Ad

வெள்ளி, 29 அக்டோபர், 2021

Halloween Kills: ஸ்லாஷர் படம்தான், ஆனாலும்... மிரட்டுகிறானா இந்த சீரியல் கில்லர்?!

ஹாலிவுட்டில் தென்படும் ஏகப்பட்ட மூவி சீரிஸ்களில் ஸ்லாஷர் ஜானரில் முதன்மையானது ஹாலோவீன். 43 வருடங்களாக திரையில் ரத்தம் தெறிக்கத் தெறிக்க கல்லா கட்டிவரும் அந்த ப்ரான்சைஸின் லேட்டஸ்ட் வரவு 'Halloween Kills'. மொத்தமாய் 12-வது படம் என்றாலும் 2018-ல் வெளியான முந்தின பாகத்தின் சீக்வெல்.

2018-ல் விட்ட அதே இடத்திலிருந்து தொடங்குகிறது இப்படத்தின் கதை. ட்ரெய்லரிலேயே கதை முக்கால்வாசி சொல்லப்பட்டுவிட்டதால் ஸ்பாய்லர்கள் எனப் பெரிதாக எதுவுமில்லை. 40 ஆண்டுகள் கழித்து ஹாடோன்பீல்டுக்கு வரும் சீரியல் கில்லரான மைக்கேல் மேயர்ஸ், தான் முன்பு கொல்லாமல் விட்ட லோரி ஸ்ட்ரோடை கொல்ல முயல்கிறான். இவன் என்றாவது ஒருநாள் வருவான் என 40 ஆண்டுகளாகக் காத்திருக்கும் லோரியும் முன்னேற்பாடுகளுடன் தயாராக இருக்கிறார். இருவருக்கும் நடக்கும் ஆடுபுலி ஆட்டத்தில் இறுதியாக மைக்கேலை பேஸ்மென்ட்டில் வைத்து உயிரோடு எரிக்கிறார் லோரி. இதுதான் முன்கதை.

Halloween Kills

பற்றியெரியும் வீட்டை அணைக்க தீயணைப்பு வண்டிகள் வருவதாகத் தொடங்குகிறது இந்தப் பாகம். அவர்கள் அவசர அவசரமாகத் தீயை அணைக்க, பிழைத்துவிடும் மைக்கேல் மேயர்ஸ் மீண்டும் நகருக்குள் தன் குருதியாட்டத்தைத் தொடர்கிறான். இந்த முறை ஊரே அவனைக் கொன்றொழிக்கக் கிளம்புகிறது. இதனூடே அவன் ஏன் இப்படிக் கொலைவெறி பிடித்து அலைகிறான், அவனை ஏன் யாராலும் கொல்லவே முடியவில்லை என்பதை எல்லாம் சொல்ல முயன்றிருக்கிறார்கள்.

முந்தைய பாகத்தில் லோரியாக நடித்த ஜேமி லீ கோர்ட்டிஸுக்கு இதில் பெரிதாக வேலையில்லை. அவர் மட்டுமல்ல, மைக்கேலைத் தவிர மீதி அனைவருமே கொஞ்ச நேரம் வருகிறார்கள் - கொல்ல முயல்கிறார்கள் - கொல்லப்படுகிறார்கள்.

43 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த முதல் பாகத்தை இயக்கிய ஹாரர் படங்களின் பிதாமகன் ஜான் கார்பென்டர்தான் இந்தப் படத்தின் இசையமைப்பாளர்களில் ஒருவர். இத்தனை ஆண்டுகளாக பயணிப்பதாலோ என்னவோ திரைக்கதையில் மிஸ்ஸாகும் திக் திக் பதற்றத்தை அவரால் இசைவழி கொண்டுவர முடிகிறது.

ஒரு பெரிய இடைவெளிக்குப் பின் 2018-ல் வெளியான ஹாலோவீன் பாகத்திற்கு ஏகபோக வரவேற்பு இருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பு அத்தனையையும் இதில் வீணடித்திருக்கிறார்கள். வழக்கமான ஸ்லாஷர் படங்களுக்கும் இந்தப் படத்திற்கும் இருக்கும் ஒரே வித்தியாசம் - கேமரா ஆங்கிள்களை மாற்றி வைத்து பயமுறுத்த முனைகிறார்கள். மைக்கேலின் கொல்லும் ஸ்டைலும் கொஞ்சம் வேறுபட்டிருக்கிறது.

Halloween Kills

கொஞ்சம்கூட பலவீனத்தைக் காட்டிக்கொள்ளாத மைக்கேல் மேயர்ஸ் கதாபாத்திரத்தை கொஞ்சம் வீக்கான, மற்றவர்களிடம் அடிவாங்கும் ஆளாகக் காட்டியிருப்பது சுவாரஸ்யம். ஆனால் அதற்காக எத்தனை தடவை அடித்தாலும் திரும்ப திரும்ப எழுந்துவந்துகொண்டே இருப்பதெல்லாம் பல தடவை பார்த்து சலித்த மாவு. அதற்கு நியாயம் கற்பிக்க அவர்கள் சொல்லும் காரணமும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாய் இல்லை.

1978-ல் நடப்பதையும் இப்போது நடப்பதையும் இணைக்கும் புள்ளிகள் சிறப்பு. 'மைக்கேலுக்கும் மற்றவர்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை' என்பதை ஒரு மனம்பிறழ்ந்த கதாபாத்திரத்தின் வழி சொல்ல முயன்ற விதமும் நன்றாக இருக்கிறது. ஆனால் அதைத் தவிர திரைக்கதையிலிருக்கும் ஏகப்பட்ட கிளைக்கதைகள் விட்டகுறை தொட்டகுறையாக தொங்குகின்றன. 'இப்ப என்ன? இவங்களையும் கொல்லப்போற. அதானே?' ரேஞ்சுக்குத்தான் இரண்டாம்பாதியை நம்மால் அணுக முடிகிறது.

Halloween Kills
2022-ல் வெளியாகவிருக்கும் அடுத்த பாகத்தில் மொத்தமாய் எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு கிடைக்கும் என இந்தப் பட வெளியீட்டிற்கு முன்னால் சொன்னார் இதன் இயக்குநர் டேவிட் கார்டன் க்ரீன். அதையாவது சொதப்பாமல் சொல்லவேண்டும் என்பதுதான் ஹாலோவீன் ரசிகர்களின் தற்போதைய கோரிக்கையாக இருக்கமுடியும்.


source https://cinema.vikatan.com/hollywood/halloween-kills-yet-another-pointless-slasher-flick-in-the-series

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக