Ad

ஞாயிறு, 31 அக்டோபர், 2021

பிக் பாஸ் - 29: துண்டு செய்தியான சின்னப்பொண்ணு எவிக்ஷன்... போட்டியாளர்கள் யார் யாருக்கு என்ன பட்டம்?

நேற்றைய எபிசோடில் புதிதாக எதுவுமே நிகழவில்லை என்பதுதான் உண்மை. ‘சின்னப்பொண்ணு வெளியேற்றப்பட்டார்’ என்பது மட்டுமே ஒரு சிறிய புதிய செய்தி. இதுவும் முன்பே கசிந்து விட்டதால் ஒரு சலனமும் ஏற்படவில்லை. இன்னமும் கேட்டால் ‘சின்னப்பொண்ணு இன்னமுமா கிளம்பவில்லை?” என்பதுதான் பலரின் மைண்ட்வாய்ஸாக இருந்தது.

பிக் பாஸ் வரலாற்றின்படி அதன் போட்டியாளர்களில் ‘அம்மா’ கேரக்டர்தான் முதலில் பலி தரப்படுவது பொதுவான வழக்கம். அம்மா என்றாலே தியாகம்தானே? அதன்படி சின்னப்பொண்ணு முதல் வாரத்திலேயே சென்றிருக்க வேண்டும். "இன்னாடா அவார்டா தர்றாங்க?” என்பது போல் நாடியா சாங்க் அமைதியான பார்வையில் அனைவரையும் பார்த்துக் கொண்டிருந்ததால் முதலில் அனுப்பப்பட்டார். அடுத்த வாரம் அபிஷேக். இதற்கு காரணமே தேவையில்லை. அவருடைய பெயர் மட்டுமே போதும். ஆனால் அபிஷேக் இல்லாத பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரும்பாலான சுவாரஸ்யம் குறைந்துவிட்டதை இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

பிக் பாஸ் - 29 | சின்னப்பொண்ணு எவிக்ஷன்

“நான் யார் மனதையும் புண்படுத்தி விடக்கூடாது என்று அமைதியாக இருப்பேன். அதை ‘குழப்பம்’ன்னு சொல்லிடறாங்க போல. மத்தபடி என் வேலையை கரெக்ட்டாதான் செய்வேன்” என்று முகமூடி டாஸ்க்கின் விளக்கத்தில் சொன்னார் சின்னப்பொண்ணு. மனதைப் புண்படுத்தாத ஆசாமிகளால் பிக் பாஸிற்கு என்ன லாபம்? ஆகவே சின்னப்பொண்ணு இத்தனை நாள் தாக்குப் பிடித்ததே அதிர்ஷ்டம்.

ஆனால், இந்த நிகழ்ச்சியில் சின்னப்பொண்ணு அம்மா பாடல் பாடிய காட்சிகள் அனைத்தையும் ஒரு முறை ரீவைண்ட் செய்து பாருங்கள். ஆஹா... இத்தனை அருமையான குரல்வளம் கொண்ட பாடகர்கள் மிகக்குறைவு. மேல்ஸ்தாயியில் கூட மிகச் செளகரியமாக பயணம் செய்யும் அற்புதமான குரல் வளத்தைக் கொண்டிருக்கிறார் சின்னப்பொண்ணு.. இந்த வகையில் இவரை ‘பெரிய பொண்ணு’ என்று சொல்லலாம்.

பிக் பாஸ் - 29

அவர் கிளம்பும் சமயத்தில் ‘காட்டுச் சிறுக்கி’ பாடலை பாடியபோது மிக அற்புதமான பகுதியாக இருந்தது. குறிப்பாக ‘மாயமாய் போவாளோ’ என்கிற பகுதிக்கு அவர் தந்த வித்தியாசம் அட்டகாசம். ஒத்திகையில் ரஹ்மான் இதையெல்லாம் மேம்படுத்தி சொல்லித்தரும் காட்சி மனதில் கற்பனையாக ஓடுகிறது. இத்தனை அற்புதமான பாடகியை தமிழ் சினிமா இனிமேலாவது மேலதிகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

வேறென்ன? "கன்ஃபெஷன் ரூமில் சிலர் சில குறிப்பிட்ட வார்த்தைகளை அடிக்கடி சொன்னீர்கள். அது யாரென்றெல்லாம் சொல்ல மாட்டேன். அது ‘உங்க பிரைவஸி’" என்று சொன்ன கமல், அதே சடங்கை இன்னொரு விதமாக சபையில் செய்யச் சொல்வதை எப்படிப் புரிந்து கொள்வது? பிக்பாஸ் நிகழ்ச்சியில் Privacy என்பதற்கு மதிப்பே கிடையாது என்பதுதான் நிதர்சனம்.
பிக் பாஸ் - 29

"கன்பெஷன் ரூமிற்கு வாங்க” என்று முதலில் அழைக்கப்பட்ட போதெல்லாம் பாய்ந்து சென்ற அக்ஷரா, இப்போதோ "சார்... என்னை கடைசில கூப்பிடுங்க. எனக்கு கேம் புரியட்டும்” என்று டபாய்த்தார். “அப்ப தாமரைய கூப்பிடலாமா?” என்று டைமிங்காக கமல் அடித்த வசனம் நன்று. இந்த டாஸ்க் முடிந்ததும் அக்ஷரா வீட்டின் மூலைக்குச் சென்று ‘மூசுமூசுவென்று நிச்சயம் அழப்போகிறார்’ என்று முன்பே நினைத்தேன். அப்படியே ஆயிற்று. நான் கூடுதலாக எதிர்பார்த்தபடி அக்ஷரா அழும் காட்சியை ‘அவார்டு படக்காட்சி’ மாதிரி சில நிமிடங்களுக்கு மெளனமாகக் காட்டி மகிழ்ந்தார் பிக் பாஸ். இப்படி அடிக்கடி மனம் புண்படும் அக்ஷரா ‘நான்சென்ஸ்’ என்று மற்றவர்களைச் சுருக்கென்று சொல்லும் முன்பாக தானும் சற்று யோசிக்க வேண்டும்.

“ஆங்கிலத்தில் பேசாதீர்கள்" என்று அறிவுறுத்தும் பிக்பாஸ், இது போன்ற குறிப்புகளை தமிழில் எழுதி வைத்திருக்கலாம். இதற்கான அர்த்தத்தை கமல் ஏற்கெனவே சொல்லிவிட்டாலும் தாமரை, சின்னப்பொண்ணு, இமான் போன்றவர்கள் ஆங்கில வார்த்தைகள் புரியாமல் மற்றவர்களைக் கேட்டுக் கொண்டிருந்ததைப் பார்க்க சங்கடமாக இருந்தது. தேர்தல் சமயங்களில் கல்வியறிவு இல்லாதவர்கள் மற்றவர்கள் உதவியுடன் வாக்களிப்பதைப் போன்ற நிலைமை. அழைத்துச் செல்பவர்கள் எப்படி வேண்டுமானாலும் அவர்களின் மனதை மாற்றிவிடலாம் அல்லது ஏமாற்றிவிடலாம்.

பிக் பாஸ் - 29

ஒரு தமிழ் நிகழ்ச்சியில் தமிழிற்குத்தான் முதன்மை இடம் தர வேண்டும். ஆனால் இந்த நிகழ்ச்சியில் தமிழில் பேசுவதற்கே ததிங்கினத்தோம் போடும் பலர் இருக்கிறார்கள். எனவே ஆங்கிலம், தமிழ் என்று இரண்டு மொழிகளிலும் எழுதி வைக்கலாம். ‘படிக்கவே தெரியாதவர்கள்’ என்றால் அது வேறு பிரச்னை. (தமிழ் வெறியனாக இதைச் சொல்லவில்லை. மொழி மீது கொண்ட பிரியத்தால் சொல்கிறேன் – கமல் குரலில் வாசித்துக் கொள்ளவும்).

ஒரு பிள்ளைப் பூச்சியை ‘டைனோசர்’ அளவிற்கு வர்ணிக்கும் கெட்ட பழக்கத்தை இமான் இன்னமும் விடவில்லை. ‘தலைக்கனம்’ என்கிற பட்டத்தை இசைக்கு அவர் தந்தது அநியாயம். ‘பாரபட்சம்’ ‘புண்படுத்துதல்’ ஆகிய இரண்டு பட்டங்களையும் பாவனிக்கு தந்து மகிழ்ந்தார் தாமரை.

கசகசவென்று நடந்த இந்தச் சடங்கில் சிலர் துணிச்சலாக இறங்கி அடித்தார்கள். பலர் வழக்கம் போல் பூசி மெழுகினார்கள். ‘கொடுக்க ஆள் இல்லை’ என்று சொல்லி இமானுக்கு ராஜூ தந்தது முறையானதல்ல. ‘Escape from Work’ என்று இமானுக்கு அவர் தந்த பட்டம் மிகப் பொருத்தமானதுதான். ஆனால் அதை வெளிப்படையாக சொல்லாமல் மழுப்பினார். ஏன் என்று தெரியவில்லை. எல்லாவற்றையும் நகைச்சுவைப்பூச்சில் மறைத்துவிட முடியாது. பலர் பட்டத்தை வாங்கிக் கொண்டு திருடனுக்கு தேள் கொட்டியது போல் மெளனமாக அமர்ந்திருக்க “இது நியாயமே இல்லை” என்று வாதாட சிலர் முன்வந்தார்கள்.

பிக் பாஸ் - 29

‘வேலை செய்வதிலிருந்து தப்பித்தல்’ பட்டத்தை இசை தனக்குத் தந்ததை அக்ஷரா ஒப்புக் கொள்ளவில்லை. “அவளுக்கு நான் நிறைய சமைச்சுக் கொடுத்திருக்கேன். நான்சென்ஸ்..." என்று பின்னர் முனகினார். ‘போலி’ என்று அக்ஷராவிற்கு நிரூப் தந்த பட்டம் சர்ச்சையானது. "இதற்காக நான் உன்னை மன்னிக்கவே மாட்டேன்" என்று அக்ஷரா சொன்னதும் அதற்கான விளக்கத்தை சபையிலேயே அளிக்கச் சொல்லி அடம்பிடித்தார் நிரூப். ‘பிறகு சொல்கிறேன்’ என்று அக்ஷரா சொன்னாலும் அவர் ஏற்கவில்லை. பின்னர் பார்த்தால் ‘பலப்பம் திருடிட்டான்... பென்சில் எடுத்துட்டான்’ என்று எல்லாமே எல்கேஜி காரணங்களாக இருந்தன. ‘நண்பர்கள் என்பதால் மதுமிதா ஆதரவு தருகிறார்’ என்கிற வருணின் குற்றச்சாட்டில் ஒரளவிற்கு உண்மை இருந்தது.

பிக் பாஸ் - 29

இந்த விளக்கத்தில் எனக்கு ரொம்பவும் பிடித்தது சிபி சொன்னதுதான். தனது நெருங்கிய நண்பராக இருந்தாலும் வருணின் மீது விமர்சனம் வைக்க அவர் தவறவில்லை. “'என்னப்பா... சத்தமே காணோம்?' என்று வருணிடம் யாராவது விசாரித்துவிட்டால் அடுத்த சில நிமிடத்தில் எதற்காவது உரத்த குரலில் பேசி ‘நானும் இருக்கிறேன்’ என்று நிரூபிக்க முயல்வார்” என்று சிபி சொன்ன விளக்கத்தை நேற்றைய கட்டுரையில்தான் நானும் எழுதியிருந்தேன். சிபியும் அதை வழிமொழிந்தது எனக்கே சற்று ஆச்சரியமாகத்தான் இருந்தது.

"இந்த வீட்டில் எல்லோரும் எனக்கு க்ளோஸ்" என்றார் பாவனி. (ஆஹான்!). இது நமக்கே புதிய செய்திதான். தாமரைக்கும் இவருக்கும் நிகழ்ந்த ஒரு சிறிய புரிதலின்மை சம்பவத்தை இருவரும் பரஸ்பரம் விளக்கிக் கொண்டார்கள். “இது உங்களையே உங்களுக்குப் புரிய வைக்கும் முயற்சிதான். வெளில இருக்கறவங்களுக்காக இல்ல” என்று ஹின்ட் கொடுத்தார் கமல்.
பிக் பாஸ் - 29

இது போன்ற டாஸ்க்கை நம் வீடுகளில் கூட முயன்று பார்க்கலாம் என்று தோன்றுகிறது. சிலர் அற்பமான காரணங்களை முன்னிட்டு வாரக்கணக்கில் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருப்பார்கள். பிறகு விசாரித்துப் பார்த்தால் அது தவறான புரிதலால் என்பதாக இருக்கும். அதை உடனே தெளிவுப்படுத்திக் கொள்ள ஈகோ இடம் தராமல் உள்ளுக்குள்ளேயே புழுங்கிக் கொண்டிருப்பார்கள். பரஸ்பரம் விளக்கப்பட்டவுடன் ‘ச்சே.. இதுக்குப் போயா அப்படிக் கோபப்பட்டோம்” என்று தோன்றிவிடும். எனில் அத்தனை நாள்களும் கோபமாக இருந்தது வீண்தானே?!

‘குழப்பமான மனநிலையில் இருக்கிறார்’ என்று சுருதிக்கு வருண் பட்டம் அளித்தார். விசாரணை இடைவேளையில் வருணை அழைத்த சுருதி, தனக்கு ஏன் அந்தப் பட்டம் பொருத்தமில்லை என்பதைக் கூறி விளக்கம் சொன்னவுடன் இருவரும் ஒருமாதிரியாக சமாதானம் அடைந்து சென்றனர். அவ்வளவுதான் மேட்டர். தாமரையும் இதைக் கடைப்பிடித்தால் பிரச்னை முடிந்து விடும். ராஜூ தனக்கு ‘Fake’ என்று பட்டம் தந்ததற்கு “அந்த காயின் மேட்டர்ல என்ன ஆச்சுன்னா...“ என்று மறுபடியும் விளக்கம் தர ஆரம்பித்தார் பாவனி. "அடிப்பாவி... மத்தவங்களே மறந்து போனா கூட இவ விடமாட்டா போலிருக்கே?!” என்று சுருதியின் மைண்ட் வாய்ஸ் ஓடியிருக்கும். “இந்த வாரத்தோட இதை மறந்துடுவேன்” என்று ராஜூ சொன்னது நன்று.

பிக் பாஸ் - 29
புழுக்கமான அறைக்குள் மெல்லிய காற்று நுழைந்து ஆசுவாசத்தை ஏற்படுத்துவதைப் போல், இமான், ராஜூ, இசை, பிரியங்கா ஆகியோர் திரைப்படப்பாடலின் மெட்டில் கிண்டலான வரிகளை இட்டுக்கட்டி பாடும் பகுதிகள் பார்ப்பதற்கு மனதிற்கு ஆறுதலாக இருக்கின்றன.

ஓர் இடைவேளைக்குப் பின்னர் திரும்பி வந்த கமல் 'ஆடை சுதந்திரம்' என்கிற தலைப்பில் வகுப்பெடுக்க ஆரம்பித்தார். அது தாமரையின் புரிதலின்மையால் வந்த சர்ச்சை. மேலும் கிராமத்து மக்கள், நவநாகரிக ஆடைகளை பிரமிப்புடனும் முகச்சுளிப்புடனும் பார்ப்பது இயல்பானது. ‘நான் சினிமாலதான் இப்படி துணி போட்டு பார்த்திருக்கேன்’ என்று தாமரை சொன்னது ஒரு கிராமத்துப் பெண்மணியின் பிரதிநிதித்துவ குரல். என்றாலும் ‘பெண் சுதந்திரம்’ பற்றி நிகழ்ச்சியில் பதிவு செய்ய வேண்டும் அல்லவா? எனவே இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டார் கமல். “ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே அடக்கம்தான். அது கதை முடிந்த பிறகு செய்யப்படும் ‘அடக்கம்’" என்று கமல் சொன்னது சிறப்பு.

மணிரத்னம் படங்களில் வரும் சைடு கேரக்டர் மாதிரியே உலவிக் கொண்டிருக்கும் அபின்ய்யை அழைத்த கமல், "உங்ககிட்ட இருந்து இன்னமும் நெறய எதிர்பார்க்கறேன்” என்றதும் 'கண்டிப்பா சார். நான் காண்பிச்சது வெறும் டிரைய்லர்தான். இனிதான் மெயின் பிக்சர் ஆரம்பம்’ என்பது போன்ற முகபாவத்தைக் காட்டினார் அபினய். எனில் அவர் பாவனியுடன் இனி ஓவர் டைமில் ரகசியம் பேசப் போகிறார் என்று பொருள்.

பிக் பாஸ் - 29

எவிக்ஷன் பட்டியலில் இருந்த ஏழு நபர்களையும் தனியறைக்கு அழைத்தார் கமல். முடிவுகள் அங்கு அறிவிக்கப்படுமாம். இதுவும் ‘பருத்தி மூட்டை குடோன்’ சமாச்சாரம்தான். சபையிலேயே சொல்லியிருக்கலாம். என்றாலும் நிகழ்ச்சியில் ஒரு சுவாரஸ்யம் வேண்டாமா? பிறகு ஒவ்வொருவரைப் பற்றியும் மறைமுகமான வரிகளால் வர்ணணை செய்ய அவர்களாகப் புரிந்து கொண்டு ‘நன்றி சார்’ என்று சொல்லி வெளியேறினார்கள். ஒவ்வொருவராக வெளியே வந்ததும் ஏதோ உலக சாதனை புரிந்துவிட்ட வரவேற்பு இவர்களுக்கு அளிக்கப்பட்டது.

பிக் பாஸ் - 29

கடைசியில் வெளியே வந்த அபினய்யும் வருணும் ‘இந்தியா ஒன்டே மேட்ச்சில்’ தோற்றுவிட்ட சோகத்துடன் வெளியே வர, பாவம். இந்த வரவேற்பு அவர்களுக்குக் கிடைக்கவில்லை. சின்னப்பொண்ணு எலிமினேஷன் என்கிற விஷயத்தை அப்போதுதான் வீடு புரிந்து கொண்டது. 'என்ன இப்ப? எப்பவோ நடக்க வேண்டிய விஷயம் இது’ என்பதுபோல் மெளனத்துடன் இருந்த அவர்கள், சின்னப்பொண்ணுவும் வெளியே வந்தவுடன், “ஆத்தா... போறியே ஆத்தா…” என்று ஆளாளுக்கு திடீரென்று கண்கலங்கத் துவங்கினார்கள். தனது வெளியேற்றத்தை மிக இயல்பாக ஏற்றுக் கொண்டார் சின்னப்பொண்ணு. மனதளவில் அவர் எப்போதோ தயாராகிவிட்டார் போலிருக்கிறது. என்றாலும் மற்றவர்கள் கட்டிப்பிடித்து அழும்போது ஏதாவது ரியாக்ஷன் தந்தாகணுமே? எனவே அவரும் கலங்கி இந்தச் சடங்கை வெற்றிகரமாக நிறைவேற்றினார்.

தென்றல் வெண்பா ஆயிரம்

புத்தகப் பரிந்துரை பகுதியில் இந்த வாரம் கமல் பரிந்துரை செய்த நூல் ‘தென்றல் வெண்பா ஆயிரம்’. கவியரசு கண்ணதாசன் ‘தென்றல்’ என்கிற இதழிற்கு ஆசிரியராக இருந்த சமயத்தில் வெண்பா போட்டி ஒன்றை அறிவித்தார். கண்ணதாசன் ஈற்றடியை எடுத்துக் கொடுக்க பல்லாயிரக்கணக்கான தமிழ் வாசகர்கள் இதில் ஆர்வமாக கலந்து கொண்டனர். தமிழ்நாட்டின் மூலை முடுக்கில் உள்ள கிராமங்களில் இருந்து கூட பலர் ஆர்வமாக வெண்பாக்களை அனுப்பிக் குவித்தார்கள். அத்தனை தமிழ் ஆர்வமும் உணர்வும் இருந்த சமயம் இது. அந்த வெண்பாக்களில் இருந்து ஆயிரம் செய்யுள்களைத் தேர்வு செய்த தொகுப்புதான் இந்த நூல். (இப்போது இந்தப் போட்டியை அறிவித்தால் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வரும் வெண்பா கேரக்டரைப் பற்றித்தான் ஏராளமான கமெண்ட்டுகள் வரும் என்று தோன்றுகிறது).

Also Read: பிக் பாஸ் - 28 | தாமரை - சுருதி விவகாரத்தை கமல் அணுகிய விதம் சரியா? ராஜூ இப்படிப் பண்ணலாமா?

சின்னப்பொண்ணு அம்மா வெளியில் சென்ற அடுத்த நிமிடமே, அடுத்த வாரம் யாரைப் பலி கொடுக்கலாம் என்கிற உக்கிரமான உரையாடல் ஆங்காங்கே நடைபெற்றது. “சும்மா இருந்து காலத்தை இப்படியே ஓட்டிடலாம். நாமினேஷன்ல இருந்து தப்பிச்சுடலாம். அப்படி ஒரு ஆப்ஷன் இருக்கு. ஆனா வெளில இருக்கறவன் துப்பறானான்னு தெரியாது” என்று வருணிடம் அக்ஷரா சொல்லிக் கொண்டிருக்க “என்னடா... அண்ணனை பார்த்து அப்படி பொசுக்குன்னு ஒரு வார்த்தை சொல்லிட்ட?!” என்கிற வடிவேலு மாதிரி நொந்து போனார் வருண். “தாமரையை நாங்க இதுவரை நாமினேட் பண்ணதேயில்ல. அவங்களை பிடிக்கும். ஆனா…” என்று சுருதியும் பாவனியும் மதுமிதாவிடம் வாக்குமூலம் தந்து கொண்டிருந்தார்கள்.

பிக் பாஸ் - 29

“நீ நாமினேட் பண்ணா பண்ணிக்க... மக்கள் என்னைக் காப்பாத்துவாங்க” என்று இசையிடம் ‘பாட்சா’ ரேஞ்சிற்கு கெத்தாக சொல்லிக் கொண்டிருந்தார் தாமரை. (நான் தனியாள் இல்லைடா. என் பின்னாடி ஒரு கூட்டமே இருக்கு. இது அன்பால சேர்ந்த கூட்டம்!). பூனை தன் குட்டியை கவ்விச் செல்வது போல ‘நாணயத்தை’ எங்கே ஒளித்து வைக்கலாம் என்று பாவனியும் சுருதியும் குசுகுசுவென்று விடியும்வரை ரகசியம் பேசிக் கொண்டிருந்ததோடு எபிசோடு நிறைந்தது. இசையும் இனி தன் நாணயத்தைப் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஆக... நாமினேஷன் சடங்கு, நாணயம் திருடும் திருவிழா என்று இரண்டு முக்கியமான விஷயங்கள் அடுத்த வாரத்தில் இருக்கும். என்னவென்று பார்ப்போம்.


source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/bigg-boss-29-chinna-ponnu-gets-evicted-and-the-contestants-gave-nicknames-to-each-other

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக