Ad

சனி, 2 அக்டோபர், 2021

பனிவரகு பிரெட் கட்லெட் | உருளைக்கிழங்கு கம்பு தட்டை - சிறுதானிய ஸ்பெஷல் வீக் எண்ட் ரெசிப்பீஸ்!

சிறுதானிய சமையல் ஆரோக்கியமானது என்று கடந்த வருடங்களில் கூவிக்கூவி விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் சுவையின் காரணமாகப் பலரும் அவற்றின் பக்கம் திரும்புவதில்லை. சிறுதானியங்களில் சமைத்தது என்று நீங்களே சத்தியம் செய்தாலும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாதபடி அவற்றை அறுசுவையில் சமைக்க முடியும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. அது மட்டுமா... சிறுதானியங்களில் குறிப்பிட்ட சில உணவுகளைத்தான் சமைக்க முடியும் என்றும் சிலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படியல்ல... ஸ்டார்ட்டர் முதல் டெஸர்ட்வரை சிறுதானியங்களில் விருந்தே சமைக்கலாம். இந்த வார வீக் எண்டை சிறுதானிய சமையலுடன் ஆரோக்கியமாக என்ஜாய் செய்யுங்கள்...

தேவையானவை:
* பனிவரகு - அரை கப்
* பிரெட் - 2 ஸ்லைஸ்
* உருளைக்கிழங்கு - 2
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)
* வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
* இஞ்சி - பூண்டு விழுது - கால் டீஸ்பூன்
* கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
* மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
* மிளகாய்தூள் - அரை டீஸ்பூன்
* உப்பு - முக்கால் டீஸ்பூன்
* எண்ணெய் - தேவையான அளவு

கரைத்துவைக்க:
* கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - கால் கப்
* மைதா மாவு - கால் கப்
* மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்

புரட்டி எடுக்க:
* ரஸ்க் தூள் அல்லது மிக்ஸியில் பொடித்த கான்கிரஞ்ச் - தேவையான அளவு

பனிவரகு பிரெட் கட்லெட்

செய்முறை:

பனிவரகை வேகவைத்துக்கொள்ளவும். பிரெட்டை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.

பின்பு, வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து அதனுடன் சேர்க்கவும். பின்னர் அதில் உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறவும். அதனுடன் வேகவைத்த பனிவரகு, பிரெட் தூளைச் சேர்த்துக் கிளறி இறக்கி ஆறவிடவும்.

கரைக்கக் கொடுக்கப்பட்டுள்ளவற்றைத் தேவையான நீர்விட்டு பஜ்ஜி மாவைவிட சற்றுத் தளர்வான பதத்தில் கரைத்து வைக்கவும். பின்னர், ஆறிய உருளைக்கிழங்கு - பனிவரகு கலவையை விரும்பிய வடிவத்தில் கட்லெட்டுகளாகச் செய்து அவற்றைக் கரைத்து வைத்த மாவில் தோய்க்கவும்.

பின்னர், அவற்றை ரஸ்க்தூள் (அ) கான்கிரஞ்ச் தூளில் புரட்டி வைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு புரட்டிவைத்திருக்கும் கட்லெட்டைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும் அல்லது தோசைக்கல்லில் எண்ணெய்விட்டு இரண்டு பக்கங்களிலும் சிவக்க சுட்டெடுக்கலாம்.

குறிப்பு:
வறுக்காத கார்ன்ஃப்ளேக்ஸ்தான் கான் கிரஞ்ச் என்று அழைக்கப்படுகிறது. இது மளிகைக் கடைகள், டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் கிடைக்கும்.

தேவையானவை:
* உருளைக்கிழங்கு - 3 (வேகவைக்கவும்)
* கம்பு - அரை கப் (வேகவைக்கவும்)
* பிரெட் - 2 ஸ்லைஸ்
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)
* சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
* உப்பு - அரை டீஸ்பூன்
* எண்ணெய் - ஒரு கப் (பொரிக்க)

கரைத்து வைக்க :
* கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - கால் கப்
* மைதா - கால் கப்
* மிளகு - கால் டீஸ்பூன் (பொடிக்கவும்)

உருளைக்கிழங்கு கம்பு தட்டை

செய்முறை:

பிரெட்டைத் தண்ணீரில் நனைத்துப் பிழிந்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கு, வேகவைத்த கம்பு, பிரெட், நறுக்கிய பச்சை மிளகாய், சீரகத்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துப் பிசைந்து சிறிய உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும். இன்னொரு சிறிய பாத்திரத்தில் கார்ன்ஃப்ளார், மைதா மாவு, மிளகுத்தூள் ஆகியவற்றைக் கொஞ்சம் தண்ணீர்விட்டுக் கரைத்து வைக்கவும்.

பின்னர், பிடித்து வைத்த உருண்டைகளைக் கைகளில் தட்டையாகத் தட்டி, கரைத்து வைத்திருக்கும் மாவுக் கலவையில் தோய்க்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

தவாவில் எண்ணெய்விட்டு இதை வறுத்தும் எடுக்கலாம்.

தேவையானவை:
* வேகவைத்த பனிவரகு - அரை கப்
* பனீர் துண்டுகள் - அரை கப்
* மைதா மாவு - 4 டேபிள்ஸ்பூன்
* கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - 3 டீஸ்பூன்
* சோயா சாஸ் - 2 டீஸ்பூன்
* இஞ்சி - அரை இன்ச் துண்டு (தோல் சீவி நறுக்கவும்)
* பூண்டு - 4 பல் (நறுக்கவும்)
* எண்ணெய் - ஒரு கப்
* பச்சை மிளகாய் - 3 (கீறவும்)
* குடமிளகாய் - ஒன்று (சதுரங்களாக நறுக்கவும்)
* வெங்காயம் - ஒன்று (சதுரங்களாக நறுக்கவும்)
* தக்காளி சாஸ் - ஒரு டீஸ்பூன்
* வினிகர் - ஒரு டீஸ்பூன்
* உப்பு - அரை டீஸ்பூன்

பனிவரகு சில்லி பனீர்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் கார்ன்ஃப்ளார், மைதா மாவு, உப்பு, தேவையான நீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்கவும். பனீர் துண்டுகளை இதில் தோய்த்து எண்ணெயில் பொரித்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். பின்னர், அதனுடன் நறுக்கி வைத்த குடமிளகாய், வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி, பனிவரகை சேர்த்துக் கிளறவும். கலவை பாதி அளவு வெந்ததும் தக்காளி சாஸ், சோயா சாஸ் சேர்த்துக் கிளறவும். பின்னர், பனீரைத் தோய்த்துப் பொரிப்பதற்குப் பயன்படுத்திய மாவுக் கலவையில் இருக்கும் மிச்சத்தை இதனுடன் சேர்த்துக் கலக்கவும். பிறகு, பொரித்த பனீர் சேர்க்கவும். கடைசியாக வினிகர் சேர்த்துக் கலந்து இறக்கிப் பரிமாறவும்.

தேவையானவை:
* சாமை சாதம் - ஒரு கப்
* குடமிளகாய் - பாதி (பொடியாக நறுக்கவும்)
* துவரம்பருப்பு - கால் கப்
* மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிதளவு
* பூண்டு - 4 பல்
* தக்காளி - 2
* காய்ந்த மிளகாய் - 2
* மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
* புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
* காய்ந்த மிளகாய் (தாளிக்க) - 2
* கடுகு, கொத்தமல்லி - சிறிதளவு
* உப்பு, எண்ணெய் - அரை டீஸ்பூன்

சாமை சாதம் - குடமிளகாய் பருப்பு ரசம்

செய்முறை:

துவரம்பருப்பை வேகவைத்துக்கொள்ளவும். புளியைக் கரைத்துக்கொள்ளவும். மிக்ஸியில் மிளகு, சீரகம், கறிவேப்பிலை, பூண்டு, தக்காளி, காய்ந்த மிளகாய், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர்விட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு, புளிக்கரைசலை ஊற்றவும். கொதிவந்ததும் வேகவைத்த பருப்பு, நறுக்கிய குடமிளகாய் சேர்த்து ஒரு கொதிவிடவும். இதனுடன் அரைத்த விழுதையும் சேர்த்துக் கலந்து ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். சாமை சாதத்துடன் பரிமாறவும்.

தேவையானவை:
* கம்பு மாவு - அரை கப்
* கோதுமை மாவு - ஒரு கப்
* கடலை மாவு - கால் கப்
* ஓமம் - கால் டீஸ்பூன்
* மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
* எண்ணெய், உப்பு - தேவையான அளவு

விழுதாக அரைக்க:
* முந்திரி - 4
* பூண்டு - 4 பல்
* காய்ந்த மிளகாய் - 4 (அல்லது காரத்துக்கேற்ப)

கோதுமை கம்பு முந்திரி மிளகாய் பரோட்டா

செய்முறை:

முந்திரி, பூண்டு, காய்ந்த மிளகாய் ஆகிய மூன்றையும் சிறிதளவு தண்ணீர்விட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, கடலை மாவு, கம்பு மாவு, உப்பு, ஓமம், 2 டீஸ்பூன் எண்ணெய், மிளகாய்த்தூள், முந்திரி - பூண்டு - மிளகாய் விழுது ஆகிய அனைத்தையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர்விட்டு சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். பிசைந்த மாவைப் பெரிய உருண்டையாக்கி நனைத்துப் பிழிந்த துணியில் சுற்றி 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

பிறகு, அவற்றை எடுத்து உருண்டைகளாக்கி ஒவ்வோர் உருண்டையையும் பெரிய வட்டமாகத் தேய்த்துக்கொள்ளவும். பின்பு, ஒரு வட்டத்தின் மேலே ஒரு டீஸ்பூன் எண்ணெய் மற்றும் சிறிதளவு மாவு தூவி வட்டம் முழுவதும் தேய்த்து முன்னும் பின்னுமாக மடித்துச் சுருட்டி வைக்கவும். மற்ற வட்டங்களையும் அதேபோல் செய்துகொள்ளவும். பின்பு, சுருட்டி வைத்தவற்றை பரோட்டாக்களாக கைகளாலேயே தட்டி சப்பாத்திக் கல்லில் பொன்னிறமாகச் சுட்டு எடுக்கவும். தொட்டுக்கொள்ள நறுக்கிய வெங்காயம் போதும். பிரமாதமாக இருக்கும். தேவையானால் தயிர் சேர்த்துக்கொள்ளலாம்.



source https://www.vikatan.com/food/recipes/proso-millet-cutlet-potato-pearl-milllet-thattai-millet-special-weekend-recipes

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக