Ad

ஞாயிறு, 31 அக்டோபர், 2021

கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை: ``அன்று நாங்கள் தலையிடவில்லை என்றால்..!" - திருமாவளவன் காட்டம்

கடலூர் மாவட்டம், கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு 13 பேர் குற்றவாளிகள் என்று எஸ்.சி., எஸ்.டி., சிறப்பு நீதிமன்றம் கடந்த மாதம் அதிரடி தீர்ப்பளித்திருந்தது. அதனைத்தொடர்ந்து, முருகேசனின் பெற்றோர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை கூட்டியிருந்தது. இந்நிலையில், 'சாதிய ஆணவ படுகொலைகளுக்கு எதிரான பொது உரையாடல் நிகழ்ச்சி' 30.10.2021 அன்று விழுப்புரத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், "இந்த அமர்வின் முக்கிய நோக்கம், ஆணவப்படுகொலை தடுப்பதற்கு என ஒரு சட்டத்தை கொண்டுவர வேண்டும். மாநில அரசே அந்த சட்டத்தை இயற்ற வேண்டும்.

Also Read: கண்ணகி - முருகேசன் ஆணவப் படுகொலை: 13 பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு; 2003-ல் நடந்தது என்ன?

அப்படி ஒரு சட்டத்தை இயற்றுவதற்கான அதிகாரம் மாநில அரசுக்கும் உள்ளது. இந்திய ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் இப்படிப்பட்ட சட்டங்களை இயற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் தீர்ப்புகளை வழங்கி இருக்கிறது. தமிழக உயர் நீதிமன்றமும் அப்படிப்பட்ட வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கின்றது. ஆனாலும், ராஜஸ்தான் மாநிலத்தை தவிர்த்து வேறு எங்கும் இதுவரையில் ஆணவக் கொலைகளை தடுப்பதற்கு என்று சட்டங்கள் இயற்றப்படவில்லை. ஒன்றிய அரசு அப்படி சட்டத்தை இயற்ற போவதாக கூறி கொண்டு நாடகத்தை நடத்திக் கொண்டுள்ளது.

கண்ணகி - முருகேசன்

ஏற்கனவே ஆட்சி செய்த காங்கிரஸ் அரசாக இருந்தாலும் சரி, தற்போது ஆளும் பி.ஜே.பி தலைமையிலான அரசாக இருந்தாலும் சரி... சாதி, மதங்களின் பெயரால் கொடூரமான முறையில் அரங்கேற்றப்படுகின்ற சாதிய படுகொலைகளை தடுப்பதற்கான சட்டங்களை கொண்டு வருவதற்கு எவ்வித முனைப்பும் காட்டவில்லை. அதுதான் அதிர்ச்சியாக இருக்கிறது. ஒன்றிய அரசு விரும்பினால், அவசர சட்டங்களை கொண்டுவந்து நாடாளுமன்ற அவைகளில் ஒப்புதல் பெற்றுக்கொள்வார்கள். எதிர்க்கட்சிகள் அதை எதிர்த்தாலும் தங்களின் பெரும்பான்மையை பயன்படுத்தி நிறைவேற்றிக் கொள்வார்கள். சிஏஏ திருத்தச்சட்டம், முத்தலாக் போன்ற பல சட்டங்களை இதற்கு உதாரணமாக கூறலாம்.

கடந்த அதிமுக ஆட்சியில், தமிழகத்தில் நடைபெறும் ஆணவப் படுகொலைகள் குறித்த விவரங்களை தரவேண்டும் என்று கேட்டபோது உச்ச நீதிமன்றத்தில் இவர்கள் சொன்ன பதில், "தமிழகத்தில் அப்படி எந்த ஆணவ கொலைகளும் நடக்கவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். சாதி அல்லது மத மறுப்புத் திருமணங்கள் நடக்கும் போது தற்கொலைகள் தான் நிகழ்கின்றன அல்லது சந்தேகத்திற்கு இடமான வழக்கு பதிவு செய்யும் வகையிலான மரணங்கள் மட்டுமே தான் நிகழ்கின்றன" என்று அன்றைய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அறிக்கை தந்ததை அறிவோம். தமிழகத்தில் நடக்கும் கொடூரமான ஆணவ படுகொலைகளை மூடி மறைப்பதற்கு ஏன் இவர்கள் முயற்சிக்கிறார்கள்? ஏன் அதை தடுப்பதற்கு சட்டங்களை கொண்டு வரவில்லை? யார் தடுக்கிறார்கள்? ஏன் இவர்கள் தயங்குகிறார்கள்? என்பது தான் கேள்வி. ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள், சாதியவாதிகளின் வாக்கு வங்கிக்கு அச்சப்பட்டு, தங்களுக்கு எதிராக போய்விடுமோ என்ற பயத்திற்கு உள்ளாகி இந்த ஆணவக் கொலைகளை தடுப்பதற்கு என்று சட்டங்களை கொண்டுவர தயங்குகிறார்கள்.

Also Read: கண்ணகி முருகேசன் கொலை வழக்கு: `உங்க கதையை முடிச்சிடறோம்!’ - முருகேசனின் பெற்றோர் மீது தாக்குதல்

இப்படி ஒரு சூழலில் தான் கண்ணகி - முருகேசன் ஆணவ படுகொலை தொடர்பாக தீர்ப்பு வெளியாகியது. ஆணவ படுகொலைக்கு எதிராக சட்டம் வேண்டும் என்று அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும், மனித உரிமை ஆர்வலர்களும் ஒன்றிணைந்து குரலெழுப்ப வேண்டும்.

கூட்ட அரங்கு

'தமிழக அரசே அதை நிறைவேற்று' என்று உரக்கச் சொல்லவேண்டிய நேரம் இது. 'மோடி அரசே அதற்கான சட்டத்தை கொண்டுவா..! சாதி, மத மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கும் அந்த வழக்குகளை நடத்தும் காவல்துறை, நீதிமன்ற ஊழியர்கள், சமூக ஆர்வலர்களுக்கும் பாதுகாப்பு வழங்கு' என்ற கோரிக்கைகள் அடங்கிய விவாதங்கள் தான் தற்போது தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், இங்கு ஒரு சிலரின் தனிப்பட்ட அணுகுமுறையின் காரணமாக கண்ணகி - முருகேசன் வழக்கின் தீர்ப்பை பற்றி யாரும் பேசவே முடியாத ஒரு நிலை, ஒரு தேக்கம், ஒரு தயக்கம் ஏற்பட்டுவிட்டது.

மக்கள் கண்காணிப்பகம், இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையமும் இணைந்து, அந்த தேக்கத்தை உடைத்து பேசுவோம் என்று அழைப்பு விடுத்ததன் பேரில் தான் இன்று இந்த நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த ஆணவ கொலைகள்... உண்மையாகவே அறியாமையால், மூடத்தனத்தால் வந்தவைதான். 'சாதி விட்டு சாதி திருமணம் செய்வதை தடுக்க வேண்டும். அவர்களை படுகொலை செய்ய வேண்டும். தர்மபுரியை எரித்தது போல எரிக்க வேண்டும். என்பதெல்லாம் சாதி மீதுள்ள பாசத்தால் நடப்பதல்ல... தலித் Vs தலித் அல்லாதவர் என பிரிக்க வேண்டும் என்ற யுக்திதான் இது'. அதன் மூலமாக அவர்களால் ஓட்டுக்களை பிரித்துக் கொள்ள முடியும்.

தலித் சமூகத்திற்கு எதிரான வெறுப்பை விதைத்து, பிற சாதி மக்களை சாதி அடிப்படையிலேயே ஒருங்கிணைத்து அரசியல் ஆதாயம் தேடவேண்டும் என்ற சுயநலம். அது தான் சோசியல் இன்ஜினியரிங்.

Also Read: உசுரை கையில பிடிச்சுக்கிட்டிருக்கோம்! - முருகேசன் பெற்றோரைத் தாக்கியது வி.சி.க-வினரா?

தர்மபுரி தொகுதியில் தன் பிள்ளையை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றால், தன் சமூக வாக்குகளுடன் சேர்த்து பிற சமூகத்தின் ஓட்டுகளும் வேண்டும் என்பதற்காக இப்படியான ஒரு அரசியல் செய்து அன்று ஓட்டை வாங்கினார்கள், அதுதான் சோசியல் இன்ஜினியரிங். அடுத்த தேர்தலில் அது எடுபடவில்லை. 'திவ்யா-இளவரசன் திருமணத்தில் இந்த வன்முறை நடக்கவில்லை, நம்மால் ஆதாயம் தேடிக் கொள்கிறார்கள்' என்று மக்கள் புரிந்து கொண்டார்கள்.

கூட்ட அரங்கம்

நான் அரசியலுக்கு வந்த காலம் முதல் பார்க்கிறேன், பாஜக தமிழகத்தில் காலூன்ற படாத பாடுபடுகிறது. சமூகநீதி சிந்தனையாளர்கள் இங்கு அதிகம் உள்ளனர். அதனால்தான் இங்கு பாஜக-வின் திட்டம் எடுபடவில்லை. அதிமுகவை வைத்து 4 இடங்களை பிடித்துவிட்டார்கள். அதிமுக-வையே அழிக்க பார்த்தார்கள். பாம்பின் வாயில் தவளையை போல இன்றும் பாஜக பிடியிலே அதிமுக சிக்கியிருக்கிறது. பாமக-விலிருந்து பிரிந்து பலர் பாஜக நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். கூட்டணி கட்சிகளை 'சுவாகா' செய்வதுதான் பாஜகவின் தந்திரம். விசிக மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், பாஜக இங்கு கூடுதலாக கொட்டமடித்து இருக்கும். சாதிக் கலப்பு ஏற்படக்கூடாது என்பது சனாதனத்தின் முக்கிய கூறுகளில் ஒன்று. அதன்படி நடப்பதுதான் ஆணவக்கொலை. இந்த 21ம் நூற்றாண்டிலும் அது காட்டுமிராண்டித்தனமாக நடைபெற்றுக் கொண்டுள்ளது.

கண்ணகி- முருகேசன் ஆணவ படுகொலை நடந்த சமயத்தில், அதை தற்கொலை என்று பூசி முழுக பார்த்தார்கள். ஆனால், இவ்வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றக்கோரி சென்னையிலேயே பத்திரிகையாளர்கள் முன்பு போட்டுடைத்த இயக்கம் தான் விசிக. அவர்களை சமரசமாக விடாமல் தடுத்த இயக்கம் விசிக. அன்று நாங்கள் தலையிடவில்லை என்றால்... அதனை தற்கொலை வழக்காக மாற்றி, ஒன்றுமில்லாமல் செய்திருப்பார்கள். 2000-மாவது ஆண்டுகளில் அன்புமணி என்ற நபர் எங்கிருந்தார் என்றே தெரியாது. அவரிடம் நான் பேசியதாகவும், "அவர் பெரிய தொகையை தருவார் அதை வாங்கிக்கோங்க" என்று நான் சொன்னதாகவும் கூறி எதிராக திருப்பப்பார்த்தார்கள்.

Also Read: ``இல்லம் தேடி கல்வித் திட்டம் என்பது வரவேற்க வேண்டிய விஷயம்"- பாஜக தலைவர் அண்ணாமலை!

போலிகளை அம்பலப்படுத்தும் இயக்கமாகவும், சமூகநீதி பாதுகாப்பு அரணாகவும் விசிக இருக்கிறது. அதனால் விசிக குறிவைக்கப்பட்டிருக்கிறது. பல வழிகளில் பலர் ஊடுருவல் செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். தமிழகத்தில் ஆணவப்படுகொலை தடுப்புச் சட்டத்தை இயற்ற இணைந்து குரல் கொடுப்போம். கூட்டணி கட்சி என்ற முறையில் தமிழக முதல்வரிடம் கவனத்திற்கு கொண்டு செல்வோம்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/thirumavalavans-speech-at-villupuram-regarding-caste-killings

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக