Ad

சனி, 30 அக்டோபர், 2021

திருச்சி ஊர்ப்பெருமை: நகரின் நடுவே அழகிய சூழலும் அமைதியும் - நடைப்பயிற்சிக்கு ஏற்ற இப்ராஹிம் பூங்கா!

திருச்சி மக்களின் பிரதான பொழுதுபோக்கு இடங்களில் மிக முக்கிய இடம் பிடித்திருப்பது இப்ராஹிம் பூங்கா. மாநகராட்சியின் உள்ளே இருக்கும் பசுமை நிறைந்த இந்த இடம்தான், மாநகரின் வெயிலிலிருந்து தப்பித்து ஆசுவாசப்படுத்திக்கொள்ள நினைக்கும் பலரும் தேர்ந்தெடுக்கும் முதல் இடம்.
இப்ராஹிம் பூங்கா

பல பெரிய மரங்கள், செடிகள், குழந்தைகள் விளையாடுவதற்கு என விளையாட்டு உபகரணங்கள்... என மக்கள் தங்களின் நேரத்தை மகிழ்ச்சியாகக் கழிக்கக்கூடிய இந்த இப்ராஹிம் பூங்காவிற்குப் பின்புறத்தில் பெரும் வரலாறும் இருக்கிறது என்கிறார்கள். ஒரு மாலை நேரத்தில் வண்டியை எடுத்துக் கொண்டு பூங்காவிற்கு ஒரு விசிட் அடித்தோம்.

Also Read: திருச்சி ஹேங்கவுட்: அலை தவழும் கோடியக்கரை, அற்புத அலையாத்திக் காடுகள் - முத்துக்குடா சுற்றுலா!

சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்திலும், மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது இந்த இப்ராஹிம் பூங்கா. பெரிய கடைவீதி பேருந்து நிறுத்தத்தில் உள்ள கல்யாணி கவரிங்கிற்கு எதிரில் அமைந்திருக்கிறது இந்த இப்ராஹிம் பூங்கா. பூங்காவின் வெளியிலிருந்து பார்க்கும்போது நாம் அனைவருக்கும் தோணக்கூடிய ஒரே விஷயம் இந்தப் பூங்காவை எங்கயோ பார்த்திருக்கோம் என்பதுதான்.

இப்ராஹிம் பூங்கா

ஆம், நிறையத் திரைப்படங்களில் இந்தப் பூங்காவைக் காட்டியிருப்பார்கள். நாமும் அப்படி வியந்து கொண்டே பூங்காவின் வாயிலில் டிக்கெட் எடுத்து கொண்டு உள்ளே சென்றோம்.

மலர்கள்

முதலில் இப்ராஹிம் பூங்கா உருவானதிற்குப் பின்னால் இருக்கும் வரலாற்றுச் சிறப்பை பார்த்து விடுவோம். 1928-ம் ஆண்டு முதல், 1931-ம் ஆண்டு வரை திருச்சி நகராட்சியின் தலைவராகவும், துணைத் தலைவராகவும் பதவி வகித்து வந்தவர் எம்.கே.எம்.முகமத் இப்ராஹிம் ராவுத்தர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரம்தான் இவருக்குச் சொந்த ஊர் என்றாலும், இவர்களது குடும்பம் திருச்சிக்குக் இடம்பெயர்ந்துள்ளனர். இவர் அடிப்படையிலேயே திருச்சியில் உள்ள செல்வாக்கு மிக்கவர்களில் ஒருவர்; மக்களுக்குத் தன்னால் இயன்ற அளவிற்கு நிறைய நலத்திட்ட உதவிகளைச் செய்து வந்தவர்.

இப்ராஹிம் பூங்கா

இதனாலேயே மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவரானார். அதனையடுத்து தூய்மைப் பணியாளர்களுக்கு எல்லாம் தன்னுடைய சொந்த பணத்தில் சம்பளம் கொடுப்பது, அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்வது என இருந்தவர், மேலபுலிவார்டு பகுதியில் உள்ள அவரின் இடத்தை பொதுமக்களுக்கு ஏற்ற வகையில் மாற்றிட வேண்டும் என தானமாக அளித்துள்ளார்.

அந்த இடம்தான் தற்போதைய இப்ராஹிம் பூங்கா. இப்படியான பெரும் வள்ளலின் இடம், தற்போதும் அவரைத்தாங்கி நிற்கிறது என அறிந்துகொண்டு பூங்காவினில் நுழைந்தோம். வயதானவர்கள் முதல் இளம் வயதில் உள்ள அனைவரும் அந்த மாலை வேலையை அங்கு ரசித்துக் கொண்டிருந்தனர்.
இப்ராஹிம் பூங்கா

அடர் மரங்கள், செடிகள், அவற்றில் பூத்துக் குலுங்கும் பூக்கள் என நிறைந்த அந்தப் பூங்கா, ஒரு வனம் போல் நமக்குக் காட்சியளித்தது. அப்போதுதான் புரிந்தது மக்களின் பிரதான பொழுதுபோக்கு இடங்களில் இந்தப் பூங்கா ஏன் இடம்பிடிக்கிறது என்று!

கூடவே குழந்தைகளின் விளையாட்டிற்கான அனைத்தும் இங்கு இருப்பதால், குழந்தைகளை அழைத்துக் கொண்டு பெற்றோர்கள் வந்திருந்தனர். நாமும் அந்த இயற்கைச் சூழலில் மயங்கியிருக்க நேரம் செல்வதே தெரியாமல் அந்தப் பூங்காவைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

இப்ராஹிம் பூங்கா

தொடர்ந்து இவ்வளவு பசுமையாக இருப்பதால் புகைப்படம் எடுப்பதற்கும், நடைப்பயிற்சி மேற்கொள்ளவும், நண்பர்கள், குழந்தைகளுடன் விளையாடவும், சுத்தமான காற்றைப் பெறவும் இங்குத் தவறாமல் வந்துவிடுகின்றனர். மக்களின் கூட்டம் பரவலாக இருந்தாலும், நகரின் மையத்திலிருந்தாலும் அப்படியொரு அமைதி இங்கே நிலவுகிறது. கண்டிப்பாக இங்கு வரும் அனைவருக்கும் மனது லேசாகிச் செல்வதை உணரமுடியும்.

Also Read: திருச்சி – ஊறும் வரலாறு 16: `தாகம் தீர்த்த தலைவர்' பி.ரத்தினவேல்!

இப்படி ரசித்துக் கொண்டே அங்கு தன் நண்பர்களுடன் வந்திருந்த ஜனநாதனிடம் பேசினோம், ”எனக்கு 65 வயது ஆகிறது. நான் ஓய்வு பெற்ற ஆசிரியர். இங்கு அருகில்தான் என் வீடு இருப்பதால் எப்பொழுது நேரம் கிடைத்தாலும் இங்கு வந்துவிடுவேன்.

இப்ராஹிம் பூங்கா

நகர் பக்கத்திலேயே இருப்பதால் எப்போதும் மக்கள் கூட்டமும், வாகன இரைச்சலும் என ரொம்பவே பரபரப்பாக இருக்கும். அப்படியான சூழலில் இந்தப் பூங்காதான் எனக்கான சந்தோஷமான இடம். ரொம்பவே அமைதியா என் வயதை ஒத்தவர்களுடன் நேரத்தைக் கடத்திட்டு போறதுல அப்படியான சுகம் இருக்கும். எங்களை மாதிரி இருக்குற எல்லாருக்கும் ரொம்பவே பிடிச்ச இடம் இந்தப் பூங்கா தாங்க!" என்றார்.

இப்ராஹிம் பூங்கா
தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள, நடைப்பயிற்சி மேற்கொள்ள, பொழுதைக் கழிக்க விரும்பும் திருச்சி மக்கள், இப்ராஹிம் பூங்காவிற்கு வாருங்கள்.


source https://www.vikatan.com/lifestyle/miscellaneous/trichy-iconic-places-ibrahim-park-is-well-suited-for-morning-walks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக