கொரோனாவின் இரண்டாவது அலையில் என் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், சக ஊழியர்கள் என நிறைய பேரை இழந்துவிட்டேன். அதுவரை மிகவும் பாசிட்டிவ்வான நபராக இருந்த நான், அடுத்தடுத்த இழப்புகளால் ரொம்பவே உடைந்து நொறுங்கிவிட்டேன். வாழ்க்கையின் மீது பிடிப்போ, பற்றோ, நம்பிக்கையோ இல்லாமல் போய்விட்டது. குடும்பம், வேலை என எதன் மீதும் கவனம் செலுத்த முடியாத நிலையில் கடுமையான மன அழுத்தத்தில் தவிக்கிறேன். இப்படியே தொடர்ந்தால் மனநோயாளியாகிவிடுவேனோ என பயமாக இருக்கிறது. நான் மீள வழி இருக்கிறதா?
- ராஜன் (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் சுபா சார்லஸ்.
``இதுவரை இந்த உலகம் சந்தித்திராத விசித்திரமான சூழலை கொரோனா காலத்தில் சந்தித்துக்கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட எல்லா மனிதர்களும் ஏதோ ஒரு வகையில் அதன் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். உலகம் முழுக்கவே இதுதான் நிலை.
சக உயிர்களுக்கு ஏதோ ஆபத்து, பிரச்னை என தெரிந்தும் அதைக் கண்டுகொள்ளாமல் போகிறவர்கள் மனிதர்களாக இருக்கவே தகுதியற்றவர்கள். சக உயிர் துடிக்கும்போது கஷ்டப்படுகிற இந்த இயல்பு மனிதர்களுக்கு மட்டுமல்ல, மற்ற உயிரினங்களுக்கும் உண்டு.
மனித மூளையை வார்த்தைகளால்கூட மாற்றியமைக்க முடியும். இதைப் பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன. அடுத்தவரின் கஷ்டத்தைப் பார்க்கும்போது நமக்கு ஒருவித ஸ்ட்ரெஸ் உருவாகிறது. மனித மூளையானது நெகட்டிவ்வாக ட்யூன் செய்யப்பட்டது. ஒரு விபத்தில் 100 பேர் இறந்துவிட்டார்கள் என்ற செய்தி வருகிறது என வைத்துக்கொள்வோம். அதே நேரத்தில் ஏழை மாணவன் தேசிய அளவிலான தேர்வில் முதலிடம் பெற்றிருக்கிறான் என்ற செய்தியும் வருகிறது. பெரும்பாலான மக்களின் கவனமும் நெகட்டிவ்வான அந்த விபத்துச் செய்தியின் பக்கம்தான் திரும்பும். மூளையின் இயல்பு அப்படிப்பட்டது.
Also Read: Covid Questions: அமெரிக்காவில் பரவத் தொடங்கியிருக்கும் `R1' வேரியன்ட்; நம்மையும் தாக்குமா?
நெகட்டிவ் செய்திகளைத் தேடித் தேடி கவனிக்கிறது. நாம் நினைத்தால் இதிலிருந்து வேறுபட்டு சிந்திக்க முடியும். அதீதமான பாசிட்டிவ் சிந்தனையை வளர்த்துக்கொள்ள வேண்டும். நல்லதே நடக்கும், நல்லதையே நினை, எல்லாம் நன்மைக்கே என வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் பாசிட்டிவ்வாகவே கடக்கப் பழக வேண்டும். அப்படி நினைக்க ஆரம்பித்தாலே அந்த நபருக்கு எல்லாம் பாசிட்டிவ்வாகவே நடக்க ஆரம்பிக்கும். அவர்களைச் சுற்றியிருப்போரையும் அந்த பாசிட்டிவிட்டி பற்றிக்கொள்ளும்.
பாசிட்டிவ் மனநிலை என்பது நிகழ்காலத் துயரங்களிலிருந்து உங்களை மீட்பதற்கு மட்டுமல்ல, உங்கள் நிரந்தர மனநல ஆரோக்கியத்துக்கும் அடிப்படை. இது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மையும்கூட. பாசிட்டிவ் மனநிலை இருந்தால்தான் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். ஆண், பெண் இருவரின் அடிப்படை ஆரோக்கியம், வளர்ச்சி, இனப்பெருக்கச் செயல்பாடு என பலவற்றுக்கும் தேவையான டெஸ்டோஸ்டீரான் சுரப்புக்கும் அது அவசியம்.
உங்கள் விஷயத்தில் நடந்தவை சோகத்தின் உச்சம்தான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதே சூழலை கொரோனாவின் இரண்டு அலைகளிலும் பல்லாயிரக் கணக்கான மக்கள் எதிர்கொண்டிருக்கிறார்கள் என்கிற நிதர்சனமான உண்மையையும் நீங்கள் உணர்ந்தாக வேண்டும். எல்லோருக்கும் பாசிட்டிவிட்டி அவசியம் என்ற நிலையில் உங்களுக்கு அது மற்றவர்களைவிட பல மடங்கு அவசியம். நீங்கள் ஏற்கெனவே பாசிட்டிவ்வாக இருந்த நபர் என்றும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அந்தப் பிடிப்பைத் தளரவிட்டு, நெகட்டிவிட்டிக்குள் போய் விடாதீர்கள். என்னைச் சுற்றி என்ன நடந்தாலும் நான் பாசிட்டிவ்வாகவே இருப்பேன் என்பதில் உறுதியாக இருங்கள்.
Also Read: Covid Questions: `லாங் கோவிட்' பாதிப்பிலிருந்தும் பாதுகாக்குமா கோவிட் தடுப்பூசி?
நடந்தவற்றை மறந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவே முடியவில்லை, மன அழுத்தம் உச்சத்தில் இருக்கிறது என நீங்கள் நினைத்தால் சற்றும் தயங்காமல் மனநல மருத்துவரின் உதவியை நாடுங்கள். அந்த நிலையில் உங்களுக்கு மாத்திரைகளும் சிகிச்சைகளும் நிச்சயம் தேவைப்படும். ஒருவேளை தற்கொலை எண்ணம் வந்தால் ஒருநொடி கூட தாமதிக்காமல் மருத்துவ உதவியை நாடுங்கள். உடனடியாக அந்த எண்ணத்தை மாற்றக்கூடிய சிகிச்சைகள் இன்று இருக்கின்றன. மனநலத்தை அலட்சியப்படுத்தினால் உயிருக்கே ஆபத்தாகலாம். அது உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் குடும்பத்தார், நண்பர்கள், உங்களைச் சார்ந்தவர்கள் எனப் பலரின் வாழ்க்கையையும் பாதிக்கக்கூடியது என்பதை மறந்துவிடாதீர்கள். மற்றவர்களின் இழப்பு உங்களை எப்படி வருத்துகிறதோ, அதே நிலையை, அதே வருத்தத்தை உங்களை நேசிப்பவர்களுக்கு கொடுத்துவிடாதீர்கள்.
எல்லாம் மாறும், நல்லதே நடக்கும் என நம்புங்கள்."
கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
source https://www.vikatan.com/health/healthy/how-can-i-tackle-the-stress-which-occurred-due-to-my-personal-losses
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக