியைத் தூக்கிக்கிட்டுத் திரிஞ்சு விற்பனை செஞ்சிக்கிட்டிருக்கோம்.

எங்க முன்னோர்கள் எல்லாம் அந்தக் காலத்துல வளையல்களை சொந்தமா தயாரிச்சி விற்பனை செஞ்சிருக்காங்க. ஆனா, எங்க காலத்துல, நாங்க வெளிமாநிலங்களிலிருந்து வர்ற வளையல்களை வாங்கித்தான் விற்பனை செய்றோம்.

எனக்கும், இப்போ, 65 வயசாகிப்போச்சு. நான் தொழிலுக்கு வந்தே இப்போ 40 வருஷம் இருக்கும். நான் தொழிலுக்கு வந்த காலத்துல எல்லாம், இப்ப இருக்க மாதிரி கடைகள் பெருக்கம் இல்லை. நான் கொண்டுபோகிற வளையல்களுக்காக பல பெண்கள் காத்துக்கிட்டிருப்பாங்க. மாமா வந்திட்டார்னு சொல்லி, ஊரே கூடிடும். நம்மள நம்பி அவங்க கையைக் கொடுப்பாங்க.லாகவமா வளையலை மாட்டிவிடுவோம். வளையல் பெட்டியைத் திறந்த கொஞ்ச நேரத்திலேயே பாதி வளையல் காலியாகிடும். இப்போ, திருவிழா, பண்டிகை காலங்களில் மட்டும்தான் ஓரளவுக்கு வியாபாரம் ஓடுது. அதுவும் அந்த நேரங்கள்லதான் நாங்க கிராமங்களைத் தேடிப் போறோம்.  ஒரு வாரம், பத்து நாள் வரைக்கும், அங்கேயே கிடைக்கிற இடத்தில் தங்கியிருந்து வியாபாரத்தை முடிச்சாதான் வீட்டுப் பக்கமே போவோம்

வளையல்காரர் சன்னாசி

ஒரு சில நாள் சுத்தமா  வியாபாரமே இருக்காது. அதையும் சமாளிச்சுதான் ஓட்டணும். முன்னாடி மாதிரியெல்லாம்  இப்போ வியாபாரம் இல்லை. ஆனா,  இத விட்டா, எங்களுக்கு வேற பொழப்பு இல்லை. வேற தெரியாது. அதனாலதான் இந்தத் தொழிலை விடாமப் பிடிச்சு ஓட்டிக்கிட்டு இருக்கேன். இப்பவும், எனக்குன்னு சில வாடிக்கையாளர்கள் இருக்காங்க. அவங்களால தான் என் பிழைப்பே ஓடுது. முன்னாடியெல்லாம் ஒரு நாளைக்கு 10 கி.மீ வரைக்கும்கூட பெட்டியைத் தூக்கிக்கிட்டு நடந்து போய் விற்ப்னை செஞ்சிடுவேன். ஆனா, இப்ப வயசாகிப்போச்சு.

மல்லுக்கட்டி 5 கி.மீ தூரம் வரைக்கும் நடந்துபோய் வியாபாரம் பார்த்திடுவேன். பிள்ளைகள் எல்லாம் இருக்காங்க. அவங்க தனித் தனியா வியாபாரம் பார்க்க ஆரம்பிச்சு அவங்க குடும்பத்தைப் பார்த்துக்கிறாங்க.

சன்னாசி

நான் சம்பாதிக்கிறதை வச்சு, நானும் என் மனைவியும் வாழ்ந்துக்கிட்டிருக்கோம். விலைவாசியெல்லாம் ஏறிப்போச்சு. இன்னைக்கு வியாபாரம் செய்யறதே பெரும் சவாலா இருக்கு. எங்க தொழிலுக்கு அரசு ஏதாவது மானிய உதவி கொடுத்தால், அடுத்த தலைமுறைக்கு எங்க தொழிலைக் கொண்டு போவோம்" என்கிறார்.



source https://www.vikatan.com/features/human-stories/story-about-the-bangle-seller-sanasi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக