Ad

புதன், 27 அக்டோபர், 2021

விஜயபாஸ்கர் குவாரி உட்பட 16 குவாரிகள்... கனிமவளத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு!

சென்னை ஆர்.கே. நகர் பணப்பட்டுவாடா புகார் எழுந்த போது, தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம், குவாரிகளில் கடந்த 2017-ல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி சில ஆவணங்களைக் கைப்பற்றினர். அதில், திருவேங்கைவாசலில் உள்ள கல்குவாரியில் அரசு அனுமதித்த அளவைவிட அதிகளவில் பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. திருவேங்கைவாசலில் உள்ள கல்குவாரி குத்தகைதாரர்களின் பெயரில் இயங்கி வருகிறது. இங்குள்ள குவாரிகளில் அரசு அனுமதித்த அளவைவிட 1,02,241கன மீட்டர் அளவிற்குக் கற்களும், 71,912கன மீட்டர் அளவிற்கு கிராவல் மண் எடுத்ததாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில் கடந்த 2019-ல் சுப்பையா என்ற குத்தகைதாரருக்கு ரூ.6.45 கோடி அபராதம் விதிக்கபப்ட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 16 இடங்களில் இந்தக் கல்குவாரிகள் செயல்படுகிறது. இந்த நிலையில் தான், இலுப்பூர் மற்றும் குளத்தூர் வட்டங்களில் திருவேங்கைவாசல், ஆயிங்குடி, மேலூர், பெருஞ்சுனை உள்ளிட்ட இடங்களில் குத்தகைதாரர்களின் பெயரில் செயல்பட்டு வரும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருக்குச் சொந்தமான 6 குவாரிகள் உள்பட மாவட்டத்தில் செயல்படும் 16 குவாரிகளையும் ஆய்வு செய்து அறிக்கையினை சமர்ப்பிக்கக் கோரி கனிமவளத்துறை இயக்குநர் நிர்மல்ராஜ் உத்தரவிட்டார்.

அதன்பேரில், கனிமவளத்துறை துணை இயக்குநர்கள், வேதியப்பன், ரமேஷ் தலைமையிலான 9 பேர் கொண்ட குழுவானது புதுக்கோட்டையில் உள்ள குவாரிகளில் ஆய்வு செய்துள்ளனர்.

Also Read: Tamil News Today: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்புடைய 4 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை!

ஏற்கெனவே, கடந்த 2019ல் அபராதம் விதிக்கப்பட்டது போல் தற்போது, கோடிக்கணக்கில் அபராதம் விதிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுபற்றி அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, "அனைத்து குவாரிகளிலும் அரசு அனுமதித்த அளவினை விட வெட்டப்பட்டிருக்கிறதா... எவ்வளவு தூரம் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்தும் விரிவாக ஆய்வு செய்திருக்கிறோம். இதுகுறித்த அறிக்கையை விரைவில் கனிமவளத்துறை இயக்குநரிடம் ஒப்படைப்போம்.

தொடர்ந்து,தேவைப்பட்டால், மீண்டும் குவாரிகளில் சோதனையில் ஈடுபடுவோம். இயக்குநரின் ஆலோசனையின் பேரில் அடுத்தக் கட்ட நடவடிக்கை இருக்கும்" என்றனர்.

கடந்த அக்.18ம் தேதி தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரின் வீடு, அலுவலகம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் உட்பட 50இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி ஆவணங்களைக் கைப்பற்றினர். அடுத்த சில தினங்களிலேயே விஜயபாஸ்கருக்குச் சொந்தமான குவாரிகளில் கனிமவளத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி விஜயபாஸ்கருக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.



source https://www.vikatan.com/news/tamilnadu/pudukottai-officials-inspect-16-quarries-including-vijayabaskar-quarry

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக