Ad

வெள்ளி, 29 அக்டோபர், 2021

AKS - 50: திருமணங்கள் `செட்டில்' ஆன பின்தான் நடக்கவேண்டுமா? சிவா விஷயத்தில் காயத்ரியின் முடிவு என்ன?

தான் வேலைபார்க்கும் மேட்ரிமோனியல் தளத்தில் பாண்டியனுக்கு பெண் பார்க்கலாம் என்று சொல்லி டெமோ காட்டுகிறாள் கவிதா. பாண்டியனும் ஆசையாக அவனுக்கு எந்த மாதிரி பெண் வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறான். உடனே கவிதா அவனிடம், புதிதாக இப்போதுதானே வேலையில் சேர்ந்திருக்கிறாய், இரண்டு வருடங்கள் கழித்து வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக 'செட்டில்' ஆன பின்பு திருமணம் செய்யலாம் என்று சொல்கிறாள்.

பாண்டியன் தனக்கு தன்னை போலவே 'சாப்ட்வேர்' துறையில் வேலை பார்க்கும் பெண் வேண்டும் என்று சொல்கிறான். இருவரும் வேலைக்குச் செல்லும்போது பாண்டியனை போன்ற நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்குத் திருமணம் செய்துகொள்வது எளிதுதான். ஆனால் நம் ஊரில் திருமணத்திற்குச் செய்யும் ஆடம்பரச் செலவுகளும், திருமணத்திற்குப் பிறகு ஒரு வீடு இவ்வளவு வசதிகளுடன் இருக்கவேண்டும் என்கிற நிர்பந்தம், திருமணம் ஆன உடனே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்கிற கட்டாயம், குழந்தை வளர்க்கத் தேவையான பொருளாதாரம் எல்லாமும் சேர்ந்து திருமணங்களை 'செட்டில்' ஆனதற்கு பிறகு என தள்ளிப் போடச் செய்கின்றன.

AKS - 50
பாண்டியனும் கவிதாவும் ஒரே அறையில் புனிதாவின் வீட்டில் 'Housemates' ஆக இருப்பதைப் போல பாண்டியன் திருமணம் செய்துகொண்டு மனைவியுடனும் இருக்கலாம். அது அவனது செலவுகளை பெருமளவு குறைக்கும். பழகிப் புரிந்துகொள்ள வாய்ப்பில்லாமல் பெற்றோர்கள் பார்ப்பவர்களைத் திருமணம் செய்து கொள்பவர்கள் குறைந்தபட்சம் திருமணத்திற்குப் பிறகு ஒருவருக்கு ஒருவர் புரிந்து ஏற்றுக்கொள்ளும் மனநிலை வரும்வரை குழந்தை பெற்றுக்கொள்வதைத் தள்ளிப் போடலாம். அதுவரை பொருளாதார தேவைகளைக் குறைத்துக் கொண்டு எளிதான முறையில் திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையை ஆரம்பிக்கலாம். திருமண உறவையோ, காதலையோ தீர்மானிக்கும் காரணியாக பணம் இருக்கக் கூடாது.

சிவா காயத்ரியின் இருக்கைக்கு அவளைத் தேடி வருகிறான். காயத்ரி சிவாவை பார்த்ததும் யாரிடமோ போனில் பேசுவது போல நடித்து அவனை தவிர்க்கிறாள். சிவா வெகுநேரம் ஓர் ஓரமாக நின்று காயத்ரியை பார்த்துவிட்டு செல்கிறான். இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த புனிதா, காயத்ரியிடம் சிவாவை காதலிக்கிறாயா என நேரடியாகவே கேட்கிறாள். காயத்ரி பதற்றமடைந்து, தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்பதை நினைவில் கொள்ளுமாறு புனிதாவிடம் சொல்கிறாள். சிவாவுக்கும் காயத்ரிக்கும் இடையில் ஏதோ இருப்பதாக புனிதா சொல்கிறாள்.

காயத்ரி தனக்கு சிவாவைப் பிடித்திருப்பதை வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறாள். அதே சமயம் இது தவறு என்று தனது மனம் நினைப்பதாகவும் சொல்கிறாள். இந்தப் பதற்றம் மற்றும் பயத்தைச் சமாளிக்க முடியாமல் காயத்ரி, "எனக்கு இந்தக் காதல் வேண்டாம்" என்கிறாள். முதன்முறை ஒருவரைப் பார்த்து காதலிப்பதாக உணரும்போது எல்லோருக்குமே இது சரியாக வருமா என்கிற பயம் தோன்றும். காயத்ரிக்கு ஏற்கெனவே நிச்சயமாகி இருப்பது இன்னொரு கூடுதல் காரணம். அதனால் தான் செய்வது தவறு என்பது போல காயத்ரி நினைக்கிறாள்.

AKS - 50

புனிதா சொன்னது போல காயத்ரியின் திருமணம் அவள் மேல் திணிக்கப்பட்டது. சுந்தர் காயத்ரியை கல்லூரியில் படிக்கும் போதிருந்தே விரும்புகிறான். ஆனால் காயத்ரிக்கு சுந்தர் யாரென்று தெரியாது. சுந்தருக்கு இது காதல் திருமணமாக இருக்கலாம். ஆனால் காயத்ரியை பொருத்தவரை, நல்ல வேலை, வருமானம், கெட்ட பழக்கம் இல்லாத, நல்ல குடும்பத்து பையன் என்பதை மட்டுமே பார்த்து தன் குடும்பத்தினரால் நிச்சயிக்கபட்ட திருமணம். ஒரு திருமண உறவில் கணவன் மனைவியாக போகிறவர்களுக்கு இடையில் இருக்கவேண்டிய அடிப்படை ஈர்ப்பு காயத்ரிக்கு சுந்தரின் மீது இல்லை. திருமண உறவில் இணையும்போது ஒருவர் மீது மற்றொருவருக்கு ஈர்ப்பு இருப்பது மிக முக்கியம். அதுவே எவ்வளவு ஆண்டுகளானாலும் திருமண உறவில் சலிப்படையாமல் வைத்திருக்கும்.

சுந்தரின் உறவு காயத்ரியின் மேல் திணிக்கப்பட்டது என்றும் சிவாவின்மீது தோன்றியிருக்கும் ஈர்ப்புதான் காயத்ரிக்கு இயல்பாக ஏற்பட்டது என்றும் புனிதா சொல்கிறாள். அதற்கு காயத்ரி, "சுந்தர் மிகப் பாவம், நல்லவன், அவனை ஏமாற்ற முடியாது" என்று சொல்கிறாள்.

ஒருவர் பாவம் என்றும், நமக்கு நன்மை செய்தார் என்றும் நன்றி கடனுக்காக அல்லது நல்லவர் என்கிற காரணத்துக்காகத் திருமணம் செய்து கொள்ளும்போது அந்தக் காரணங்கள் சிறிது காலத்திற்குப் பிறகு நீர்த்துப் போய் விடலாம். காதல் மற்றும் திருமண உறவில் ’இவருடன்தான் வாழ வேண்டும்’ என்று மனம் சொல்ல வேண்டும். மூளை போடும் பொருளாதார கணக்குகளுக்கும், சமூகத்தின் கோட்பாடுகளுக்கும் ஃபிட்டாக வேண்டும் என்று பார்த்து திருமணம் செய்யும்போது அந்தத் திருமணம் நிம்மதி இல்லாமல் போகும்.

AKS - 50

புனிதா பேசும்போது காயத்ரி தீவிரமாக யோசித்து, தான் சுந்தரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் இரண்டு வீட்டுக்கும் அவமானம் ஏற்படும் என்றும் தனது அப்பாவிற்கு பாதிப்பு ஏற்படும் என்றும் சொல்கிறாள். புனிதா சொல்வதைப்போல நம் ஊரில் இதுதான் பெரிய பிரச்னை. பெண் தனக்கு பிடித்தவரை திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கும்போது குடும்ப மானம், தந்தையின் உடல்நலம், எமோஷனல் பிளாக்மெயில் எல்லாவற்றையும் அனுசரித்து யோசிக்க வேண்டியிருக்கிறது.

ஒரே ஒருமுறை தன்னுடைய விருப்பத்திற்கேற்ப முடிவெடுக்க காயத்ரி தயங்கினால் பிறகு வாழ்க்கை முழுவதும் எல்லாவற்றையும் மனதில் வைத்துக் கொண்டு அனுசரித்து உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டு வாழ வேண்டும். இதனால் காயத்ரி மட்டுமல்லாது சுந்தரும் பாதிக்கப்படுவான். பிடிக்காத திருமணத்தில் ஒரு பெண் நுழையும்போது அது அவளுடைய அடுத்த தலைமுறைக்கும் சேர்த்து பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு நம் வீடுகளிலேயே உதாரணங்கள் இருக்கின்றன.

Also Read: AKS - 49 | கவிதா vs பாண்டியன் சண்டையும், குழப்பங்களின் குவியலாக இருக்கும் காயத்ரியும்!

காயத்ரி தன்னுடைய வாழ்க்கை சுந்தருடன் நிச்சயமாகிவிட்டது என்றும் அவள் அதையே தொடர்வதாகவும் சொல்கிறாள். சிவாவை திருமணம் கொள்ள வேண்டும் என்றால் வீட்டில் சொல்லி சம்மதிக்க வைக்க வேண்டும், ஏற்கெனவே நடந்த நிச்சயத்தை நிறுத்த வேண்டும் என்று மிகப் பெரிய பிரச்னைகள் கண்முன் நின்று அவளை பயமுறுத்துகின்றன. தனி ஒரு ஆளாக அதை எதிர்கொள்ள துணிவில்லாமல் காயத்ரி ஒரு தற்காலிக தீர்வாக சுந்தரை ஏற்றுக் கொள்வதுதான் சரி என்கிற முடிவுக்கு வருகிறாள். சிவாவிற்கு தான் ஏதாவது நம்பிக்கை கொடுத்திருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்பதாக புனிதாவிடம் காயத்ரி சொல்கிறாள். குறைந்தபட்சம் இப்போதாவது காயத்ரிக்கு இது புரிகிறதே என்று நிம்மதியாக இருக்கிறது!

AKS - 50

ராஜேஷும் கவிதாவும் பெங்களூரு செல்ல தயாராகின்றனர். பாண்டியன் அவசரமாக வீட்டுக்கு வந்து கொண்டிருக்கிறான். ராஜேஷிற்கு கால் செய்த பாண்டியன் தானும் அவர்களுடன் பெங்களூரு வருவதாகக் கேட்கிறான். ராஜேஷ் தாங்கள் பிளைட்டில் செல்வதாகவும் ஏற்கெனவே கிளம்பிவிட்டதாகவும் சொல்கிறான். பிளைட்டில் செல்போனை அணைத்து வைக்கச் சொல்கிறார்கள் என்று சொல்லி ராஜேஷ் பாண்டியனின் அழைப்பை துண்டிக்கிறான். ராஜேஷ் ஏன் பொய் சொன்னான் என்று கேட்கும் கவிதாவிடம், "பாண்டியனுக்கு ஈகோ இருக்கின்றது. அதனால்தான் உன்னை அழைக்காமல் எனக்கு கால் செய்து இருக்கிறான்" என்று ராஜேஷ் கூறுகிறான்.

கவிதாவிற்கு பாண்டியன் மீது கோபம் அதிகமாகிறது. பாண்டியன் தனக்கு கால் செய்வான் என்று கவிதா காத்திருக்கிறாள். செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்து வைக்க வேண்டும் என்று ஏர்ஹோஸ்டஸ் சொல்வதாக ராஜேஷ் சொன்னதால், பாண்டியன் ஒருவேளை கவிதாவுக்கு கால் செய்யாமல் இருக்கலாம். ஆனால், இது அவளுக்குப் புரியாமல் போயிருக்கலாம்.

AKS - 50

கவிதா வழக்கம்போல் பாண்டியன் மேல் தவறு என்று கோபித்துக் கொள்கிறாள். கவிதாவுக்கும் பாண்டியனுக்கும் இடையில் உண்டான சிறு விரிசலை பெரிய பிளவாக்கி ராஜேஷ் கவிதாவை முழுவதுமாக தன் பக்கம் திருப்பப் பார்க்கிறான்.

காயத்ரிக்கு சிவாவை கஷ்டப்படுத்தி இருக்கிறோம் என்று புரிந்திருக்கிறது. புனிதா சொல்லும் சமாதானத்தை சிவா ஏற்றுக் கொள்வானா?
பாண்டியன் இல்லாமல் கவிதா ராஜேஷுடன் மகிழ்ச்சியாக பெங்களூரில் இருப்பாளா?

காத்திருப்போம்!



source https://cinema.vikatan.com/television/aks-episode-50-gayathris-decision-and-kavithas-animosity-towards-pandiyan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக