Ad

வியாழன், 28 அக்டோபர், 2021

``திமுக தலைமைக்கும் என் மீது சின்ன வருத்தம்தான்!'' - மனம் திறக்கிறார் துரை வைகோ

மதிமுக தலைமை நிலைய செயலாளராக, வைகோவின் மகன் துரை வைகோவை தேர்ந்தெடுத்ததைத் தொடர்ந்து, தமிழக அரசியலில் 'வாரிசு அரசியல்' குறித்த விவாதங்கள் சூடு பறக்கின்றன.

'வாரிசு அரசியலை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட கட்சியிலேயே, வாரிசை களமிறக்கினால் எப்படி...?' என்ற அதிருப்தியில் கட்சியைவிட்டு வெளியேறியிருக்கிறார் மாநில இளைஞரணி செயலாளரான கோவை ஈஸ்வரன். மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமியோ, துரை வையாபுரியை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற கூட்டத்திலேயே பங்கேற்கவில்லை.

கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் சிலரும், தங்கள் உடல்நலத்தைக் காரணம் காட்டி கூட்டத்தில் கலந்துகொள்வதைத் தவிர்த்துவிட்டனர் என்கிறார்கள். இதற்கிடையே, திருப்பூர் துரைசாமியின் கருத்தை அறிவதற்காக செல்பேசியில் தொடர்புகொண்டால், 'தாங்கள் என்னை அழைத்ததற்கு நன்றி!' என்று ஒற்றைவரியில் பதிலளித்துவிட்டு சட்டென பேச்சைத் துண்டித்துக்கொள்கிறார்.

இந்தச்சூழலில், வைகோவின் மகனும் மதிமுக தலைமை நிலைய செயலாளருமான துரை வைகோவிடமே நமது கேள்விகளை முன்வைத்துப் பேசினோம்....

வைகோ - துரை வைகோ

''அரசியலில், கடந்த சில வருடங்களாக வைகோவுக்குத் துணையாக வலம் வந்துகொண்டிருந்த நீங்கள் தற்போது, கட்சியின் தலைமை நிலைய செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதன் நோக்கம் என்ன?''

''கடந்த சட்டமன்றத் தேர்தலின்போதே, மதிமுக சார்பில் துரை வைகோ போட்டியிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தென் மாவட்டங்களிலும் கட்சித் தொண்டர்களிடமும் நிலவியது. திமுக தலைமையும்கூட இதைத்தான் எதிர்பார்த்தார்கள். ஆனால், கட்சியில் 28 வருடங்களாக முக்கிய நிர்வாகிகள் பணியாற்றி வருகிறார்கள். இந்த நேரத்தில் நாம் ஒரு தொகுதியில் போட்டியிட்டால், அது அவர்களது வாய்ப்பைப் பறிப்பதாகிவிடும். எனவே அவர்கள் போட்டியிடட்டும் என்றுகூறி வாய்ப்பை நான் மறுத்துவிட்டேன். இதனால், கட்சியிலும் தி.மு.க தலைமையிலும்கூட என் மீது சின்ன வருத்தம்தான்.

இப்போதும்கூட, தொண்டர்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகளின் விருப்பத்தின் பேரிலேயே என்னைக் கட்சிக்குள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.''

Also Read: 9 மாத குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம்; பாதிப்பு ஏற்படுத்துமா புதிய விதி? மருத்துவர் கூறுவது என்ன?

''வைகோவின் வாரிசு என்பதாலேயே, கட்சிப் பதவிக்கு நேரடியாக நியமனம் செய்யப்பட்டுவிட்டீர்கள் என்கிறார்களே?''

''இது கொரோனா ஊரடங்கு காலம். கடந்த ஒன்றரை வருடங்களாக, கட்சியின் முக்கியமான முடிவுகளுக்காகக்கூட பொதுக்குழு கூட்ட முடியாத சூழல். தலைமை நிலைய செயலாளர் என்ற இந்த நியமனப் பதவிக்கு பொதுக்குழுவைக் கூட்டி முடிவெடுக்க வேண்டிய அவசியம் கிடையாது. துணைப் பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்குத்தான் பொதுக்குழுவைக் கூட்டவேண்டும் என்பது கட்சி விதி.

கட்சியில் இணைந்து சேவை செய்யுமாறு தொண்டர்கள் தொடர்ச்சியாக எனக்கு அழைப்பு விடுத்துக்கொண்டே இருந்தார்கள். கட்சி நிர்வாகிகளும்கூட, 'வைகோவே நேரடியாக துரை வைகோவை கட்சி நிர்வாகியாக அறிவித்துவிடலாம்' என விருப்பம் தெரிவித்திருந்தனர். ஆனால், தலைவர் வைகோ, 'கட்சி ஜனநாயகத்தின் அடிப்படையில்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்' என்பதில் உறுதியாக இருந்தார்.

அதனால்தான், கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், உயர் நிலை மற்றும் அரசியல் ஆலோசனைக்குழு உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் அனைவருக்கும் 10 நாட்களுக்கு முன்பே கூட்டம் நடத்தப்படுவதற்கான செய்தியை அறிவித்து, செய்தியாளர்கள் முன்னிலையேயே கூட்டமும் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திலும்கூட, ரகசிய வாக்கெடுப்பு முறையே பின்பற்றப்பட்டது.''

வைகோ - மு.க.ஸ்டாலின்

''கட்சி நிர்வாகிகள் அனைவரும் உங்கள் அரசியல் வருகையை வரவேற்பதாகச் சொல்கிறீர்கள். ஆனால், முக்கிய நிர்வாகிகள் சிலர் உங்களை விமர்சிக்கவும் செய்திருக்கிறார்களே?''

''ஒன்றிரண்டு பேர்தான், இந்த விவகாரத்தை மிகைப்படுத்தி தவறான தகவல்களை ஊடகம் வழியே பரப்பிவருகிறார்கள். ம.தி.மு.க-வின் தலைமை நிலைய செயலாளர் தேர்ந்தெடுப்பு கூட்டம் ஊடகத்தினர் முன்னிலையில்தான் நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் ஊடகத்தினரிடம் வைகோ மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் இணைந்தேதான் பேட்டி அளித்தனர்.

'ரகசிய வாக்கெடுப்பு வேண்டாம்... நேரடியாக பொதுச்செயலாளரே அறிவித்துவிடலாம் என்றெல்லாம் ஆரம்பத்தில், சொல்லிக்கொண்டிருந்த ஒரு சிலர்தான் இன்றைக்கு இதை எதிர்ப்பதாகவும் ஊடகம் வழியே செய்தி பரப்பிவருகிறார்கள் என்பதுதான் இதில் வேடிக்கையான விஷயம்.

ஒருவேளை, வாக்கெடுப்பு நடத்தினால், கட்சியின் முழு ஆதரவும் எனக்கு இருப்பது வெளிப்படையாகத் தெரிந்துவிடும் என்பதாலேயே 'ரகசிய வாக்கெடுப்பு வேண்டாம்' என்றுகூட அவர்கள் சொல்லியிருப்பார்களோ என்று இப்போது சந்தேகப்பட தோன்றுகிறது.

ஆக, திராவிட இயக்கங்களுக்கு எதிரான சக்திகள்தான் இவர்களை இதுபோன்று பேச வைத்துக்கொண்டிருக்கிறது. அதாவது, 'ம.தி.மு.க-வுக்குள் பெரிய எதிர்ப்பு இருக்கிறது' என்பது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்க அவர்கள் முயற்சி செய்துவருகிறார்கள்.''

Also Read: ஆர்யன் கான் சம்பந்தப்பட்ட வழக்கும், மத்திய சமூகநீதி அமைச்சகத்தின் பரிந்துரையும்!

'' 'கட்சிக்குள் ஒரு பொறுப்பில் இருப்பது தவறு கிடையாது. ஆனால், துரை வைகோவால்தான் கட்சியை வழிநடத்த முடியும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவது தவறானது' என்று ம.தி.மு.க-விலிருந்து விலகிய ஈஸ்வரன் சொல்லியிருக்கிறாரே?''

''அது தோழர் ஈஸ்வரனின் கருத்து. தலைமை கழகச் செயலாளர் பதவி என்பது கட்சியின் தலைமைப் பொறுப்பு கிடையாது. இது ஒரு சாதாரண கட்சி நிர்வாகப் பதவிதான். துணைப் பொதுச்செயலாளர், பொருளாளர் என்பதுபோன்று முக்கியமான பதவி கிடையாது. அதனால்தான், 'கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவே, நேரடியாக நியமித்துவிடலாம்' என்று கட்சியின் மூத்த நிர்வாகிகளும் சொன்னார்கள்.

ஆனால், 'என் மகன் என்பதாலேயே அறிவித்துவிட்டேன் என்ற அவதூறு என் மீதோ அல்லது கட்சியின் மீதோ மக்களுக்கும் ஊடகத்துக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது. எனவே, கட்சியின் மூத்த நிர்வாகிகள் அனைவரின் ஒப்புதல் இருந்தால் மட்டுமே கட்சிக்குள் துரை வைகோ தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்' என்று கறாராக கூறிவிட்டார் வைகோ.

மேலும், 'துரைவைகோதான் கட்சியின் அடுத்த தலைவர் என்று வைகோ பேசியதாகவோ அல்லது கட்சி சார்பான அறிக்கை வெளிவந்ததாகவோ எதுவுமே இல்லை. மாறாக, கட்சித் தொண்டர்கள் ஆர்வ மிகுதியில் என்னைத் தலைவராக சித்திரித்து போஸ்டர் ஒட்டிவருகிறார்கள்தான். அதை நாம் என்ன செய்யமுடியும்?

கடந்த மாநாட்டின்போது, 'துரை வைகோ முகம் அச்சிடப்பட்ட போஸ்டரையெல்லாம் கிழித்தால்தான் நான் மாநாட்டுக்கே வருவேன்' என்று வைகோ திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார். இரவோடு இரவாக அத்தனைப் போஸ்டர்களையும் கிழித்தெறிந்தோம்.''

ஈஸ்வரன்

''தமிழக அரசியல் அரங்கில் இனி, 'வாரிசு அரசியல்' பற்றிய ம.தி.மு.க-வின் கருத்து என்னவாக இருக்கும்?''

''வாரிசு அரசியல் என்ற பெயரில் திணிப்பு இருக்கக்கூடாது. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் விருப்பப்பட்டு ஒருவரை அழைத்துவந்தால், அது எந்த இயக்கமாக இருந்தாலும் நான் வரவேற்கத்தான் செய்வேன். மற்றபடி, 'தலைவரது மகன் என்பதாலேயே கட்சிப் பொறுப்புகளுக்குள் வரக்கூடாது' என்று சொல்லப்படுவது எந்த நாட்டிலும் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதுதான் என் வாதமும்கூட.''

''ம.தி.மு.க-வில் இனி உங்களது அரசியல் பயணம் எப்படி இருக்கும்?''

''அரசியல் பொதுவாழ்க்கைப் பயணம் என்பது மிகவும் கடினமானது. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் என் மீது மிகுந்த எதிர்பார்ப்பு வைத்திருக்கிறார்கள். இதுவே எனக்கு மிகப்பெரிய மன உளைச்சலாகத்தான் உள்ளது. காரணம் வைகோ போன்று சிறந்த பேச்சாற்றலோ, திறமையோ என்னிடம் கிடையாது. நான் ஒருநாளும் வைகோ ஆகமுடியாது. நான் எப்போதும் துரை வைகோதான்.

அதேசமயம், எனக்கென்று இருக்கக்கூடிய திறமையைக் கொண்டு, என்னால் முடிந்தளவு மக்கள் பிரச்னைகளுக்காக உறுதியுடன் போராடி, முன்னேற்ற அரசியலை முன்னெடுப்பேன் என்று மட்டும் சொல்லிக்கொள்ளமுடியும்!''



source https://www.vikatan.com/government-and-politics/politics/the-dmk-leadership-is-a-little-upset-with-me-durai-vaiko-interview

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக